கொழும்பு: கடலை நிரப்பி உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம் (Colombo Port City) உருவாக்கப்படுவதினூடாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகள் உருவாவதாக துறைமுக அதிகார சபை தெரிவித்தது.
இலங்கையை தென்னாசியாவில் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றும் இந்த திட்டம் 8 வருட காலத்தில் பூர்த்தி செய்யப்பட இருப்பதோடு நிர்மாணப்பணிகளில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
கடலை நிரப்பி 233 ஹெக்டெயரில் உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகள் கடந்த வாரம் இலங்கை மற்றும் சீன ஜனாதிபதிகளால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. இதில் 170 ஹெக்டெயர் அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட இருப்பதோடு 63 ஹெக்டெயர் நிலப்பகுதி பொது வசதிகளை மேம்படுத்துவதற்கும், பூங்கா, நீர் மார்க்கம் என்பன அமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இலங்கையில் பாரிய நேரடி முதலீட்டுடன் உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு 1,337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முதற்தடவையாகவே கடலை நிரப்பி நகரம் உருவாக்கப்பட இருப்பதோடு இதில் 5, 6, 7 நட்சத்திர ஹோட்டல்கள், செயற்கையான கடற்கரை, போர் மூலா – 1 ஓட்டப்பாதை, சொகுசு சந்தைக் கட்டடம், சிறிய கொல்ப் மைதானம், நீர் விளையாட்டரங்கு, சிறு பூங்காக்கள், சொகுசு வீட்டுத்திட்டங்கள் என்பன அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
துறைமுக நகர முதலாம் கட்டம் 3 வருட காலத்தில் பூர்த்தி செய்யப்பட இருப்பதோடு இரண்டாம் கட்டம் 5 வருட காலத்தில் நிறைவு செய்யப்படுகிறது. நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர் சுற்றுலா, போக்குவரத்து, விளையாட்டு ஹோட்டல் துறைகளில் நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகள் ஒரு இலட்சத்துக்கு மேல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முத லீடு செய்ய இணக்கம் தெரிவித்துள்ள னர். வெளிநாட்டு முதலீடுகளினூடாகவும் அதிக தொழில் வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைனா கொமுயுனிகேசன் கனஸ்ட்ரக்சன் கம்பனி நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க உள்ளதோடு இது தொடர்பில் இரு நாட்டுக்குமிடையில் ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்டுள்ளது.
Published by

Leave a comment