ஊவா தேர்தல்: முஸ்லிம் கட்சிகள் முழுமையாக நிராகரிக்கப்பட்டதன் காரணம் என்ன?

hakeem rishadகொழும்பு: ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் கூட்டாக போட்டியிட்டிருந்தும், முஸ்லிம் வாக்காளர்கள் அந்தக் கூட்டணியை நிராகரித்துள்ளதாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

2009ம் ஆண்டு ஊவா மாகாண சபையில் இழந்த முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் ஜனநாயக ஐக்கிய முன்னனியின் இரட்டை இலை சின்னத்தில் இரு கட்சிகளும் தமது வேட்பாளர்களை கூட்டாக நிறுத்தியிருந்தன.

37,000 முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட பதுளை மாவட்டத்தில் சுமார் 5,000 வாக்குகளையே இக்கட்சிகளால் பெற முடிந்தது. அதனால் அவர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமும் கிடைக்கவில்லை.

கணிசமான முஸ்லிம் வாக்குகள் பிரதான எதிர்கட்சியான ஐ.தே. கட்சிக்கு கிடைத்திருந்தாலும், அந்தக் கட்சியில் போட்டியிட்ட இரு முஸ்லிம் வேட்பாளர்களும் தெரிவாகவில்லை.

பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி முஸ்லிம் தனது வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கவில்லை.

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக இருந்தாலும் இரு முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலான பிரச்சாரங்களை தேர்தலின்போது முன்னெடுத்தாலும், எதிர்பார்த்த வாக்குகளை பெற முடியவில்லை.

hakeem rishad

இது தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான எம். ரி.ஹசன் அலி, அரசாங்கத்தின் ஆதரவு வழங்கும் கட்சிகள் என்ற காரணத்தினாலே தங்களுக்கு எதிர்பார்த்தவாறு முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்றார்.

பதுளை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் உலமா சபைகள் உட்பட பல்வேரு தரப்பினரின் வேண்டுகோளின் பேரில் தான் இரு கட்சிகளும் பொதுச் சின்னத்தில் போட்டியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரங்களுக்கு வேட்பாளர்கள் சென்றிருந்தபோது வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள் என்ற சந்தேகம் முஸ்லிம் வாக்காளர்களிடம் காணப்பட்டதாக ஹசன் அலி கூறினார்.

இந்த சந்தேகத்தை நீக்கும் வகையில் அரசாங்கத்தை ஆதரிக்க மாட்டோம் என அனைத்து வேட்பாளர்களும் உலமாக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்திருந்தும் வாக்காளர்கள் அதனை நம்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் கைப்பிள்ளையாகச் செயற்படும் அமைச்சர்களான ரிஷாத் மற்றும் ஹகீம் ஆகியோர், அரசாங்கத்தை எதிர்த்து ஐ.தே.க. செல்லவிருக்கும் முஸ்லிம் வாக்குகளைத் திசைதிருப்பும் இந்த தந்திர நாடகத்துக்கு சோரம் போனதாலயே முஸ்லிம்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமும் பெறமுடியாமல் போனதாக பதுளை முஸ்லிம்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Published by

One response to “ஊவா தேர்தல்: முஸ்லிம் கட்சிகள் முழுமையாக நிராகரிக்கப்பட்டதன் காரணம் என்ன?”

  1. Uva Muslims never accepted Eastern Political Leadership

Leave a reply to mohmedrislaam Cancel reply