யாழ்ப்பாணம்: வடக்கின் அபிவிருத்தியின் மற்றுமொரு திட்டமாகவும் 24 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையினை முழுமைப்படுத்தும் வகையிலுமான பரீட்சார்த்த புகையிரத சேவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
பளை புகையிரத நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலையத்துக்கான பரீட்சார்த்த சேவை 22-09-2014 அன்று இடம்பெற்றது.
பளை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த யாழ்தேவி புகையிரதத்தை அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தனர்.
வீதியின் இருமருங்கிலும் கூடியிருந்த மக்களும் கைஅசைத்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன் தமது கைத்தொலைபேசிகளின் ஊடாக புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டதை காணமுடிந்தது.
பளையிலிருந்து ஆரம்பித்த இப்புகையிரதம் எழுதுமட்டுவாழ், மிருசுவில், கொடிகாமம், மீசாலை, சங்கத்தானை, சாவகச்சேரி, நாவற்குழி ஊடாக யாழ்.பிரதான நிலையத்தை வந்தடைந்தது.
இதனிடையே கொடிகாமம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புகையிரத தரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் மற்றும் ஆளுநர் உள்ளிட்ட அதிதிகள் பார்வையிட்டனர்.
அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தியின் மற்றுமொரு செயற்திட்டமாக யாழ்;ப்பாணத்திற்கான புகையிரத சேவையும் தற்போது இணைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தமாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத பாதை புனரமைப்பு நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் வவுனியா ஒமந்தையிலிருந்து கிளிநொச்சி, கிளிநொச்சியிலிருந்து பளை, பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான புகையிரதப் பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான பாதையின் புனரமைப்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன், இந்தியாவின் ஜகோன் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் எஸ்.எல்.குப்தா, பளை காங்கேசன்துறைக்கான திட்டப்பணிப்பாளரும், பொறியியலாளருமான பிரேமகுமார், புகையிரத சேவை மேலதிகாரி ஆரியரட்ன உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.
Published by





Leave a comment