றியாத்: சவுதி அரேபியாவில் அதிகரித்துவரும் சட்டவிரோதமாக ஆட்களை வேலைக்கமர்த்தல் செயற்பாடுகளுக்கு எதிராக சவுதி அரேபியாவின் தொழில் அமைச்சு கடுமையான சட்டங்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
5 பேருக்கும் குறைவான பணியாளர்களுள்ள சிறு நிறுவனங்களிலிருந்து பாரிய நிறுவனங்கள் வரைக்கும் சகலருக்கும் இச்சட்டம் சமமானதாக இருக்கும். இச்சட்டம் அடுத்தமாதம் அக்டோபர் 25ம் திகதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
சட்டவிரோதமாக சவுதியில் தங்கியிருப்போர், வேறு கொம்பனியில் இருந்து அனுமதியில்லாமல் மற்றுமொரு கொம்பனி அல்லது நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளல் போன்ற சட்டவிரோதச் செயல்களை சகல நிறுவனங்களும் இம்மாதத்திற்குள் கைவிட வேண்டும் எனவும் சவுதியின் தொழிலாளர் அமைச்சு அறிவித்திருக்கிறது.
இவ்வாறு சட்டவிரோதமாக ஆட்களை வேலைக்கமர்த்தும் நிறுவனங்களிடமிருந்து 3,000-10,000 சவுதி றியால்கள் வரை அபராதமாக விதிக்கப்படுவதுடன், குறித்த நிறுவனங்களின் அனுமதிப்பத்திரம் 3 வருடங்களுக்கு இடைநிறுத்தப்படும் எனவும் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டிருக்கின்றது.
வீசா இல்லாத நபர்களை வேலைக்கமர்த்தும் பட்சத்தில், சட்டமாக பிற தொழிலாளர்களை பெறுவதற்கான வீசா அனுமதியும் இரத்துச் செய்யப்படும் எனவும், குறிப்பாக வெளிநாட்டுப் பெண்களை பலர் இவ்வாறு பணிக்கு அமர்த்தி வருவதாகவும், இவ்வாறான சட்டவிரோத பணியாளர்களை வேலைக்கமர்த்துவதால் மொத்த தேசிய வருமானத்தைக் கணிப்பதிலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வீசா எண்ணிக்கையில் மாற்றங்களும், அந்நியச் செலாவனி கணிப்பில் பாரிய மாற்றங்களும் ஏற்படுவதாக சவுதி தொழிலாளர் அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
‘சவுதி நாட்டவர்கள் பலர் சொந்தத் தொழிலாக சிறிய நிறுவனங்களையும், கடைகளையும் நடாத்திவருவதால் இவர்களிடம் மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்ல சவுதி நாட்டவர்கள் விரும்புவதில்லை. இதனால் கைவிடப்பட்டு, தொழிலாளர் முகாம்களிலும், நண்பர்களின் வீடுகளிலும் வீசா இல்லாமல் ஒளிந்துவாழும் வெளிநாட்டினர்களை சிறு சம்பளத்துக்கு சவுதிகள் பணிக்கு அமர்த்துகின்றனர்’ என்பதாக சவுதி இளைஞர் தொழில் அமையத்தின் உறுப்பினர் சஆத் அல் அஸ்மரி கூறுகிறார்.
Published by


Leave a comment