34 உறுப்பினர்களை தெரிவு செய்ய 617 வேட்பாளர்கள் போட்டி
கொழும்பு: ஊவா மாகாணசபைக்கான வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. நேர காலத்துக்குச் சென்று வாக்குகளைப் பதிவுசெய்வதுடன், வாக்களித்த வாக்காளர்கள் கூட்டமாகக் கூடி நிற்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல்களுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்றையதினமே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உட்பட 12000 பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆளடையாளங் களை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்துச்சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் பதுளை மற்றும் மொனராகலை மாவ ட்ட வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரண்டு போனஸ் ஆசனங்கள் உட்பட 34 ஆசனங்களைக் கொண்ட ஊவா மாகாணசபைக்கு 617 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரு மாவட்டங்களிலும் 9 இலட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இங்கு 835 வாக்குச்சாவடிகளும் ஐந்து வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மஹியங்கனை, வியாலுவ, பசறை, பதுளை, ஹாலிஎல, ஊவா பரணகம, வெலிமட, பண்டாரவளை, ஹம்புத்தளை, பிபிலை, மொனராகலை, வெல்லவாய ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 12,500 தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு இரு மாவட்டங்களிலும் விசேட அதிரடிப்படையினர் உட்பட 12,000ற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
835 வாக்களிப்பு நிலையங்களிலும் தலா நால்வர் வீதம் பொலிஸார் ரி56ரக துப்பாக்கிகளுடன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீதியான சுதந்திரமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு மாவட்டங்களிலும் 232 நடமாடும் பொலிஸ் சேவைகள் மேற்கொள்ளப்படவிருப்பதுடன், 57 வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 11 கலகமடக்கும் பொலிஸ் குழுக்கள் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சீருடை அணிந்த 12000ற்கும் அதிகமான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு மேலதிகமாக சிவில் உடைகளிலும் பொலிஸார் ஆங்காக்கே பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் தினமான இன்றும் அதன் பின்னர் ஒரு வாரத்துக்கும் ஊர்வலங்கள், பேரணிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கெண்ணும் ஐந்து நிலையங்களைச் சுற்றியும் தலா 500 விசேட அதிரடிப்படையினர் வீதம் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். தெரிவத்தாட்சி அலுவலகரின் அனுமதியின்றி எவரும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு நுழைய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்குச் சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் எந்தவொரு வேட்பாளரும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவோ, வாக்காளரிடம் பிரசாரங்களை முன்னெடுக்கவோ முடியாது.
கடுமையான தண்டனை
தேர்தல் விதி மீறல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யுமாறு தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளோம். தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக பொலிஸால் பிணை வழங்க முடியாதபடி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.
அதேபோல தேர்தல் விதி மீறல்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகனச் சாரதிக்கு மாத்திரமன்றி வாகன உரிமையாளருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குறித்த வாகனம் ஒப்படைக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப் பிட்டார்.
கள்ளமாக வாக்குப் பதிவுகளில் ஈடுபடுபவர்களை வாக்குச் சாவடியிலுள்ள பொலிஸார் உடனடியாக கைதுசெய்து ரோந்துப் பணியிலுள்ள பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒத்துழைப்பு அவசியம்
ஊவா மாகாணசபைத் தேர்தலை நீதியாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு வேட்பாளர்களின் ஒத்துழைப்பும் அவசியம். வாக்குச் சாவடிகளுக்கு கூட்டமாகச் செல்வதைத் தவிர்க்குமாறும், பேரணிகள் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Published by
![ballot_box1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/ballot_box11.jpg?w=150&h=112)
Leave a comment