– ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிபதுளை: மக்களின் குரல்களாக ஒலிக்கும் ஊடகங்களை அச்சுறுத்தி அவர்களின் குரல் வளைகளை நசுக்க முயலும் அமைச்சர் றிசாட்டின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக நல்லாட்சிக்கான தேசியமுன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊவாமாகாணசபைத் தேர்தல் பிரச்சாரங்களுக்கான காலம் நிறைவடைந்திருக்கின்ற நிலையில் வழமைபோன்று தமது சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகளை ஆழும் தரப்பு அரசியல் வாதிகள் பலரும் செய்யத் தொடங்கியிருக்கின்றார்கள்.
அந்தவகையில் அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளாக இருந்துகொண்டு தேர்தல் காலங்களில் மாத்திரம் தம்மை தனித்தரப்பாக அடையாளப்படுத்தி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று தமது எஜமானர்களிடம் தாரைவார்க்கும் அரசியல் வியாபாரத்தை மேற்கொண்டுவரும் அமைச்சர் றிசாட்டின் அணியினர் சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் பலவற்றிலும் ஈடுபட்டிருப்பதாக எமக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்திருந்தன.
இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை பதுளை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றிலும் இவர்கள் ஈடுபட்டு வருவதாக எமக்குப் பலரும் அறிவித்திருந்தனர்.
குறிப்பாக, முஸ்லிம் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று ஒரு குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபா அளவில் பணம் தருவதாகப் பேரம்பேசி புனித குர்ஆனிலே சத்தியம் வாங்கி தமக்கு வாக்களிக்குமாறு இவர்கள் மக்களை வற்புறுத்தி வருவதாக தெரியவந்தது.
அப்பட்டமான இந்த தேர்தல் சட்ட விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி மக்களுக்கு விழிப்பூட்டும் நோக்கில் எமது வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் ஐயூப் அவர்கள் நேற்றிரவு ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தார்.
அவ்வறிக்கையினை சில ஊடகங்கள் உடனடியாகப் பிரசுரித்தும் இருந்தன.
அதனை அறிந்துகொண்ட அமைச்சர் றிசாட், குறித்த ஊடக நிர்வாகிகளை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த செய்தியினை உடனடியாக அகற்றுமாறும் இல்லாவிட்டால் மோசமான விழைவுகளை சந்திக்க வேண்டிவரும் எனவும் மிரட்டியிருக்கிறார். மேலும், இதனை செய்யாவிட்டால் ஒரு SMS மூலமாக குறித்த இணைய தளங்களை தம்மால் தடை செய்ய முடியும் எனவும் அந்த ஊடக நிர்வாகிகளை அச்சுறுத்தியும் இருக்கிறார். இதனால் அச்சமுற்ற அவ்வூடக நிர்வாகிகள் உடனடியாக அந்த செய்தியை அகற்றியிருக்கிறார்கள்.
மக்களின் குரல்களாக ஒலிக்கும் ஊடகங்களை அச்சுறுத்தி தமது அரசியல் அதிகாரத்தின் மூலம் ஊடகங்களின் குரல் வளைகளை நசுக்க முயலும் அமைச்சர் ரிசாட்டின் நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசியமுன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களால் வழங்கப்பட்ட அதிகாரங்களை அந்த மக்களுக்கு எதிராகவே பாவிக்க முனையும் இவரைப்போன்ற அரசியல் வாதிகளின் நடவடிக்கைகள் மிலேச்சத்தனமானதாகும்.
இது போன்ற நடவடிக்கைகளை ஜனநாயக விழுமியங்களையும் சட்டத்தையும் மதிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமது அரசியல் பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக எமது மக்கள் மீதும் ஊடகங்கள் மீதும் வன்முறைகளைப் பிரயோகிக்கின்ற நடவடிக்கைகளை இவரைப்போன்ற அரசியல் வாதிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, தேர்தல் காலங்களில் தமக்கெதிரான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டவர்களை அச்சுறுத்துவதும் அவர்களின் வாக்குகளை பலாத்காரமாக பெற்றுக்கொள்ள முனைவதும் அமைச்சர் றிசாட் அணியினருக்கு புதிய விடயமல்ல. கடந்த வடமாகாண சபை தேர்தல் தினத்தன்றும் கூட அமைச்சரோடு வருகை தந்திருந்த குண்டர்கள் சிலர் எமது முன்னணியின் செயற்குழு உறுப்பினரை வாக்குச் சாவடி ஒன்றின் முன்னால் வைத்துத் தாக்கிய சம்பவம் இங்கு நினைவு படுத்தப்படவேண்டிய ஒன்றாகும். குறித்த வாக்குச் சாவடியில் தேர்தல் மோசடியில் ஈடுபட முனைந்த அமைச்சர் றிசாட்டின் தொண்டர்களின் நடவடிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் சுட்டிக்காட்ட முனைந்த தருணத்திலேயே எமது உறுப்பினர் தாக்கப்பட்டிருந்தார்.
எனவே, பொதுமக்களையும் ஊடகங்களையும் அச்சுறுத்துகின்ற நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசியமுன்னணி வன்மையாகக் கண்டிப்பதோடு எதிர்வரும் காலங்களிலாவது சட்டத்தையும் ஒழுங்கையும் ஊடக தர்மத்தினையும் மதித்து செயற்படுவதற்கு அமைச்சர் றிசாட் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றது.
Published by

Leave a comment