காதுகளே இவன் கரங்களுக்கு
கட்டளை இடுவதால்
வார்த்தை ஜாலங்களுக்குள்
வாக்கை தொலைப்பவன்மூளையை இவன்
மூடியே வைப்பதால்
மூடர்களால்கூட இவனுக்கு
தலைவனாயிருக்க முடிகிறது.என்கிறது ஒரு கவிதை.
இது நமது சமகால அரசியல் நிலவரத்தில் நமது தேசத்திலே ஒரு வாக்காளனின் மனோ நிலையினை அப்பட்டமாக எடுத்துக் காட்டும் வரிகளாகும். இலங்கை மக்களைப் பொறுத்த அளவில் அதுவும் குறிப்பாக சிங்கள மற்றும் முஸ்லிம் சமுகத்தைப் பொறுத்த அளவில் ‘பொதுமக்கள் அரசியல் மயப்படுவதற்கு பதிலாக அரசியல் வயப்பட்டிருக்கிறார்கள்’.
குஷிப்படுத்தப் படுவதை (Entertain) விரும்புபவர்களாகவும் அதற்கு கைமாறாக தமது வாக்குகளை அளிக்ககக் கூடியவர்களாகவும் இருப்பதை கடந்த கால வரலாறுகள் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இதுதான் சிங்கள சமுகத்தின் அரசியல் மேடைகளை இசைக் கச்சேரி மேடைகளாக மாற்றி விட்டுருக்கிறது. திரைப்பட கலைஞர்கள், நாடக கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் கிரிகட் வீரர்கள் என பொதுப் படையான பிரபலங்களால் ((Entertainers) நிறைந்த தாகவும் ஆக்கி விட்டிருக்கிறது. இந்த அரசியல் வாய்ப்பாடு தமிழ் சமுகத்தில் பெரிதாக எடுபடாவிட்டாலும் சிங்கள சமுகத்தில் மிகச் சிறந்த பெறுபேற்றினை அரசியல் வாதிகளுக்கு பெற்றுக் கொடுத்திருகிறது.
முஸ்லிம் சமுகத்தில் இன்னொரு விதமான அரசியல் வாய்ப்பாடு செயற்படுத்தப் படுகிறது. அதுதான் சமுகத்தை மார்கத்தின் பெயரால், விடுதலையின் பெயரால் உரிமையின் பெயரால், ஒற்றுமையின் பெயரால் பிரதேச அபிவிருத்தியின் பெயரால் உணர்ச்சிவசப்பட வைப்பதாகும். இவ்வாறான வெற்றுக் கோசங்களால் சமுகத்தை உணர்ச்சி ஊட்டக் கூடியாயர்களால் சமுகம் உணர்ச்சி வயப்படுத்தப் படுவதநூடாக தமது அரசியல் பதவி இலக்குகள் சாதித்துக் கொள்ளப்படுகின்றன.
இந்த உணர்ச்சியூட்டல் இஸ்லாம், சமூக ஒற்றுமை, அபிவிருத்தி, பிரதேச வாதம், சமூகத்திற்கான கட்சி, பேரம் பேசும் சக்தி என பெரும் சொற் பிரயோகங்களோடு மக்கள் முன்வைக்கப்பட்டு வாக்குகள் கவர்ந்து கொள்ளப் படுகின்றன. இந்த வெற்றுக் கோஷவாதிகள் தொடர்ந்தும் இதே வாய்ப் பாட்டினை பிரயோகித்து மீண்டும் மீண்டும் தமது அரசியல் கதிரைகளை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.
மூகமும் இந்த வார்த்தை ஜாலங்களுக்குள் மகுடிக்கி மயங்கிய பாம்பினைப் போல மீண்டும் மீண்டும் மயங்கி தமது மூளைக்கு வேலை கொடுக்காமல் காதுகளால் கேட்டவற்றை அப்படியே நம்பி திரும்ப திரும்ப ஒரே விதத்தில் ஏமாந்து விட்டு; தெருவோரத்தில் நின்று விமர்சித்து புலம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மூளைக்கு வேலை கொடுத்து சிந்தித்து செயற்படுவத்தற்கு சமுகம் தவறி விடுகின்றது.
இவ்வாறு முஸ்லிம் சமுகத்தின் அபிலாசைகள் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்தான் சகோதரர் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் அவர்கள். இவர் அடிப்படையில் ஒரு இலக்கிய வாதியும் தமிழ் புலமை உள்ளவரும் ஆவார் இவர் குறிப்பிடுவது போல தனது அரசியல் சாணக்கியத்தால் எப்போதும் பதவியில் இருக்கக் கூடியவாறு அரசியல் காய்களை நகர்த்துவதில் வல்லமை உள்ளவர் என்பதை மறுக்க முடியாது. உண்மையில் இவரது அரசியல் சாணக்கியம் இவருக்கு மிகவுமே கைகொடுத்திருக்கிறது ஆனால் அது இவரை பதவியில் அமர்த்திய சமுகத்திற்கு என்ன கைமாறு செய்திருக்கிறது என்பதை பூதக் கண்ணாடி வைத்து தேடியும் கண்டுகொள்ள முடியவில்லை. ஏனெனில் இவரது வார்த்தைகளின் பாரம் சமூகத்திற்காக இவர் சாத்திதுக் கொடுத்தவற்றிக்கு நிகர எடைபோடமுடியாதவாறு புறக்கணிக்க தக்கதாகும்.
இவரது அரசியல் பயணம் பற்றி தொடர்ந்து அவதானிப்பவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் ஆரம்பகால இவரது அரசியல் நகர்வுகளில் இவரது வாக்குறுதிகளில் எனக்கு ஆகர்சம் இருந்தது என்ற வகையில் இவரது அண்மைய நகர்வுகள் பேச்சுகளை உற்று நோக்கி வருகின்றபோது எனக்கு பல கேள்விகள் எழுகின்றன.
மிக அண்மைக் காலமாக இவரது அரசியல் நகர்வுகளும் விமர்சனங்களும் தான் சார்ந்த கட்சிக்கு இவர் கொடுக்கும் அழுத்தங்களும் முக்கியத்துவமும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பல வினாக்களை எழுப்பி விட்டுள்ளன. அரசியல் களங்களில் பேச வேண்டிய விவாதிக்க வேண்டிய பல கருத்துக்களை இவர் பாடசாலைக் கூட்டங்களிலும் பாமர மக்களுக்கு மத்தியிலும் பேசிவருகின்றார். அத்தோடு இவரது கட்சித் தலைமையோடும் கட்சிக் கொள்கையோடும் ( அப்படியொரு ஸ்திரமான கொள்கை இருப்பதாக தெரியவில்லை அப்படி இருந்தால்) எப்போதும் பகிரங்கமாகவே முரண் பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். கட்சி சார்ந்த இவரது செயற்பாடுகளை கட்சிதான் பார்த்துக் கொள்ளவேண்டும் அது நமது பிரச்சினை கிடையாதுஇ ஆனால் பொதுமக்கள் சார்ந்த இவரது செயற்பாடுகளை பொதுமக்களாகிய நமக்கு தெளிவு படுத்தவேண்டிய கடப்பாடு இவருக்கு இருக்கிறது.
அண்மைய இவரது உரைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றிய புகழாரமும் துதி பாடுதலும் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கின்றன. தான் முஸ்லிம் என்றும் உண்மை கூற தான் பயப்படப் போவதில்லை என்றும் இவர் பிரமாணம் எடுத்து சொல்லவரும் விடயம் அசைக்க முடியாத தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதாகும். அவரது அந்த நம்பிக்கையை பொதுமக்களையும் நம்பச் சொல்கிறார் அதனை மக்கள் மனதில்பதிய வைப்பதில் பகிரதப் பிரயத்தனம் செய்கிறார்.
இந்த பிரச்சாரமே அவர் உண்மையினை சொல்வதாகச் சொல்லிக் கொண்டு செய்யும் மிகப் பெரிய அபத்தமாகும் ஏனெனில் மகிந்த ராஜபக்ஷவை விட பெரும் சக்தி வாய்ந்த தலைவர்களையெல்லாம் இந்த பூமி கண்டிருக்கிறது இவ்வாறு அரசோட்சிய பலர் நொடிக்குள் காணாமல் போன வரலாறுகள் அனந்தம்இ ஏன் இவர் குறிப்பிடுகின்ற மற்றைய இரு தலைவர்களான அஸ்ரப் மற்றும் பிரபாகரன் ஆகியோரின் வரலாறுகளே திடு திப்பென முடிந்து போனவைதான் என்பதை இவர் மிக இலகுவாக மறந்து விட்டுத்தான் தனது உரையாடலை தனக்கு சாதகமாக தொடர்கிறார். ஆனால் நித்திய ஆட்சியாளனான இறைவனின் சித்தம் என்னவென்பது யாருக்கு தெரியும்.
எனவே இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆராதனையும் இதனை இவர் மக்கள் மத்தியில் பிரபல்யப் படுத்த எடுக்கும் எத்தனமும் ஒரு உள்நோக்கோடுதான் இவர் முன்நகர்த்துகிறார் என்பதை எமக்கு உணர்த்துகின்றன. அதுதான் மிக விரைவில் ஹிஸ்புல்லா பாணியல் இவரும் ஆளும் கட்சி சின்னத்தில் அவதாரம் எடுக்கப் போவதனை நமக்கு கட்டியம் கூறி நிற்கின்றன. இவர்களது கட்சித் தாவல்களோ புதிய அவதாரங்களோ முஸ்லிம் சமுகத்திற்கு எந்த ஒரு விடிவையோ அல்லது பாரிய இழப்பையோ கொண்டுவரப் போவதில்லை ஏனெனில் எந்த அரிதாரத்தைப் பூசினாலும் இவர்கள் ஆடப் போகும் ஆட்டம் ஒன்றுதான் இவர்களது பதவிக் கதிரைகளை ஸ்திரப் படுத்திக் கொள்வதைத் தவிர இவர்களால் பெரிய மாற்றங்களையோ அரசியல் அதிர்வுகளையோ உருவாக்கிவிட முடியாது என்பதை வரலாறு நமக்கு சொலிக் கொண்டே இருக்கிறது.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம்தான் எமது சமூகம் இவர்களது அரசியல் நாடகங்களுக்குக் கொடுக்கும்விலை அளப்பெரியது என்பதாகும். இதனை புரிந்து கொள்ளும் நிலையில் சமுகத்தின் பாமர மக்கள் மட்டுமல்லாது சகல தரப்பு மக்களும் குழப்ப நிலையிலேயே இருக்கின்றனர். எமது மக்கள் தாம் விரும்பும் கருத்துக்கு சாதகமான நியாயப் படுத்தல்களை மற்றும் காரணங்களை தேடுகிறார்களே தவிர உண்மையினைத் தேடிக் கொள்ளவதற்கு இன்னும் தம்மை தயார் படுத்திக் கொள்ளவில்லை.
மக்கள் வரலாறுகளை. யதார்த்தங்களை மிக இலகுவாக மறந்துவிடுவதோடு ஒரு சிறிய ஏமாற்று உரையில், ஒரு பம்மாத்து நாடகத்தில் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுத்து விடக்கூடிய மனோபாவத்தில்தான் இன்று வரை இருக்கிறார்கள். இதனால்தான் ஒரு பிரம்மாண்ட கூட்டத்தில், ஒரு கட்டிட திறப்பு விழாவில், ஒரு அட்டகாச சொற்பொழிவில் தமது மூளைக்கு வேலை கொடுக்காது தமது காதுகளால் கேட்டவற்றை அப்படியே நம்பி வாக்களித்து ஏமாந்து விடுகிறார்கள்.
எமது சமுகத்தின் இந்த அரசியல் ஞான சூனியத்தினை புரிந்து கொண்டுதான் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்களும் ‘மன்னன் புகழ்பாடி மந்திரியாகும்’ பிரச்சாரத்தினை முடிக்கி வைத்துள்ளார் என்பதனை எம்மால் ஊகிக்க முடிகிறது. சமுகத்தின் சமகால அரசியல் பின்ணணி இதனை அவருக்கு சாத்தியப் படுத்தக்கூடும்.
ரஷ்ய எழுத்தாளன் ‘தஸ்தோ யஷ்கி’ சொல்வது போல ‘உண்மைக்காக உயிர் கொடுக்க பலநூறு பேரை ஒரே இரவில் திரட்ட முடியும் ஆனால் அந்த உண்மை என்ன என்பதை சிலவருடங்கள் உட்கார்ந்து படித்து அறிந்துகொள்ள ஒரு சிலரை திரட்டுவது கூட மிக சிரமமாகும்’ என்பது எமது சமுகத்திற்கும் எப்போதும் உண்மையாகவே இருக்கிறது.
Published by

Leave a comment