பதுளை: ஊவா தேர்தலில் பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் கூட்டணியொன்று தனித்தரப்பாக களம் இறங்கியுள்ளது. இந்தக் கூட்டணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் தலைமை தாங்குகின்றன. மேலோட்டமாக பார்க்கின்றபோது இக் கூட்டணி பதுளை மாவட்ட முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஒற்றுமைப்படுத்துகின்ற ஒரு நல்ல விடயம் போன்று தோன்றினாலும் இது பதுளை மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பல அபாயகரமான விளைவுகளை கொண்டிருக்கிறது. இதுபற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியது நமது கடமையாகும்.
பதுளை மாவட்டம் என்பது கிழக்கு மாகானம் போன்றதன்று. இங்கு வாழும் முஸ்லிம்கள் தனித்துவ அரசியல் பற்றி சிந்திக்க முடியாது. ஏனெனில் உள்ளுராட்சி சபையொன்றின் தனித்து பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாத அல்லது கணிசமான தொகை அங்கத்தவர்களை தானும் பெறமுடியாத அளவிற்கு முஸ்லிம்கள் இங்கு சிதறி வாழ்கின்றார்கள்.
உள்ளுராட்சி மன்றங்களைப் பொறுத்தவரை பதுளை, பண்டாரவளை, வெலிமட, பசரை போன்ற எல்லாப் பகுதிகளிலும் எம்மால் ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதித்துவங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. இதன் மூலம் பதுளை மாவட்டத்தில் அரசியல் ரீதியான பெரும்பான்மை பலமுள்ள சமூகமாக முஸ்லிம்கள் இல்லை என்பதை அங்கே இருக்கின்ற சாதாரண பொதுமக்கள் கூட உறுதிபடக் கூறமுடியும்.
எனவே இத்தகைய சூழலில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் முயற்சி தனித்ததாகவா? அல்லது ஏனைய சமூகத்துடன் இணைந்ததாகவா? என்ற விடயம் மிகவும் முக்கியமானது. அந்த வகையில் தற்போது பதுளையில் அவசர அவசரமாக தேர்தலுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் தனித்தரப்பு இம்மாவட்ட முஸ்லிம்களை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்திவிடும் என்பதே இங்கிருக்கும் முதலாவது அபயமாகும்.
இலங்கையிலே முஸ்லிம்கள் மோசமான இனவாத அச்சுறுத்தல்களை எதிர் நோக்கியிருக்கின்றார்கள். குறிப்பாக பொது பல சேனா என்கின்ற அமைப்பு இத்தகைய எதிர்ப்புப் பிரச்சாரங்களை முதன்மையாக நின்று முன்னெடுக்கின்றது. இதற்குப் பின்னால் ஆளும்தரப்பின் உதவியும் அனுசரணையும் இருக்கின்றது. எனவே ஆளும் தரப்பை ஆதரிப்பது பொது பல சேனாவை ஆதரிப்பதற்கு சமமானதாகும் என்ற ஒரு உறுதியான நம்பிக்கை மக்களிடையே இருக்கின்றது.
எனவேஇ மக்கள் ஆளும் தரப்பை நிராகரித்து எதிரணியினர்க்கு தமது வாக்குகளை வழங்கக்கூடிய சூழ்நிலைதான் இங்கு இருக்கின்றது. ஆனாலும் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்துகொண்டு தேர்தலுக்காக மாத்திரம் தனியாகப் போட்டியிடும் அணியினருக்கு வாக்களிப்பதன் மூலம் இனவாதத்திற்கு எதிரான தமது எதிர்ப்பினை முஸ்லிம்கள் காட்ட முடியாது.
ஏனெனில் கடந்த தேர்தல்களில் இவ்வாறு தனித்துப்போட்டியிட்ட இவ்வணியினர் முஸ்லிம்களிடம் பெற்றுக் கொண்ட வாக்குகளை தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் காலடியிலேயே தாரைவார்த்தனர். அவ்வாறனதொரு வியூகத்தையே இப்போதும் பதுளையிலும் மேற்கொண்டிருக்கிறார்கள். எனவே முஸ்லிம் தனித்தரப்பு கூட்டணியானது இன வாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து இனவாதத்திற்கெதிரான முஸ்லிம்களின் ஆட்சேபனைக் குரலினை மலினப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இந்தக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் றஊப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் வடகிழக்கை தமது அரசியல் தளங்களாக கொண்டவர்கள். அங்கு அவர்களுக்கிடையிலான அரசியல் பகை இன்று வரை தொடர்கிறது. எந்தவொரு அதிமுக்கிய விடயங்களிலும் கூட இவர்கள் இருவரும் ஒன்றாக இயங்கிய வராலாறே கிடையாது.
இந்நிலையிலேயே பதுளை தேர்தலில் அரசாங்கத்திற்கெதிராக முஸ்லிம் வாக்குகளை தாம் எவ்வாறாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் அவசர அவசரமாக ஒரு முஸ்லிம் கூட்டணியினை உருவாக்கியிருக்கிறார்கள்.
இக் கூட்டணி எதனை அடிப்படையாகக் கொண்டது? இவர்களுக்கிடையில் இருக்கும் ஒப்பந்த சரத்துகள் என்ன? இதை ஏன் அவர்கள் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை? தெரிவு செய்யப்படும் உறுப்பினர் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குவார்? இக்கூட்டணி தேர்தல் காலத்திற்கு மாத்திரமானதா அல்லது நிலையானதொன்றா? தெரிவு செய்யப்படும் உறுப்பினர் தமது கடமையைச் செய்யத் தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பது யார்? இது போன்ற எதுவித தெளிவான உடன்படிக்கையோ அல்லது எழுத்து மூல ஒப்பந்தங்களோ இல்லாத நிலையிலேயே இவர்கள் கூட்டணியாக நிற்கின்றனர்.
இந்நிலையில் இக் கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்குகளின் பெறுமதி என்ன? அவர்கள் இறுதியில் அதனை எங்குகொண்டு போய்ச் சேர்க்கப்போகிறார்கள்? பதுளை முஸ்லிம்களின் எதிர்கால நலன்களுக்கான உத்தரவாதம் என்ன? போன்ற தெளிவீனங்கள் பதுளை முஸ்லிம்களின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை அபாயகரமானவையாகும்.
எனவேஇ இந்தக் கூட்டணி தொடர்பில் முஸ்லிம்களின் அரசியல் ஒற்றுமையென மேலோட்டமாக சொல்லப்படும் கோசங்களை நம்பிவிடாமல் அவர்களது ஆக்ரோச வார்த்தைகளைக் கண்டு ஏமாந்துவிடாமல் அவர்களது கடந்த கால அரசியல் சாதித்தவை என்ன? என்பன பற்றியெல்லாம் ஆளமான ஒரு பார்வையையும் அதனடிப்படையிலான ஒரு அரசியல் தீர்மானத்தையும் பதுளை முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும்.
Published by
![PMGG-Logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/pmgg-logo1.jpg?w=150&h=90)
Leave a comment