கொழும்பு: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்தை கெளரவப்படுத்தும் வகையில் நேற்றுமுதல் அமுலுக்குவரும் பொருட்டு மின்கட்டணத்தை 25 வீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.
அத்துடன் மண்ணெண்ணெய் லீற்றருக்கான விலையை 20 ரூபாவாலும், பெற்றோல் விலையை 5 ரூபாவாலும், டீசல் விலையை 3 ரூபாவாலும் குறைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் தேசிய கட்டமைப்புக்கு நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் 900 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இணைக்கும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் 19 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதோடு, இரு நாட்டுத் தலைவர்களும் மின் அழுத்தியை இயக்கி நுரைச்சோலை அனல் மின்நிலைய நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்துவைத்தனர்.
இலங்கையின் நாளாந்த மின்தேவையானது 2015 மெகாவோட்ஸாக இருக்கும் நிலையில், 900 மெகாவோட்ஸ் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புடன் இணைப்பதன் ஊடாக தேசிய மின்கட்டமைப்பு 3900 மெகாவோட்ஸாக அதிகரிக்கிறது. இதனூடாக நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் தொடர்ச்சியாக தடையின்றி மின்சார வசதி அளிப்பது நூறு வீதம் உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இன்று முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 21ம் நூற்றாண்டில் பட்டுப்பாதைத் திட்டத்தை உருவாக்கும் சீனாவின் திட்டத்துக்கு இந்த உடன்படிக்கை உதவும் என்றும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், துரித அபிவிருத்தி கண்டுவரும் இலங்கைக்கு சீனா பல்வேறு வகைகளிலும் உதவி வருவதாகவும், அதனடிப்படையிலேயே இங்கு பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் படுவதாகவும் கூறினார். 21ம் நூற்றாண்டின் பட்டுப்பாதைத் திட்டத்துக்கு உதவ இரு நாடுகளுக் குமிடையில் இணக்கம் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் கடல் பாதுகாப்பு, கடல் பொருளாதாரம் என்பவற்றுக்கு இலங்கை பக்கபலமாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Published by

Leave a comment