தம்புள்ள: மாத்தளை மாவட்டம் தம்புள்ள பிரதேசத்திலுள்ள ஹைரியா ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பள்ளி வாசல் நிர்வாகம் தெரிவிக்கின்றது. பள்ளிவாசலுக்கு 24 மணி நேரமும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அங்கு வந்த அடையாளந் தெரியாத ஆட்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவரான எச். ஏ. அஹமது லெப்பை கூறுகின்றார்.
இன்று அதிகாலை 12.45 மணியளவில் பள்ளிவாசல் வளாகத்திற்குள் கழிப்பறைக்கு செல்லப் போவதாக கூறி நுழைந்த இரு நபர்களினானாலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த நபர்களில் ஒருவர் காவல் கடமையிலிருந்த பொலிஸாருடன் உரையாட மற்றவர் பள்ளிவாசலுக்குள் குண்டொன்றை மறைத்து வைத்துள்ளார். அந் நபர்கள் வெளியேறிய சில நிமிடங்களிலே இந்த குண்டு வெடித்துள்ளது இது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசி டிவி கமராவில் கூட பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
சம்பவம் தொடர்பாக விசாரனைக்காக மோப்ப நாய்கள் சகிதம் அங்கு வந்த பொலிஸாரால் அருகாமையிலுள்ள கைவிடப்பட்ட வீடொன்றிலிருந்து இன்று காலை பெட்ரோல் நிரப்பப்பட்ட இரு கொள்கலன்கள் இபழைய டயர்கள், சாக்குகள், முகத்தை மறைக்கும் வகையிலான கறுப்புத் துணி உட்பட சில பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன என்றும் அவர் கூறுகின்றார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் குறிப்பிடத்தக்க சேதங்கள் இல்லாத போதிலும் ஏற்கனவே குண்டுத் தாக்குதல் உட்பட இரு முறை இந்தப் பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. ஒரு தடவை பள்ளி வாசலுக்கு உள்ளே பன்றித் தலை கூட வீசப்பட்டுள்ளது போன்ற சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பள்ளிவாசல் மீதான இந்த தாக்குதலை அமைச்சர் ரிஷாத் பதியுதின் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் வன்மையாக கண்டித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் துறையின் கருத்துக்கள் உடனடியாகக் கிடைக்கப்பெறவில்லை.
தம்புள்ள பிரதேசத்திலுள்ள பௌத்த வழிபாட்டு தலமொன்றை மையப்படுத்தி புனித பிரதேசமாக நகர அபிவிருத்தி வாரியத்தினால் அடையாளமிடப்பட்டுள்ள பிரதேசத்தின் எல்லைக்குள்ளேயே ஹரியா ஜும்மா பள்ளி வாசல் அமைந்துள்ளது.
பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்குமாறு ஏற்கனவே பௌத்த பிக்குமார்களும் கடும் போக்குடைய பௌத்தர்களும் அழுத்தங்களை கொடுத்தும் வருகின்றார்கள்.
ஆனால் பள்ளிவாசலுக்குப் பொருத்தமான காணி அடையாளம் காண்பது தொடர்பாக இது வரையில் எந்தவொரு தீர்க்கமான முடிவுகளும் கிடைகக்கவில்லை. அதன் காரணமாகவே இத்தகைய தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் பள்ளிவாசல் எதிர்நோக்க வேண்டியுள்ளதாக அங்குள்ள முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
Published by

Leave a comment