காத்தான்குடி: தங்களின் குழந்தைகளுக்கு கல்வியை ஊட்டுவதற்கு தற்போதய பெற்றோர்கள் செய்யும் தியாகங்கள் கொஞ்மல்ல. காலையிலிருந்து மாலைவரை தனியார் வகுப்புக்களுக்கு தங்களது பிள்ளைகளைத் தயார்படுத்துவதற்கே அவர்களுக்கு நேரம் சரியாகி விடுகிறது.
நவீன ஆங்கிலக் கற்கைகளின் வருகைக்குப் பின்னர் தங்களது பிள்ளைகளைப் படிப்பிக்க வைப்பதில் பெற்றோர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாடசாலை நாட்களில் பி.ப. 3 மணியிலிருந்து இரவு வரையிலும், வார இறுதிநாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் அதிகாலையிலிருந்து இரவு வரையிலும் சிறுவர்களை புத்தகப்பைகளுடன் வீதிகளில் காணமுடிகிறது.
‘தனது மதினியின் மகன் 3ம் வகுப்புப் படிக்கிறான். சனி, ஞாயிறு தினங்களில் காலை 8 மணிக்கு ரியூசன் என்று வீட்டிலிருந்து போனால் இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்பிறான். இடையில் பகல் 1 மணியிலிருந்து பகல் 2 மணிவரைக்குமே சாப்பாட்டிற்காக வீடு வருகிறான். வந்தாலும் சாப்பிடக்கூட நேரமில்லாமல் அடுத்த வகுப்புக்கு ஓடுகிறான்’ என்பதாக ஒரு சகோதரர் கூறுகிறார்.
3ம் வகுப்புப் படிக்கும் இச்சிறுவனுக்கு இந்நிலமை எமது ஊரில் மாத்திரமே இருக்கின்றது. காலைச் சாப்பாடு இல்லாமல் கடைகளில் ரொட்டியை வாங்கிக்கோ என்று அனுப்பும் பெற்றோர் பிள்ளையின் கவனத்தையும், தேவையையும் இழக்கின்றனர்.
பிள்ளை வகுப்புக்குப் போனால் சரி என்ற அளவுக்கு இன்றையபெற்றோர்களின் நிலைமை இருக்கின்றது.இதே போல் ஆங்கில மற்றும் நவீன கணக்குப்பாடத்தின் விளைவுகளும் ஊரில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இப்பாட வகுப்புக்களுக்கு 2ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரைக்கும் மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். ஒரு வகுப்புக்கு மாத்திரம் குறைந்தது 200 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை அறவிடப்படுகின்றன. சில வகுப்புக்களுக்கு பெற்றோர்களும் அவசியம் கலந்து கொள்ளவேண்டும் எனவும் நிர்வாகம் கட்டாயப்படுத்துகின்றனர்.
இவ்வளவு செலவு செய்து படித்து நல்ல பெறுபேறுகள் பெற்றதும் கொழும்புக்கு அவார்ட் எடுக்கச் செல்லவேண்டும். ஒரு குடும்பத்தில் பெற்றோர் உட்பட சித்தியடைந்த மாணவனையும், சகோதரர்கள் இருப்பின் அவர்களையும் அழைத்துக்கொண்டு கொழும்புக்கு ‘அவார்ட்’ நிழச்சிக்குச் செல்ல வேண்டும்.
குறைந்தது 3 பிள்ளைகளுடன் செல்லும் இவர்கள் காசுகொடுத்துத்தான் கொழும்பில் தங்கவேண்டும். போக்குவரத்துச் செலவு, சாப்பாடு, அவார்ட் நிகழ்ச்சிக்கான செலவுகள் என்று கூட்டிப்பார்த்தால் குறைந்தது இருபதாயிரம் ரூபாய் எடுத்து வைக்க வேண்டும்.
இந்த இருபதாயிரம் ரூபாய் பெறுவது என்பது எல்லாப் பெற்றோராலும் முடியாத விடயம். கடன்பட்டு வாங்கிச்செல்வதில் அதிகமாக பெற்றறோர்களின் நிலமை இருக்கின்றது. அவார்ட் பரிசைப்பார்த்தால் இருநூறு ரூபாய் பெறுமதியான கிண்ணமும், 1 சேர்ட்டிபிகேட்டும் கொடுத்து அவார்ட் என்ற பேரில் அனுப்பி வைக்கின்றனர்.
‘இந்த சிறுவர்கள் பெறும் இந்தக் கிண்ணமும், சேர்ட்டிபிக்கேட்டும் அவர்களது எதிர்காலத்தில் எந்தளவு உதவப்போகின்றது எனவும், மாறாக அலுமாரியில் வைத்து காக்கவே உதவப்போகிறது’ எனவும் ஆசிரியர் ஒருவர் கூறுகிறார்.
ஊருக்கும் புகழுக்கும் பிள்ளைகளைப் படிக்க வைப்பதிலேயே, இலங்கையில் எந்த ஊரிலும் இல்லாத போட்டித்தன்மை காத்தான்குடியில் திகழ்கிறது. இது சிறுவர்களை அதிகமாக வீதிகளில் அலைய வைப்பதில் சமகால சிக்கல்களைத் தோற்றுவிக்கும் எனவும் ஊர் நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.
சாதாரணமாக 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தங்களது பிள்ளைகளைத் தயார்படுத்துவதற்கே தங்களை முழுமையாக பெற்றோர்கள் அர்ப்பணிக்கின்றனர். இதைவிட நவீன வகுப்புக்களில் தங்களது பிள்ளைகளை படிப்பிக்கவைப்பதிலும் பெற்றோர்களின் ஈடுபாட்டைக் காணமுடிகிறது.
ஒரு வகுப்புக்கு மாத்திரம் 500 ரூபாய்கள் வரை ஊதியமாகப் பெரும் ரியுசன் நிர்வாகமும், தனியார்களும், வெற்றி அவார்ட்டுகளை ஏன் காத்தான்குடிக்கு எடுப்பித்து வழங்க முடியாது என நாம் கேட்கிறோம்.
ஓர் பல்கலைக்கழக பட்டம்போன்று திரிபுபடுத்தி வழங்கப்படும் இந்நிகழ்வுகளை காத்தான்குடியில் தாராளமாகவே வழங்கலாமே? கொழும்பு நிர்வாகத்தை ஊருக்கு அழைத்து அவார்ட் கொடுத்தால் பிள்ளைகளின் அவார்ட் நிகழ்வை ஊரே பார்க்குமே?
தங்களது பிள்ளைகளை பணம்கொடுத்துப் படிப்பிக்கும் பெற்றோர்கள், ரியுசன் நிர்சாகத்திடம் இதுவிடயமாக கலந்தாலோசிக்கலாமே? காசுகொடுத்தாலும், மறைமுகமாக நிர்வாகத்தின் பலவந்தத்தால் அழுத்தங்களைச் சந்திக்கும் பெற்றோர்கள் காத்தான்குடியில் மாத்திரமே இருக்கின்றனர்.
சிறுவர்களுக்கு கல்வி இன்றியமையாதது. இலவசக் கல்வியையும், சிறந்த உலகத் தரம்வாய்ந்த பாடத்திட்டங்களையும் இலங்கை அரசாங்கம் சிறுவர்களுக்கு வழங்கி இருக்கின்றது. இவற்றைச் சரியாக பாடசாலைகளும், பெற்றோர்களும் பயன்படுத்துவார்களாயின், பிள்ளைகள் வீதியில் அலைய வேண்டிய நிலை ஏற்படாது. கடன்பட்டு கொழும்புக்குப் போகவேண்டிய தேவையும் இருக்காது.
மாலை நேரத்தில் விளையாடி மகிழ வேண்டிய சிறுவர்கள் கசக்கிப்புளியப்படுகின்றனர். இந்நிலைமை பாரிய தாக்கங்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை!
Published by
![tution-class1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/tution-class11.jpg?w=150&h=110)
![tution-class1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/tution-class11.jpg?w=300&h=220)
![z_p09-Teacher[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/z_p09-teacher1.jpg?w=300&h=222)


Leave a comment