உங்கள் பயணம் இனிதே முடிந்தது !

M.H.M.Ashraffபிரகாசக்கவி

எங்கிருந்து வந்தீர்களோ
அங்கே மீண்டு விட்டீர்கள் …

அரசியலில்

யானையாய்
நீங்கள் இருந்த போதெல்லாம்
பாகனும் நீங்களாகவே இருந்தீர்கள் …

ஓடமாக
நீங்கள் இருந்த போதெல்லாம்
எங்களை கரைசேர்க்கும்
துடுப்பாகவும் நீங்களே இருந்தீர்கள் …

நீங்கள் ஒருபோதும்
விதை நட்டு
மரம் வளர்க்கவே இல்லை
விதையாய்
நீங்களே இருந்து
மரம் வளர்த்தீர்கள் …

அதனால்தான்

புல்லுருவிகளும்
நாயுருவிகளும்
அரக்கொட்டியன்களும்
நமதுமரத்தை அண்டவே இல்லை.

ஏனென்றால்
பீடைகளுக்கு நன்கு தெரியும்
நீங்கள்
களைநாசினிகளுக்கெல்லாம் களைநாசினி என்று !

உங்கள் பயணம் இனிதே முடிந்தது !

எங்கிருந்து வந்தீர்களோ
அங்கே மீண்டு விட்டீர்கள்

ஆனால் இன்று

உங்கள் பெயர்சொல்லும்
வாலறுந்த பல்லிகள் எல்லோருக்கும்
வாய்க்கட்டு பலமாகவே இருக்கிறது
அத்திவாரங்களை தவிர

அதனால்தானோ என்னவோ தெரியவில்லை

எங்களை
நட்டாற்றில் விட்டுவிட்டு

அவர்கள் எல்லோரும்

இன்னும் இன்னும்
பதவி விழுங்கும் முதலைகளாக
தெப்பக்குளத்தில் நீந்துகின்றார்கள் …

நீங்கள் தீர்க்கதரிசி

ஆனால் இவர்களோ
எமக்கு வாய்க்கரிசி

நீங்கள் சொன்னது போல

தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லைதான்

அதற்கு
எங்கள் மனங்களில் வாழும்
நீங்களே சாட்சி …

ஆகமொத்தத்தில்

தலைமைத்துவம் இன்றி
தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
வாடிய பயிர்களுக்கு

நாளை
நாங்களும்தான்
ஆக்கப்படுவோம் சாட்சி !

Published by

Leave a comment