டுபாய்: கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சு முறையை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை 2015 ஆம் ஆண்டில் பரிசோதனை முயற்சியாக பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்போது உடலில் பொருத்திக் கொள்ளக்கூடிய சென்சர் கருவிகளை மேம்படுத்தி அதன்மூலம் முறையற்ற பந்துவீச்சை போட்டிகளின்போதே அவதானிக்கப்படவுள்ளது.
இதில் ஐ.சி.சி.யினால் தற்போது பயன்படுத்தப்படும் முழங்கை வளைவு அளவை கணிக்கும் பரிசோதனை தரத்தை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக கிரிக்கெட் பொதுச் செயலாளர் ஜப் அலடிக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத பந்துவீச்சு காரணமாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் கடந்த வாரம் பந்துவீச தடைக்கு உள்ளானார். இதில் அஜ்மலின் பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் வீசிய ஒரு பந்துகூட சட்டவிதிக்கு உட்பட்டது அல்ல என்பது கண்டறியப்பட்டது.
உலகின் முதல்நிலை ஒருநாள் பந்துவீச்சாளரான அஜ்மல், இதுவரையில் முறையற்ற பந்துவீச்சில் சிக்கிய வீரர்களில் முன்னணியில் இருக்கும் பந்துவீச்சாளராவார்.
இலங்கையின் சச்சித்ர சேனாநாயக்க, மேற்கிந்திய தீவுகளின் சிலிங்போர்ட் மற்றும் நியுஸிலாந்தின் கேன் வில்லியம்ஸ் ஆகியோரும் கடந்த 12 மாதங்களுக்குள் முறையற்ற பந்துவீச்சு காரணமாக தடைக்கு முகம்கொடுத்தவர்களாவர். தவிர சிம்பாப்வேயின் பிரொஸ்பெர் உட்சயர் மற்றும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களான சொஹக் காசி மற்றும் அமின் ஹொஸைன் ஆகியோரும் முறையற்ற பந்துவீச்சு குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்துள்ளனர். இவர்கள் சோதனைக்கு முகம்கொடுக்கவுள்ளனர். பந்துவீச்சாளர்கள் 15 டிகிரிக்கு மேல் முழங்கையை வளைக்க அனுமதி இல்லை.
இந்நிலையில் போட்டிகளின்போது பந்துவீச்சை பரிசோதிக்கும் புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்கு முன்னர் நடைமுறைக்கு வர வாய்ப்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்பகட்டமாக முறையற்ற பந்துவீச்சை கண்டறிய எவ்வாறான சென்சர் கருவியை பயன்படுத்துவது என்பது குறித்து ஐ.சி.சி. தீர்மானிக்கவுள்ளது. பின்னர் குறித்த கருவியை ஆரம்பகட்ட சோதனைகளுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே போட்டி சூழலில் இதனை பயன்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
இதில் போட்டியை பாதிக்காத வகையில் பந்துவீச்சாளர்களின் கையில் குறித்த சென்சர் கருவியை பொருத்துவது பெரும் சவாலாக இருக்கும் என நம்பப்படுகிறது. “இந்த திட்டத்தை மேம்படுத்துவதில் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறைப்படுத்துவதில் சற்று சாவால்கள் இருக்கின்றன” என்று கிரிக்கெட் பொதுச் செயலாளர் ஜப் அலடிக் குறிப்பிட்டுள்ளார்.
Published by


Leave a comment