குருக்கள்மடம்: கடந்த மாதம் தோண்டப்படவிருந்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குருக்கள்மடம் எனுமிடத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் காத்தான்குடி முஸ்லிம்களின் புதைகுழிப் பிரதேசத்தைப் பார்வையிடுவதற்காக டாக்டர். அஜித் தென்னக்கோன் தலைமையில் பத்து சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று இன்று (13.09.2014) சனக்கிழமை காலை 08:30 மணிக்கு குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்தது.
விஷேட பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பிலிருந்து வருகை தந்த இந்த சட்ட வைத்திய நிபுணர்கள் குழுவினருடன் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்து களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தவருமான றவூப் ஏ. மஜீத், மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மற்றும் ஏனைய பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வுப் பிரிவினர், பாதுகாப்புத் தரப்பினர் என பலரும் குறித்த நேரத்திற்கு அங்கு சமூகமளித்தனர்.
குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அடுத்துள்ள அடையாளம் காட்டப்பட்ட இப்புதைகுழிப் பிரதேசத்திற்கு முன்னதாக சமூகமளித்திருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஏ.எப்.எம். ஷிப்லி உள்ளிட்ட மாவட்ட ஊடகவியலாளர்கள் பலரும் இந்த சட்ட வைத்திய நிபுணர் குழுவுடன் அங்கே இணைந்து கொண்டனர்.
தனது உறவினர் உட்பட காத்தான்குடி முஸ்லிம்கள் பலர் கடத்தப்பட்டது தொடர்பாகவும், இந்த மனிதப் புதைகுழி தொடர்பாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் அதன் தொடராக களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்திலும் நேரில் ஆஜராகி இப்புதைகுழிப் பிரதேசத்தை அடையாளம் காட்டிய நகர சபை உறுப்பினர் றவூப்.ஏ.மஜீத், சட்ட வைத்திய நிபுணர்கள் குழுவினரிடம் தான் அடையாளப்படுத்திய பிரதேசத்தை மீண்டும் உறுதிப்படுத்தி அடையாளம் காட்டியதுடன், அப்பிரதேசத்தையே தோண்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இச்சமயத்தில் குறுக்கிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி, கடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து சட்ட வைத்திய நிபுணர் குழுவினருக்கு விளக்கியதுடன், இதுதொடர்பாக தான் காணாமல் போனோரைப் பற்றி விசாரணை செய்து வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறையிட்டிருப்பதாகவும், பல கட்ட நடவடிக்கைகளை இதுதொடர்பில் மேற்கொண்டு வருவதாகவும், கடத்தப்பட்ட உறவினர்கள் பலரையும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வைத்துள்ளதாகவும், ஏற்கனவே அடையாளம் காட்டப்பட்டுள்ள இடத்திற்கும் புறம்பாக அவ்விடத்திலுள்ள மேலும் சில பகுதிகளையும் தோண்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இச்சந்தர்ப்பத்தில் அங்கு சமூகமளித்த இந்து மதச் சகோதரர் ஒருவர், ஏற்கனவே அடையாளம் காட்டப்பட்ட பகுதிகளுக்குச் சமீபமாக சுனாமியின்போது இறந்த அப்பிரதேச இந்துக்கள் சிலரும் இந்து மத ஆசாரப்படி புதைக்கப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம்களின் புதைகுழியைத் தோண்டுவதை தான் ஆட்சேபிக்கவில்லையெனவும், இந்து மத ஆசாரப்படி புதைக்கப்பட்ட சடலங்களை மீண்டும் தோண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.இவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த சட்ட வைத்திய நிபுணர் குழுவின் தலைவர் டாக்டர். அஜித் தென்னகோன் பதிலளிக்கையில், வழக்காளி றவூப் மஜீத் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் பிறப்பித்த கட்டளைக்கமையவே அடையாளப்படுத்தப்பட்ட புதைகுழிப் பகுதியைத் தோண்டுவதற்கான ஆரம்பச் செயற்பாடுகளை முன்னெடுக்கவே தாங்கள் இன்று இங்கே வருகை தந்ததாக அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றத்தில் வழக்காளி அடையாளப்படுத்தப்பட்ட இடம் தொடர்பில் இங்கே கருத்து முரண்பாடுகள் காணப்படுவதால் இதுபற்றி பொலீசார் மிண்டும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து தோண்டுவதற்கான இடத்தை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதுடன், அதன் பின்னரே தமது நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 24ம் திகதி இந்த வழக்கு மீண்டும் அழைக்கப்படவுள்ளதால், அதற்கு முன்னதாக பொலீசார் தமது அறிக்கையை மன்றுக்குச் சமர்ப்பித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தோண்டப்பட வேண்டிய புதைகுழிப் பிரதேசத்தை திட்டமாக அடையாளப்படுத்த வேண்டும் எனவும் சட்ட வைத்திய நிபுணர் குழுவின் தலைவர் பொலீசாருக்கு ஆலோசனை வழங்கி அங்கிருந்து புறப்பட்டனர்.
Published by



Leave a comment