காத்தான்குடி: நேற்று புதன்கிழமை காத்தான்குடி-1, மஞ்சந்தொடுவாய்ப்பிரதேசத்தில் அமைந்துள்ள குவைத் சிட்டி வீட்டுத் திட்டத்தில் சஹாப்தீன் பாத்திமா சீமா எனும் 9 வயது மாணவி பரிதாபகமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இச்சோக சம்பவத்தால் நேற்று முதல் இன்றுவரை ஊர் செழிப்பிழந்து சோகத்துடன் காணப்படுகிறது.
இந்தியாவில் தினமும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கொலைசெய்யப்படுவது அதிகரித்து வருகிறது. 2 வயது குழந்தையிலிருந்து 90 வயது பாட்டி வரைக்கும் பாலியல் துஷ்பிரயோகக் கொலைகள் இந்தியாவில் இந்நிமிடம்வரை நடந்துவருகிறது.
நேற்றைய குவைட் சிட்டி சம்பவம் காத்தான்குடிக்கு புதிய சம்பவமாக இருக்கின்றது. நவீன தொழிநுட்பத்தில் உலகம் முன்னேறிக்கொண்டிருந்தாலும், போதைவஸ்த்துக்களுக்கு அடிமையாகி, அதன் பிரதிபலிப்பில் தனது காமத்தை தீர்த்துக்கொள்ள மிருகங்களைக்கூட விட்டு வைக்காதவர்களால் இன்று இளம் சிட்டுக்கள் சீரழிக்கப்படுகின்றன.
பாத்திமா சீமாவின் பாடப்புத்தகங்களும், அவள் வெள்ளை போர்ட்டில் எழுதிய வரிகளும், அலங்கரித்த படங்களும் எங்கள் கண்ணீரைக் குளமாக்கின்றன.
குற்றவாளி பற்றி பலர் அடையாளங்களைக் கூறியிருக்கின்றனர். சிலர் எங்களுக்கு குற்றவாளியைத் தெரியும் என்று கூறினாலும், பலம், பயத்தால் தொண்டைக்குள் விழுங்கி விட்டனர்.
பொலிஸார் சோதணைகளை நடாத்தி வருகின்றனர். மோப்ப நாய், டீ.என்.ஏ. மற்றும் பிற அடையாளங்களை வைத்து கொலையாளியைக் கைது செய்வது ஓர் பெரிய விடயமல்ல. ஆனால், கொலையாளியைத் தேடுதல் ஓர் கண்கட்டி வித்தையாக அமையக்கூடாது.
நேற்றிலிருந்து இன்றுவரைக்கும் பல தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கு பயப்படுகின்றனர். ஆண் உதவியில்லாத தாய்மார்கள் சிறுமிகளை கடைக்கனுப்பி பொருட்கள் வாங்குவதை தவிர்த்துவிட்டனர்.
வீட்டு முற்றத்திலும், வீதியிலும் விளையாடிய சிறுமிகள் வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
குற்றவாளி எவனாக இருந்தாலும் சட்டத்தின் முன் கைதுசெய்யப்பட்டு அதிகபட்ச தண்டணை வழங்கப்பட வேண்டும்.
சட்டத்த்தின் இருட்டறைக்குள் பலியான சிறுமியின் சம்பவம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டால், காத்தான்குடி சமூகம் தோற்றுப் போய்விட்டது என்றே அர்த்தம்.
கொலையாளி கைது செய்யப்படாமல் தாமதமாகும்பட்சத்தில் நாளை இதுபோன்று இன்னும் பல மொட்டுக்கள் துளிர்விடும்போதே கசக்கிப் புழிந்து புதைக்கப்படும் பரிதாபம் எமது ஊரில் ஏற்படும் ஆபத்துக்கள் இருக்கின்றன.
கொலையாளி கைது செய்து அவனுக்கு உரிய தண்டணை இச்சமூகத்துக்கு முன் வழங்கப்படும் வரை ஈமான் உணர்வுள்ள அத்தனை இதயங்களும் போராட வேண்டும்.
அல்லாஹ் நீதியானவன்!
Published by



Leave a comment