நியுயோர்க்: செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு இன்றுடன் 13 ஆண்டுகள் பூர்த் தியாகிறது. அமெரிக்கா மீதான இந்தத் தாக்குதலை விடவும் கடந்த நூற்றாண்டில் உலக வரலாற்றில் எத்தனையோ மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. என்றாலும் 2001ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டைக் கோபுர தாக்குதலைப் போன்று உலகமெங்கும் தாக்கத்தை செலுத்திய வேறு எந்த சம்பவமும் பதிவாக வில்லை.
தெருவோரத்தில் பொருட்களின் விலையுயர்வுக்காக போராடும் சாதாரண மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு பின்னாலும் செப்டெம்பர் 11 தாக்குதல் சம்பவத்தின் பின்னணி இருப்பதாக அர்த்தம் கற்பிக்க முடியும். செப்டெம்பர் 11 சம்பவம் நிகழாத பட்சத்தில் உலக வரலாறு இன்று வேறு மாதிரி இருக்க சாத்தியங்கள் மிக அதிகம்.
குறிப்பாக உலகில் தீவிரவாதம் என்ற சொல்லுக்கு இன்று வேறு அர்த்தம் இருந்திருக்கலாம். இந்த வரைவிலக்கண மாற்றத்தால் கடந்த தசாப்தத்தில் இடம்பெற்ற பல யுத்தங்களும் நிகழாமல் போயிருக்கலாம். ஆப்கானிஸ்தான். ஈராக் என்று பல உலக நாடுகளினதும் அரசியல் சூழ் நிலைகள் முற்றாக வித்தியாசமாக இருந்திருக்கும். இப்படி உலக வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் செப்டெம்பர் 11 தாக்கம் இருந்தே தீரும்.
2001ஆம் ஆண்டு செட்டெம்பர் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 19 அல் கொய்தா உறுப்பினர்கள் தற்கொலைத் தாக்கு தலை நடத்துவதற்காக அமெரிக்காவின் நான்கு விமானங்களைக் கடத்தினர். உலகம் அதுவரை பரீட்சித்துப் பார்க்காத தாக்குதல் உத்தி என்பதால் அதனைப் புரிந்து கொள்வதற்கே அமெரிக்காவுக்கு சற்று நேரம் எடுத்தது.
அமெரிக்காவின் சுதாகரிப்புக்கு முன்னரே அமெரிக்க விமான எண் 11 மற்றும் அமெரிக்க விமானம் 175 ஆகிய இரு விமானங்களும் அமெரிக்காவின் அடையாளமாக இருந்த நியூயோர்க் இரட்டைக் கோபுரத்தை தாக்கின. காலை 8.45 க்கு உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரம் தாக்கப்பட்டது. பின்னர் காலை 9.03 க்கு தெற்கு கோபுரம் தாக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்குள் இரு கோபுரங்களும் சரிந்தன. இது அருகில் இருக்கும் மேலும் 10 வானை முட்டும் கட்டடங்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியது.
கடத்தப்பட்ட மூன்றாவது விமானமான அமெரிக்க வான் போக்குவரத்து கழகத்தின் விமான எண் 77, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனில் மோதியது. பெண்டகனின் மேற்குப் பகுதி இடிந்தது. நான்காவது விமானமான ஐக்கிய வான் போக்குவரத்து கழகத்தின் விமான எண் 175 விமானம் வொஷிங்டன் டீ. சியை இலக்கு வைத்து பறந்தது. ஆனால் பென்சில்வெனியாவின் ஷன்கசின் பகுதியில் விழுந்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த சம்பவங்கள் உலகத்தையே கலங்கச் செய்தன.
இந்த நான்கு விமானங்களிலும் இருந்த போராளிகள் உட்பட 246 பேரும் பலியாகினர். இந்த சம்பவங்களில் ஒட்டுமொத்தமாக 2,977 பேர் கொல்லப்பட்டனர். இதில் இரட்டைக் கோபுர தாக்குதல்களில் மாத்திரம் 2இ753 பேர் பலியாகினர். சொத்துகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு சுமார் 10 பில்லியன் டொலர் சேதம் ஏற்படுத்தியது. இன்றும் தாக்குதலில் கொல்லப்பட்டோரது 1,200க்கும் அதிகமாக உடல் எச்சங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் வைக்கப் பட்டுள்ளன.
இரட்டைக் கோபுரம் அமைந்திருந்த கிரவுன்ட் சீரோ பகுதியை சுத்தம் செய்யும் பணிகள் 2002 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதியே பூர்த்தியானது. சுத்தம் செய்யும் பணிகளுக்கு மாத்திரமே 750 மில்லியன் டொலர் செலவானதோடு 1.8 மில்லியன் தொன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த தாக்குதலின் விளைவாக அமெரிக்காவில் பலருக்கும் இன்று புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செப்டெம்பர் 11,9/11 அல்லது இரட்டைக் கோபுர தாக்குதல் என்று பல பெயர்களாலும் அழைக்கப்படும் இந்த தாக்குதல் சம்பவத்தின் நேரடித் தாக்கங்களை இவ்வாறு விபரிக்க முடியும். ஆனால் இந்த சம்பவத்தின் மறைமுகத் தாக்கம் இதனை விடவும் மிகப் பயங்கரமாக இருந்த வருகிறது.
செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் கடுமையாயின. இந்தச் சம்பவத்தின் இரண்டு தினங்களில் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியது ஒசாமா பின்லேடனும் அவரது அல் கொய்தா அமைப்பும் என்று அமெரிக்கா அறிவித்தது. அன்று தொடக்கம் ஒசாமா பின்லேடனையும் அல்கொய்தாவையும் அழிக்கவெனக் கூறி அமெரிக்கா உலகெங்கும் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை மில்லியன்களை தாண்டி பல ஆண்டுகளாகியிருக்கும்.
செப்டெம்பர் 11 சம்பவத்திற்குப் பின் அமெரிக்க அரசுஇ அமைச்சு மட்டத்திலான உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் ஒன்றை உருவாக்கியது. தீவிரவாத தாக்குதல்களில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்தத் திணைக்களம் நிறுவப்பட்டது. செப்டெம்பர் தாக்குதலுக்குப் பின் அதுவரை காலமும் சுதந்திரம் அனுபவித்து வந்த அமெரிக்க முஸ்லிம்கள் நாளாந்தம் தொந்தரவுகளை சந்திக்க நேரிட்டனர். முஸ்லிம்கள் மற்றும் அரபிகளுக்கு மட்டுமன்றி அங்கு வாழும் வெளி நாட்டு பூர்வீகம் கொண்ட பலரும் இந்த சிக்கலை அனுபவிக்க ஆரம்பித்தனர்.
செப்டெம்பர் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்க மக்கள் விமானங்களில் போகவே பயப்பட்டார்கள். தூரப் பயணங்களுக்கு வாகனங்களை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். விளைவு செப்டெம்பர் தாக்குதலுக்குப் பின்னரான ஆண்டில் அமெரிக்காவில் வாகன விபத்துக்களில் மேலதிகமாக 1இ595 பேர் கொல் லப்பட்டனர். இவ்வாறான பயத்தின் வெளிப்பாடாகத்தான் அமெரிக்கா உலகெங்கும் தனது அத்து மீறல்களை அதிகரித்தது.
செப்டெம்பர் தாக்குதல் நடந்து மூன்று தினங்களில் தீவிரவாத எதிர்ப்பு திட்டத்திற்காக 40 பில்லியன் டொலர்களுக்கு அமெரிக்க கொங்கிரஸ் அவை அனுமதி அளித்தது. பின்னர் தாக்குதல் இடம்பெற்று ஒரு மாதத்திற்கு தலிபான் ஆட்சியில் இருந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெ டுத்தது. இன்றுவரை நீடிக்கும் இந்த ஆக்கிரமிப்பால் கொல்லப்பட்டிருக்கும் அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டியிருக்கும்.
அதேபோன்று செப்டெம்பர் தாக்குதல் இடம்பெற்று ஓர் ஆண்டுக்குள் அமெரிக்கா சதாம் ஹுஸைன் ஆட்சியில் இருந்த ஈராக் மீது படையெடுத்தது. மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற பின்னர் கடந்த 2011 ல் அமெரிக்கா மற்றும் அதன் மேற்குலக படைகள் ஈராக்கில் இருந்து வெளியெறிய போதும் இன்று ஈராக் சீரழிந்திருப்பதற்கு அமெரிக்கப் படையெடுப்பே அடிப்படைக் காரணமாகும்.
செப்டெம்பர் தாக்குதலின் பின்னர் ஒசாமாவையும் அல் கொய்தாவையும் இலக்கு வைத்து அமெரிக்கா தனது தீவிரவாத எதிர்ப்பு யுத்தத்தை உலக த்தில் கட்டவிழ்த்து விட்டது. ஆனால் ஒசாமாவைப் பிடிப்பதற்கு அமெரிக்காவுக்கு ஒன்பது ஆண்டுகள் தேவைப்பட்டன. 2011 இல் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் இருக்கும் கட்டடம் ஒன்றில் இருந்த பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
செப்டெம்பர் தாக்குதலின் விளைவாக அமெரிக்கா உலகெங்கும் தனது உளவு வேலைகளிலும் தீவிரம் காட்டியது. ஜுலியான் அஸ்ஸாஞ்இ இட் வட் ஸ்னோடன் போன்றோர்களால் அமெரிக்கா சாதாரண கையடக்க தொலைபேசி தொடக்கம் இணையதளங்கள் ஊடாக பார்க்கும் உளவு வேலைகள் வெளிச்சத்திற்கு வந்தன. 2013 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் உளவுத் துறை பட்ஜட் 52.6 பில்லியன் டொலர் என வானத்தை முட்டியது.
2001 செப்டெம்பர் 11 ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கா தனது அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ பலத்தைக் கொண்டு செய்த அத்து மீறல்கள் உலகின் அரசியல். கலாசாரம் பொருளாதாரம் என்று ஏற்படுத்திய மறைமுக தாக்கங்கள் ஏராளம். அது ‘பட்டாம்பூச்சு விளைவு’ போல் உலகில் 7 பில்லியனை தாண்டியிருக்கும் மக்கள் தொகையில் ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு வகையில் பாதித்திருக்கிறது.
இன்றும் அமெரிக்கா ‘பயங்கரவாதம்’ எனும் மனநோயால் பாதிக்கப்பட்டே இருக்கின்றது.
Published by




Leave a comment