பக்தாத்: இஸிஸ் அமைப்பு தற்போது மேலும் பல நாடுகளில் தனது ஆட்சியை நிலைநிறுத்த ஆரம்பித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இஸிஸ் அமைப்புக்கு ஆதரவு பெருகி வருகிறது. அதேபோல இந்தியாவிலும், காஷ்மீரில் இஸிஸ் ஆதரவு குரல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன. பல இந்திய இளைஞர்களும் இவ்வமைப்பில் சேர்ந்துள்ளமை கடந்த மாதம் உறுதியாகி இருந்தது.
இதனால் இந்த மூன்று நாடுகளின் அரசுகளும், உளவுத்துறையினரும் உஷாராகி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் மற்றும் அல் கய்தா போராளிகளை தன் பக்கம் திருப்பி ஆளெடுக்கும் பணியை மிச்சப்படுத்தவும் இஸிஸ் முயற்சித்து வருகிறது. இஸிஸ் வந்ததன் பின்னர் அல்கய்தாவின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத் அல் அஹ்ரார் போராளிகள் ஏற்கனவே இஸிஸ் அமைப்புக்கு ஆதரவாக திரும்பி விட்டனர். இந்த அமைப்பு பாகிஸ்தன் தலிபான் அமைப்பிலிருந்து பிரிந்து வந்ததாகும்.
ஜமாத் அல் அஹ்ரார் அமைப்பின் தலைவரான இசானுல்லாஹ் இசான் கூறுகையில், நாங்கள் அவர்களை மதிக்கிறோம். முழுமையான இஸ்லாமிய நாட்டை அவர்கள் உருவாக்க முயன்று வருகின்றனர். அதை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களது உதவியை அவர்கள் கேட்டால் நாங்கள் அதுகுறித்துப் பரிசீலிப்போம் என்றார்.
இளைஞர்களைக் குறி வைத்து தனது பக்கம் திருப்பி வருகிறதது இஸிஸ் அமைப்பு. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரில் இந்த வேட்டையை அது தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவுதியிலும் இளைஞர்களைச் சேர்ப்பதற்கு இஸிஸ் அமைப்பினர் எடுத்த முயற்சி சவுதி அரசால் கடந்த வாரம் முடக்கப்பட்டிருந்தது.
அல் கய்தாவைப் பொறுத்தவரை அதற்கு இளைய தலைவர்கள் என்று யாரும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அதன் தலைவர்களாக தற்போது உள்ளவர்களும் வயதானவர்கள்தான். அவர்களும் கூட ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைப் பகுதியோடு முடங்கி விட்டனர். முன்பு போல அவர்களால் ஆக்ரோஷமாக செயல்பட முடியாத நிலை. எனவே அல் கய்தா போராளிகளும் இஸிஸ் பக்கம் சாயும் ஆர்வத்தில் உள்ளனர்.
இஸிஸ் பக்கம் தனது அமைப்பினர் முழுமையாக போய் விடக் கூடாது என்பதற்காவே இந்தியாவில் கிளை திறக்கப் போவதாக அல் கய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அறிவித்திருந்தார்.
பாகிஸ்தானின் பெஷாவர், கிழக்கு ஆப்கானிஸ்தானில், இஸிஸ் அமைப்புக்கு ஆதரவு திரட்டும் துண்டுப் பிரசுரங்கள் சமீபத்தில் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களால் விநியோகிக்கப்பட்டது. இது பாகிஸ்தான் நிர்வாகத்தை கவலை கொள்ளச் செய்துள்ளது.
பதா அதாவது வெற்றி என்று தலைப்பிட்ட அந்த 12 பக்க பிரசுர புத்தகம், ஆப்கானிஸ்தானின் பாஸ்தோ மற்றும் தாரி மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை பெஷாவர் அருகே அமைக்கப்பட்டுள்ள ஆப்கன் அகதி முகாமில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெஷாவரில் இஸிஸ் ஸ்டிக்கர் பொருத்தப்பட்ட கார்களையும் காண முடிகிறது. இந்தப் புத்தகங்களை பலரும் ஆர்வத்துடன் வாங்குவதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
அதேபோல இந்தியாவின் காஷ்மீரிலும் இஸிஸ் ஆதரவுப் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த அமைப்புக்கு ஆதரவாளர்கள் பலர் உருவாகி வருகிறார்கள். ஸ்ரீநகரில் இஸிஸ் கொடியை சிலர் ஜூன் 27ம் தேதி ஏற்றி பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம். மேலும் சுவர் விளம்பரங்களும் எழுதப்பட்டன.
இருப்பினும் இஸிஸ் தீவிரவாத அமைப்பால் இந்தியாவுக்கு எத்தகைய ஆபத்துகள் எழும் என்பது தெரியவில்லை. அதேசமயம், பேராபத்துக்கு வாய்ப்பில்லை என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள். போராட்ட அமைப்பென்று தற்பொழுது உலகில் புகழ்பெற்றுவிளங்குவது இன்று இஸிஸ் மாத்திரமே. யுக்ரைன் கிளர்ச்சிப்பிரிவினர் போராடினாலும் அவ்வியக்கம் வரையரைக்குட்பட்டது.
ஆரம்பத்தில் சிரியாவில் காலூன்றி போராடி பின்னர் ஈராக்கின் மொசூல் நகர்வரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இஸிஸ் அமைப்பினர், தனது இஸ்லாமிய பிரதேச எல்லையை அவ்வப்போது மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
எவ்வாறிருந்தபோதிலும் இன்றுவரைக்கும் சிரியாவையோ ஈராக்கையோ தனது முழுக்கட்டுப்பாட்டின்கீழ் வைத்துக்கொள்ள முடியாமல் இஸிஸ் அமைப்பிற்கு இருக்கின்றது. ஆனாலும் உலகில் இருந்து பல இளைஞர்கள் இவ்வியக்கத்தின்பால் கவரப்பட்டு இணைந்துவரும் நிலையில் இஸிஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரதேசம் மேலும் விரிவடைய வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.
Published by

Leave a comment