பக்தாத்: 10,000 போராளிகளுடன் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இஸிஸ், தற்போது இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலப்பரப்பை தன் வசம் வைத்துள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது நிச்சயம் சாதாரண விஷயமல்ல. மிகப் பெரிய அச்சுறுத்தலைத் தரும் விஷயமாகும். இஸிஸ் நாளுக்கு நாள் பலமாகி வருகிறதே தவிர அதன் வீரியம் குறைந்ததாக தெரியவில்லை.
சிரியாவில்தான் முதலில் இந்த இயக்கம் தனது தாக்குதலைத் தொடங்கியது. பின்னர் அப்படியே ஈராக்குக்குள் நுழைந்து இன்று மிகப் பெரிய அளவில் அபாயகரமான இயக்கமாக மாறி நிற்கிறது.
சிரிய அதிபர் பஷர் அஸ்ஸாத்துக்கு எதிரான புரட்சி அமைப்பாகத்தான் முதலில் இஸிஸ் தொடங்கப்பட்டது. அப்போது இதன் அபாயகரமான முகத்தை யாரும் சரிவர கவனிக்கவில்லை. பஷரை எதிர்ப்பதற்கு அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட படையே இந்த இஸிஸ் எனவும் இன்றுவரை பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கும் நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் வடக்கு ஈராக்கை கைப்பற்றிய பின்னர்தான் இதன் பின்னணி குறித்து அனைவரும் அறிந்து அதிர்ந்தனர்.
இன்று இங்கிலாந்து நாட்டின் அளவிலான நிலப்பரப்பை வைத்துள்ளது இஸிஸ். சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை இது வளைத்து விட்டது.
வெறும் தீவிரவாத அமைப்பாக மட்டும் இல்லாமல் இது எண்ணெய் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 8 லட்சம் டொலர் சம்பாதிக்கிறது. அது மட்டுமல்லாமல் பிணையாளிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு அதன் மூலமாகவு்ம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாகவும் தெரியவருகிறது.
இந்த அமைப்பில் 10,000 போராளிகள் உள்ளனர். நவீன ஆயுதங்களை வைத்துள்ளனர். இஸிஸ் அமைப்பின் வசம் இவ்வளவு பெரிய நிலப்பரப்பு சிக்கக் காரணம், சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள மிகவும் பலவீனமான அரசுகளும், உள்நாட்டுக் குழப்பங்களுமே.
தற்போதைய நிலையில் அல் கய்தா அமைப்பை இந்த இஸிஸ் அமைப்பு கிட்டத்தட்ட ஓரம் கட்டி விட்டது. உலகின் பல்வே்று பகுதிகளிலும் இயங்கும் போராட்டக்குழுக்களுக்கு முன்மாதிரியாக மாறி விட்டது.
மொத்தத்தில் உருவெடுத்த குறுகிய காலத்திலேயே உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது இந்த அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வியக்கத்தை ஒழிப்பதற்காகத்தான் தற்பொழுது மேற்குலகம் திட்டமிட்டு வருகிறது. அதற்கு மேற்குலக வால்களாக இருக்கும் அரபு நாடுகளைவைத்து முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்குலகம் ஆரம்பிக்கும் என்ற சந்தேகம் உலகில் எழுந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment