-டீன்பைரூஸ்-
காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரி அர்ராசித் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு..’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவின்போது -கலாபூஷணம் பாவரசு பதியத்தளாவ பாறூக் (கலைநதி) இனால் நேசித்து வாசிக்கப்பட்ட பா வாழத்து.
மதியை வாழ்த்தும் கலைநதி
மண் படைத்து
மரஞ்செடி படைத்து
விண் படைத்து
விளக்காய் மதி படைத்து
மன்னுயிர் படைத்து
மாபெரும் அருள் படைத்து
எண் படைத்து
எழுத்தும் படைத்து
எண்ணமதில் வாழுகின்ற
இறைக்கே முதற்புகழ்.
அல்ஹம்து லில்லாஹ்!
புத்தக விழாவுக்கு
புறப்பட்டு இங்கு வந்து
மெத்தச் சிறப்பாம்
மேலான தலையிங்கு
கரீம் என்று சொன்னால்
காத்தமண் விழிக்கும்
வரம் பெற்ற தமிழ் நடை
இவர்
வாயில் நடமாடும்
கலையழகு சிரிக்கும்
நிலையழகு விரிக்கும்.
பூக்கும் நகையில்
புகழ் மணக்கும்.
வெள்ளை உடைக்குள்
உள்ளம் விழிக்கும்
கல்விக்கு ஆசான்
கல்புக்கு மீசான்
அன்புள்ள தம்பிக்கு
அறிவுரை கூறி
எண்ணுக்கு வரலாறு சொல்லி
மண்ணுக்குப் பெருமை சேர்த்த
மஹ்றூப் கரீம் அவர்காள்!
கவிதைத் தொகுதியை
கைபிடித்துக்
கனமாயப்படித்து
மெய்முடித்து
மேலாம் சொல்வடித்து
இங்கே
அரங்கெடுத்து
அணி செய்யும்
அறிஞர் கலைஞர்காள்!..
வாசலிலே பூத்திருக்கும்
வண்ணப் பூக்களைப்போல்
அடியேன் முன் பூத்திருக்கும்
நேசமுள்ள நெஞ்சங்காள்!
உங்கள் அனைவருககும்
பாச நெஞ்சத்தின்
பணிவின் சலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்.!
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குத் தமிழழகு
மண்ணுக்கு மதியழகு
மலருக்கு மணமழகு
தரத்திற்கு தங்கமழகு
இன்று
நூலை வாங்கும் கரமழகு
அதற்காய்
வந்திருப்பதால் நீங்கள் அழகு!
மதியொன்று வந்து
மாலை நேரம்
இந்த மண்டபத்திற்குள்
வந்த மதி.. எந்த மதி..?
இந்த மதி..!
வானம் தந்த மதியல்ல.
இன்று
நூலைத் தந்த மதி
எட்டாத மதியல்ல
இவன்
எமக்கெல்லாம்
எட்டிய மதி!
இன்று
கவிதைத் தொகுதியின்
கல்யாண விழா
மதியன்பன் விதியன்பனாகி
‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு..’
ஏன்று சொன்னவன்.
திமிரையும் பார்க்காது
அவளைத் திருமணம் செய்து
36 குழந்தைகளுக்கு
மதியன்பன்
வாப்பாவாகி இருக்கிறார்!
கவிஞனின் கருவறைக்கு
குடும்பக் கட்டுப்பாடில்லை
அதனால்தான்
தட்டுப்பாடின்றி
தாராளமாய்ப் பெற்று
கவிதைக் குழந்தைகளை
கைகளுக்குத் தந்துள்ளான்!
கன்னித்தமிழைக் கற்பழித்து
கொலை வெறியாக்கி
நிலை தடுமாறி நிற்காமல்
தமிழுக்கு மதியன்பன்
தாலி கட்டியிருக்கிறான்
நோட்டுக்கள் செலவாகும்
இவன்
பாட்டுக்கள் வரவாகும்.!
கவிஞன்
காலங்களில் தரிசித்த
கசப்பான முகங்களுக்கு
எழுந்து
எழுது கோல் எடுத்து
விழுந்த மனிதத்திற்கு
விளக்கம் சொல்லியுள்ளான்.
விழுந்தவை முத்து
எழுந்தவை சொத்து!
சமுதாயத் தெருவில்
சந்தித்துக் கொண்ட
சாக்கடைகளுக்காய்
மதியன்பன்
மாந்திய கவிதைகள்
மருத்துவம்!
இவன் ஏந்திய
எழுதுகோல் ஆயுதம்
போராட்ட வடிவத்தினால்
ஆக்கரமிப்பை
அழித்திருக்கிறது!
பாரதி போல்
கவிதைக்குச் சாரதியான
இவனது
கவித்துவ வண்டி
சமுதாயத் தெருவில் ஓடி
போலிகளை உடைத்து
புத்தகத்தில்
புதிய வீடுகளைக் கட்டியிருக்கின்றன!
காலத்தால்
கவிஞன் இறப்பதில்லை.
கோலமிட்ட
இவன் கவிதைகள்
கொண்டு நீழும்
குடியமர்ந்து வாழும்1
தட்டையில் வைத்து
தந்த கவிச்சோறு
பட்டிணி போடாத
பதச்சோறு!
கவிதை என்பது
காட்டுப் பூவுமல்ல
கூட்டுச் சாம்பாருமல்ல
என்பதை
காட்டுவதற்காய்
மதியன்பனின்
கவிதைகள் விதைக்கப்பட்டு
இங்கே
அறுவடையாகி இருக்கின்றன!
மதியன்பனால்
நாடி பிடித்த
நாறிய பிலால்கள்
பாடிய தொகுதிக்குள்
கவிதைகளால்
கழுவப்பட்டுள்ளன!
வானத்தில் ஒரு மதி
இலக்கிய ஏனத்தில்
இவனொரு மதி.
அதனால்தான்
விடியலுக்காய்
விளக்கேற்றி இருக்கிறான்
மதியன்பா..!
உன்பாவுக்கு
என்பா வாழ்த்து
எனக்கூறி
இனிதே விடை பெறுகிறேன்.
நன்றி வஸ்லாம்!
Leave a comment