காத்தான்குடியில் வெள்ளிக்கிழமையும் வெளிச்சாப்பாடுதான்…?

food– MJ

காத்தான்குடி: தற்பொழுது காத்தான்குடியில் உம்மா, மூத்தம்மா, உம்மம்மா போன்ற பெயர்களுக்கு ஏற்ப தாய்மார்களைத் தேட வேண்டி இருக்கின்றது. இப்போதெல்லாம் மம்மி, உம்மி, டடா உம்மா, மமா, மம்மா என்றெல்லாம் தனித் தனி சுருதிகளில் தாய்மார்களுக்கு பெயர் வந்துவிட்டது.

அந்தப் பெயர்களுக்கேற்பவே அவர்களது செயற்பாடுகளும் இருந்துவருவதும் கண்கூடு. உலகின் வேகத்திற்கு ஏற்ப தங்களையும் தங்களது குடும்பத்திற்கு அர்ப்பணிக்கவேண்டி, அனைத்து தாய்மார்களும் பல தியாகங்களைச் செய்து வருகின்றனர்.

ஒரு காலம் இருந்தது. காலையில் எழுந்தால் தேங்காய்ப்பூ நறுமனத்துடன் பிட்டு தயாராக இருக்கும். இடியப்பமும் சொதியும், ரொட்டியும் சம்பலும்…அப்பாடா என்ன ஒரு சுகம் என்ன ஒரு காலம்.

விறகு இல்லாவிட்டாலும், தென்னமட்டையை, தேங்காய்ச் சிரட்டையைச் சேகரித்தாவது அடுப்புமூட்டி, பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவை செய்து கொடுப்பதற்கு அன்றைய தாய்மார்கள் காட்டிய ஆர்வம் இருக்கிறதே….! வார்த்தைகள் இல்லை.

food

இப்போதெல்லாம் பிள்ளைகளிடம் கெண்டீனில் வாங்குவதற்காக பணத்தைக் கொடுத்தனுப்பினால் சரி என்றளவுக்கு நிம்மதிப்பெருமூச்சுவிடுகின்றனர் இன்றைய நவீன மம்மிமார்கள்.

பகல்சாப்பாடு சகல வீடுகளிலும் சமைக்கப்படும். இருந்தும் வேலையிலிருந்துவரும் கனவன், பாடசாலையிலிருந்துவரும் பிள்ளைகள் எப்படியோ சாப்பிட்டுவிடுவர்.
இரவுச்சாப்பாடு என்ன…? டேக் ஏ வே…?

ஆம். அதிகமான வீடுகளில் இரவுச்சாப்பாடு வெளியில்தான். அப்பம், முட்டையப்பம், ரொட்டிக்கொத்து, இடியப்பக்கொத்து, அல்லது பக்கட் நூடில்ஸ்….இத்துடன் அன்றைய நாளும் நிறைவடைகிறது.

puttu

இதுபோக..வெள்ளிக்கிழமை என்றால் காத்தான்குடியில் ஓர் பெருநாள் போன்றுதான் இருக்கும். வெள்ளிக்கிழமை என்றாலே கடை சாப்பாடுதான். பார்சல் எடுத்து சாப்பிட்டுவிட்டு, கடற்கரைக்குப்போய் மாலை வந்தால், வியாழக்கிழமை இரவு கழுவி கவிழ்த்து வைத்த சட்டி அப்படியே இருக்கும். மீண்டும் ஓர் சின்னதாக டேக் ஏ வே.

ஒரு காலத்தில் வெள்ளிக்கிழமை என்றால் பாடசாலைவிட்டு வீடு வரும்போதும், பள்ளிக்கு ஜூம்ஆவுக்குச் செல்லும்போதும், அன்றைய தாய்மார்களின் தாளிப்பு மூக்கைத் துளைக்கும். எந்தவொரு ஏழைவீட்டிலும், இறைச்சி சமைத்து உண்ணப்படும். மஞ்சல் சோறு, பால்சோறு என்றும் கறுவேப்பிலை, ரம்பஇலை, இஞ்சி, பூண்டு என்றும் தாளிப்பின் நறுமணம் மூக்கைத் துளைக்கும்.

appam hopper

இப்போதெல்லாம் அந்த நறுமணத்தை நுகர முடிகிறதா? ‘டை’களையும், அஜினமோட்டோவையும், கெட்சப்பையும் கலந்து சீமெந்துக் கலவை மாதிரி எண்ணெய்யில் போட்டெடுத்து அதுக்கு பல பெயர்களை வைத்து மக்கள் கவரப்படுகின்றனர். பல ஆயிரங்களை அள்ளி வீசினாலும், அந்த சுவையை உணர முடியாது! அந்த கறுவேப்பிலை, ரம்பஇலை வாசணையை துளியளவு நுகரவும் முடியாது!!

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் 3 வேளையிலும் சோறு சாப்பிட்டவர்கள், அல்லது இரு வேளையிலும் சோறுசாப்பிட்டவர்கள் இன்றும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். ஆனால் ஒருவேளை சோறு சாப்பிட்டாலும் ஆரோக்கியமற்றவர்கள் இன்றைய காலத்தில் இருக்கின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் சோறு அல்ல!

food

ஆரோக்கியமான சாப்பாடு வீடுகளில் சமைக்கப்பட வேண்டும். சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி அல்லது வீட்டு வேலைகளையாவது செய்து கொள்ள வேண்டும்.

பழங்களை உண்பதென்றாலும் அதற்கும் கட்டர் தூள், உப்பு, மிளகுத்தூள் இட்டு உண்ணும் மடமையான பழக்கவழக்கங்களே இன்றும் எமது மக்களிடத்தில் இருந்து வருகிறது.

என்னதான இன்று திருமணம் செய்து பொண்டாட்டி பிள்ளைகளோடு சந்தோசமாக வாழ்ந்தாலும், தனது உம்மா, உம்மம்மாவின் கையால் சமைத்த சாப்பாட்டை (மனைவிக்குத் தெரியாமல்) சாப்பிட்டு வருவதில் பல கனவன்மார்களுக்குத்தான் எத்தனை சந்தோசம்.

நவீன மம்மிமார்கள் வேலைப்பழுக்கள் அதிகமிருப்பதாக கூறிக்கொள்கின்றனர்.

மிஞ்சிப்போனா 3 பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கும் இன்றைய நவீன மம்மிமார், எம் அன்றைய உம்மாமார்களை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

family

ஏழு, எட்டு பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, எங்களை ஆளாக்கி இருக்கின்றனர். அன்று அரிசி இடித்து, மா அரைத்து, உடுபிடவைகளை சவர்க்காரத்தைக்கொண்டு கைகளால் கழுவி, நடைநடையாக நடந்து எங்களுக்காக பாடுபட்டிருக்கின்றார்கள்.

குழந்தைகளின் சாணைத் துணியிலிருந்து பாடசாலைக்கு அனுப்பும் வரைக்கும் எத்தனை சிரமங்கள். இன்று மிஞ்சிப்போனா 3 குழந்தைகளப் பெற்றுவிட்டு, வேளைப்பழு என்று ஏப்பமிடுகின்றனர். ‘பம்பர்ஸ்’கள்தான் வேண்டியளவு கிடைக்கிறதே இப்போது.

இன்று, சலவை இயந்திரம், கொச்சிக்காய்த்தூள் பக்கற்கள், போக்குவரத்துச் சாதனம் இப்படியே இலகுவாக கைக்குள் அடங்கிவிட்டன.

எனவே, நவீன மம்மிமார்கள் தயவு செய்து பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுங்கள். உங்களால் முடியுமான இனிப்பு வகைகள், டெஸேர்ட் வகைகளை செய்து கொடுங்கள். அவர்களுக்கும் செய்யும் முறைகளைக் காண்பித்துக் கொடுங்கள்.

இப்போதெல்லாம் ரவை செய்வதிலிருந்து வட்டிலப்பம் வரைக்கும் கடைத்தெருவுக்குச் சென்றுவிட்டது. நவீன மம்மிமாருக்கு இப்பதார்த்தங்களைச் செய்வதற்கு தெரியாமல் இருக்கின்றது. என்ன வேண்டுமென்றாலும் கடைதான் முதலில் எங்கள் கண்ணுக்குத் தோன்றுகின்றது.

இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் புதிய புதிய நோய்கள் எல்லாம் அன்றைய காலத்தில் இருக்கவில்லை. ஆனால் இன்று கேள்விப்படாத வருத்தங்களாகவே இருக்கின்றன.

ammi

அன்றும் நாலு நேரங்கள் வயிறுமுட்ட சாப்பிட்டு மகிழ்ந்தவர்களும் இருந்தனர். ஆனால் அன்றைய உணவுப் பழக்கவழக்கங்களுக்கும், இன்றைய உணவுப்பழக்கவழக்கங்களுக்கும் மத்தியில் உள்ள எண்ணற்ற வித்தியாசங்களே ஆரோக்கியமற்ற ஓர் சமூகத்தை உருவாக்கி இருப்பதை உணரமுடியும்.

எனவே, நவீன தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுகளை வீட்டில் செய்யுங்கள். அதில் அதிக பிரயத்தனம் எடுங்கள். உங்களையும், உங்கள் குழந்தைகளையும் ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கொண்டு பாதுகாப்புப்பெறுங்கள்.

கடை உணவுகளை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளுங்கள்.

old kettle

Published by

Leave a comment