கொழும்பு: இலங்கையில் அண்மைக்காலமாக இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல்வேறு நடவடிக்கைகள் தீய சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையாகும்.
இதன் தொடராகவே சில மாதங்களுக்கு முன்னர் அளுத்கமை, பேருவளை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் காணப்பட்டன. நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்த இத்தாக்குதலைக் கண்டித்து பல நிறுவனங்களும் அமைப்புகளும் அறிக்கை விட்டதோடு மாத்திரம் நின்றுவிடாது களத்தில் இறங்கி செயற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவின. இவ்வனைத்து செயற்பாடுகளும் பாராட்டுக்குரியனவாகும்.
ஏனைய அமைப்புகளோடு இணைந்து உடனடி நடவடிக்கைகளையும் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, 25.08.2014 ஆம் திகதி நடைபெற்ற அதன் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் Aluthgama Development Foundation (ADF) நிறுவனத்திற்கு ரூபா 15.4 மில்லியன் மற்றும் Mulim Aid நிறுவனத்திற்கு ரூபா 4.3 மில்லியன் வழங்க தீர்மானித்தது. இன்ஷா அல்லாஹ் இவை அளுத்கமை, வெலிப்பன்ன பிரதேசங்களில் பாதிக்கப்பட்டோருக்கு பகிர்ந்தளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரது முயற்சிகளையும் அங்கீகரித்து நல்லருள் பாலிப்hனாக, மேலும் நாட்டில் அமைதியையும் சுமூக நிலைமையையும் ஏற்படுத்துவானாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெக் எம்.எம்.ஏ முபாறக் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by


Leave a comment