திருகோணமலை: கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரத்தைப் பூதாகரப்படுத்தி அரசியல் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சியைக் கைவிடுமாறு கிழக்கு முதல்வர் நஜீப் ஏ. மஜீத் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
திருமலை கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் மாகாண சபை உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் பதிலளித்த முதல்வர், இந்தப் பிரச்சினையை மிக அவதானமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை விலியுறுத்தியுள்ளார்.
இனங்களை உசுப் பேற்றி முரண்பாடுகளைத் தோற்றுவிப்பது ஆரோக்கியமானதல்ல எனவும், இந்த நாடு கடந்த காலங்களில் சந்தித்த அவலங்களைக் கருத்திற் கொண்டு மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் கருத்துத் தெரிவிக்க பழகிக் கொள்ள வேண்டும். கருமலையூற்று பள்ளிவாசல் தொடர்பில் உங்களுக்கிருக்கும் மன உணர்வுகளை நான் மதிக்கின்றேன்.
இந்தத் தொகுதியை நீண்ட காலம் பிரதிநிதித்துவப்படுத்தியவன் என்ற வகையிலும் கிழக்கு முதல்வர் என்ற வகையிலும் அந்தப் பள்ளி தொடர்பில் அதேயளவு அக்கறை எனக்குமுண்டு. இந்த விவகாரம் அறிந்து, அந்த இடத்துக்கு விரைந்து சென்று அதனைப் பார்வையிட்டு, இராணுவ அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினேன். இந்தப் பள்ளிவாசலை இரண்டு கிழமைக்குள் புனரமைத்துத் தருவதாக இராணுவம் உறுதியளித்துள்ளது.
அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசல் விடயத்தில் நாம் மிகவும் கவனமாக காரியங்களை கையாள வேண்டியுள்ளது. வெறுமனே அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நாம் சபையில் கூப்பாடு போட முடியாது.
நான் பட்டம், பதவிகளுக்காக அலைந்து திரிபவன் அல்ல. பதவியும் பட்டமும் இறைவனின் அமானிதச் சொத்துக்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என் மீது கொண்டுள்ள நம்பிக்கையினாலே இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கினார்.
முதல்வர் பதவிக்காக எத்தனையோ பேர் ஆளாய்ப்பறந்தும் இறைவனின் உதவியால் எனக்கு அது கிடைத்தது. எனவே நான் இறைவனுக்குப் பொருத்தமான வகையில் இந்தப் பதவியை பயன்படுத்துகின்றேன். நானும் ஐவேளை தொழுபவனே. இஸ்லாத்துக்கு மாற்றமான முறையில் என் மனச்சாட்சிக்கு விரோதமாக என் அறிவுக்கெட்டிய வரையில் நான் நடந்ததில்லை என்றார் முதல்வர் நஜீப்.
Published by
![NAJEEB-A-MAJEED[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/najeeb-a-majeed1.jpg?w=150&h=135)
Leave a comment