வான்தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்! ஹமாஸின் ரொக்கட் இஸ்ரேலுக்குள் வீழ்ந்து வெடித்தது!!

israel gaza– MJ

டெல் அவிவ்: திங்கட்கிழமை கெய்ரோவில் இடம்பெற்ற இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் தரப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 6 நாட்களின் பின்னர் நேற்று செவ்வாய்கிழமை மாலை இஸ்ரேல் காஸாவை நோக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

காஸா எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலின் ஆர்டிலரி தளங்களில் இருந்து ஆர்டிலரி ரொக்கட்டுக்கள் காஸாவுக்குள் ஏவப்பட தயாராக இருக்கின்றன.

பலஸ்தீனத்தின் கான்யூனிஸ் மற்றும் ஸியோடன் ஆகிய இடங்களில் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஹமாஸின் நவீன ரொக்கட் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க, அயர்ன் டோம் அதிகப்பிரயத்தனம் எடுத்துவருகிறது.

இஸ்ரேல் தங்களது ஆயுத தளபாடங்களையும், படையினரையும் மீண்டும் தயார் நிலைப்படுத்தும் தந்திரங்களில் ஒன்றாகவே இத்தகைய யுத்த தற்காலிக நிறுத்தங்களை மேற்கொள்வதாக பல சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. அயர்ன் டோமின் ராடர் சமிக்கைகளை ஊடறுத்து இஸ்ரேலுக்குள் விழும் புதிய நவீனரக ரொக்கட்டுக்களை தற்பொழுது ஹமாஸ் கையாண்டுவருவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தந்திரோபாயமாக, தற்காலிக யுத்தநிறுத்த காலங்களில் இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்றது.

இஸ்ரேலின் ‘ஹொஃப் அஸ்கெலன்’ எனும் நகரின் வர்த்தக தொகுதியில் ஹமாஸின் ரொக்கட் வீழ்ந்து வெடித்தாகவும், சமிக்கை ஒலியில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருந்ததால் உயிராபத்து இடம்பெறவில்லை எனவும், மேலும் இரு ரொக்கட்டுக்களை அயர்ன் டோம் தள எதிர்ப்பு ஏவகணைகள் செயலிழக்கச்செய்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

இதுவரைக்கும் பலஸ்தீனத்தின் 15 இடங்களில் வான் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தாக்குதலில் இரு சிறுவர்கள் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன் அறிவித்துள்ளது.

Published by

Leave a comment