நியூயோர்க்: முதலீட்டாளர்களின் ரூ. 20 ஆயிரம் கோடியை ஏமாற்றியதற்காக சிறையில் இருக்கும் சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராயின் சொத்துக்களை வாங்க புருனே சுல்தான் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்களிடம் திரட்டிய ரூ. 20 ஆயிரம் கோடி ரூபாயைத் திரும்பத் தரத் தவறியதாக சஹாரா குழுமத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் கோரி சுப்ரதா ராய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ரூ. 10 ஆயிரம் கோடி ரூபாயை ஜாமீன் தொகையாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சிறையிலிருந்த படியே, வெளிநாடுகளில் உள்ள தனது சொத்துக்களை விற்க சுப்ரதா ராய் முயற்சி செய்து வருகிறார்.
அதன்படி, லண்டனில் உள்ள க்ராஸ்வெனர் ஹவுஸ் ஹோட்டல், நியூயோர்க்கில் உள்ள பிளாசா ஹோட்டல் மற்றும் ட்ரீம் ஹோட்டல் ஆகியவைகளை விற்பது தொடர்பாக ராய் பலரிடம் பேச்சுவார்தை நடத்திவருகிறார்.
இந்நிலையில், ராயின் இந்த சொத்துக்களை வாங்குவதற்கு புருனே சுல்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான விலையையும் அவரே நிர்ணயத்துள்ளதாகவும் அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புருனே சுல்தானுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம் ஒன்று இந்த 3 ஹோட்டல்களையும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அடுத்த வாரத்தில் இரு தரப்புக்கும் இடையேயான ஒப்பந்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by


Leave a comment