காஸா: துரத்தும் மரணங்கள்..

gaza (4)– SHM

காஸா: பலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நிகழ்த்திய இனப்படுகொலை எத்தனை எத்தனையோ துயரங்களை ஆறாத ரணங்களை ஏற்படுத்தியுள்ளது. காஸா பகுதியில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் இயக்கத்தினரின் நிலைகளை இலக்கு வைத்து தாக்குதவதாக கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஒரு மாத காலம் வேட்டையாடி ஓய்ந்துள்ளது இஸ்ரேல்.

இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலில் 2 ஆயிரம் பலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். 10 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். சுமார் 2 லட்சம் பேர் அகதிகளாகினர். இஸ்ரேலின் இந்த வெறியாட்டத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரது மரணமும் துயரக் கதைகளை தாங்கியதாக இருக்கிறது.

அப்துல்லாஹ் அபு ஷபாப்.. இவரது தாய்நாடு பாலஸ்தீனம்தான். ஆனால் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பெற்றோரை பறிகொடுத்த கையோடு சிரியாவுக்கு அகதியாகப் போனார். சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த நிலையில் மீண்டும் பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தஞ்சமடைந்தார். இந்த நிலையில் இஸ்ரேலின் குண்டுவீச்சில் சிக்கிய அப்துல்லாஹ் அபு ஷபாப், தன் தாய் மண்ணிலேயே உயிரிழந்தார்.

இதேபோல் சிரியாவில் இருந்து அகதிகளாக வெளியேறியவர்களுக்கு உதவிய 21 வயது மாணவர் ஒருவரும் இஸ்ரேலின் குண்டு வீச்சில் பலியானார். இந்த மாதம்தான் அந்த மாணவர் பட்டம் பெற இருந்தார்.அதற்குள் அவரது உயிரை இஸ்ரேல் பறித்துக் கொண்டது.

ஃபரீத் யூசுப் என்பவரும் இதேபோல் சிரியாவை விட்டு வெளியேறி மீண்டும் தாய் மண்ணான பலஸ்தீனத்தின் காஸாவுக்கு திரும்பியவர். இந்த மண்ணில் புதியதாக வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்த நிலையில் இஸ்ரேல் அதை நிர்மூலமாக்கிவிட இப்போது நண்பர் ஒருவரின் அரவணைப்பில் இருக்கிறார். அவர்களைப் பொறுத்தவரை சிரியாவிலும் மரணம் துரத்தியது.காஸாவிலும் மரணம் துரத்துகிறது என்கிற சோகம்தான் ஒரே பதிலாக வெளிப்படுகிறது.

இப்படி இஸ்ரேலின் வேட்டையில் தப்பி ஓடி சிரியாவில் அடைக்கலமாகி. அங்கும் யுத்தம் வெடிக்க மீண்டும் காஸாவுக்குள் வந்து இஸ்ரேலின் கொடுங்கரங்களில் மாண்ட உயிர்கள் கணக்கிலடங்காது என்கின்றனர் காஸாவாசிகள்.

Published by

Leave a comment