கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார இரட்டை சதம் அடித்து அசத்திய நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் பிரட்மேன் சாதனையையும் அவர் தகர்த்துள்ளார். ஒரே டெஸ்ட்டில் 190 ஓட்டங்களுக்கும் மேல் ஓட்டங்கள் எடுத்த சாதனையில்தான் பிரட்மேனை முந்தியுள்ளார்.
பாகிஸ்தானுடனான தொடரின், முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்றுஇ குமார் சங்ககார இரட்டை சதம் அடித்தார். அவர் 191வது ஓட்டத்தை எட்டியபோது அவுஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரட்மேனின் ஒரு சாதனையை முறியடித்தார்.
உலகிலேயே அதிகம் முறை 190 ஓட்டங்களுக்கும் மேல் எடுத்த டெஸ்ட் வீரர் என்ற பிரட்மேனின் சாதனையை சங்ககார முறியடித்து முதல் இடத்தை பிடித்தார். பிரட்மேன் 12 முறை 190 ஓட்டங்களைக் கடந்துள்ளார். சங்ககார 13வது முறையாக 190 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.
குமார் சங்ககார
இந்த சாதனையை தொடர்ந்து தனது 10வது இரட்டை சதத்தை சங்ககார பூர்த்தி செய்தார். 12 டெஸ்ட் இரட்டை சதங்கள் அடித்து பிரட்மேன் முதலிடத்திலுள்ள நிலையில், இரட்டை சதத்தின் அடிப்படையில் சங்ககார இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பிரட்மேன் 64 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தனது 12வது இரட்டை சதத்தை பெற்றிருந்தார்.
பிரட்மேன் தனது கிரிக்கெட் வாழ்வில் 190 ஓட்டங்களுக்கு மேல் ஸ்கோர் செய்தபோதெல்லாம், இரட்டை சதமும் பெற்றுள்ளார். இதனால் அவர் 12 முறை இரட்டை சதங்களை விளாச முடிந்தது. ஆனால் சங்ககாரா 190 ஓட்டங்களை கடந்த பிறகு 3 முறை இரட்டை சதத்தை எட்ட முடியாமல் போனதால், இரட்டை சத சாதனையில் பிரட்மேனை முந்த முடியவில்லை.
சங்ககார இருமுறை 192 ஓட்டங்களில் அவுட் ஆகிய நிலையில் ஒருமுறை 199 ரன்களை எடுத்திருந்த நிலையில் மறுமுனையில் அனைத்து விக்கெட்டுகளும் விழுந்ததால் அவரால் இரட்டை சதம் அடிக்க முடியாமல்போனது.
இதற்கிடையில் இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் தனது சதத்தை தவறவிட்டார். இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி சதங்களைப் பெற்றுவந்த மெத்யூஸ், இன்றைய ஆட்டத்தில் 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சங்கக்காரவின் விக்கட் வீழ்ந்ததும், வேகமாக இலங்கையணியின் விக்கட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சயீட் அஜ்மல் 5 விக்கட்டுக்களைப் பெற்றார்.
Leave a comment