அமைச்சர் அய்யாவுக்கு!

poem 000கவிஞர் காத்தூரி

அரசியல்பயணத்தின்
அசராத சாதனைகள்
அடுக்கடுக்கா எழுதி எம்மை
அசர வெச்ச
அமைச்சர் அய்யா !
உங்க ‘சோர்விலாச்சொல்’ பார்த்து
வாழ்த்த உட்கார்ந்தா
வந்த கவித இது
வழுவாம எழுதிப்புட்டேன்
ராமருக்கு பாலம்கட்ட
மண்சுமந்து சேவசெஞ்ச
அணிலுக்கு அடுத்தபடி
புத்தகம்வித்த காசில்
பாலஸ்தீனப்பாலருக்கு
பால்மா கொடுத்து நீங்க
வரலாற்று ஏட்டோரம்
வரியொண்ட போட்டிகளோ ?

‘சோர்விலாச்சொல்’ எழுதி
பாராளு மன்றத்தில
பகன்ற கத சொல்லிட்டீக
‘செதுக்கிய செயல்’ எழுதி
செயல்வீரம்
சொல்வதெப்போ ?

அரசாளு மன்றத்தில
அசராம பேசுறது
எதிர்கட்சி வேலையெண்டு
எக்குத்தப்பா நினச்சிட்டனோ ?
ஆளும்கட்சி ஆனாலும்
ஆழமாப்பேசி
இருபது வருசத்துல
இதமட்டும்செஞ்சு நீங்க
புதுவிதி படைச்சிகளோ!
புரிய வைப்பீகளா?

எப்பவுமே ஆளும்கட்சி
என்றே இருப்பதல
இருக்கும்இடம்மறந்திடிச்சோ?
புரியாமக்கிடக்கெனக்கு
புரிஞ்ச யாரும்சொல்லுங்கப்பா?
நீங்க பேசியத
வாசிக்க வாசிக்க
மயிர்காலும் உயிர்த்துப்போயி
உணர்வோட எழுந்து நிற்கும்
உங்க வாய்ச்சொல்லோ
வானளாவ உயர்ந்து நிற்கும்!

உருப்படியா இதுவரைக்கும்
ஊருக்கு செஞ்சதென்ன
கேள்வி வந்தவுடன்
உணர்சிகளோநாணி நிற்கும்
எழுந்த மயிர்கோணி நிற்கும்.

அமைச்சுப்பதவியில
அசையாம உட்கார்ந்து
புரியாத சொல்பேசும்
புரட்சி வீரன்
நீங்க அய்யா!

உங்க பக்க நியாயங்கள்
ஒருபோதும்பிழைக்காம
கதைகதையா சொல்லி எங்க
கல்பிலேயே இருக்குறீங்க.
இருபது வருசத்து
அரசியல்பேச்சுகள
இருநூறு பக்கத்து
புத்தகமா போட்டீக
உங்க எழுத்தெல்லாம்
சொல்லும்கத பார்கேக்க
ஒண்டு மட்டும்
உண்மை அய்யா !

நீங்களும் எங்க பசி
போக்குவதாச்சொல்லி சொல்லி
என்கவீட்டுச்சட்டிக்குள்ள
அள்ளி அள்ளி போட்டதெல்லாம்
கறிக்கு உதவா
வெறும் ஏட்டுச்சுரக்காதான்.

இலக்கியத்து வாசி நீங்க
இருக்கிற இடத்தால
எப்பவுமே சுகவாசி
வக்குப்போட்ட சனத்துக்கு
புரிஞ்ச பணி
குறஞ்சது பத்துப்பக்கம்
புத்தகமா போட்டுடுங்க
பாழாப்போன
மனசு கொஞ்சம்
பதறாம ஆறிப்போக.

Published by

Leave a comment