அரசில் முஸ்லிம் காங்கிரஸ் – ULMN முபீன் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு:  அரசாங்கத்தில் ஒரு பங்காளி கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து இருப்பதில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அரசை விட்டு வெளியேற வேண்டுமென்று ஒரு சாராரும் அரசை விட்டு வெளியேறக் கூடாது என்று இன்னொரு சாராரும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனி ஆட்சியில் இலங்கை முஸ்லிம்கள் சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளால் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு உட்பட்டு வருகின்றனர். இதன் உச்ச கட்டமாக அண்மைய அளுத்கம தர்ஹா டவுன், பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தேறிய  வன்முறைகளின் பின்னர் அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பது தொடர்பான எதிர் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

இதேவேளை அரசாங்கத்தில் பங்காளியாக இணைந்திருந்தாலும் அரசுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வேப்பங்காயாகவே உள்ளது. அரசிலுள்ள அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு அடிக்கடி முஸ்லிம் காங்கிரஸ்  உள்ளாகி வருகின்றது.அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும்  ;பல தடவைகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு பகிரங்கமாகவே கூறியுள்ளார். அதேவேளை முஸ்லிம் காங்கிரஸால் ஆட்சியின் பங்காளியாக இருந்து தான் சார்ந்த சமூகத்துக்கு எந்த அபிவிருத்தி பணியையும் செய்ய முடியவில்லை, முஸ்லிம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பும் வழங்க முடியவி;ல்லை, முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற பிரதிநிதிகள் பிரதி நிதித்துவப்படுத்தும் பல பிரதேசங்களில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைமைப் பொறுப்பு அல்லது அது தொடர்பான அதிகாரங்களோ அரசாங்கத்தால் ஒருசில பிரதேசங்கள் தவிர பெரும்பாலான பிரதேசங்களில் வழங்கப்படவில்லை. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் அதாவுல்லா, அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் போன்றவர்கள் தங்கள் பிரதேசங்களுக்குச் செய்த அபிவிருத்திப் பணிகளின் அளவுக்கு தாம் சார்ந்த பிரதேசங்களுக்கு அபிவிருத்தி செய்யும் சந்தர்ப்பத்தை அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கவில்லை. என்றாலும் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்தே உள்ளது என்றால் அதற்கு ஒரு அடிப்படை காரணம் இருக்க வேண்டும்.

அன்மைய அளுத்கம வன்செயல் தொடர்பாகவும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள், பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் முன்கொண்டு சென்றதிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கணிசமான பங்கை ஆற்றியது. இது அரச உயர் மட்டத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. பகிரங்கமாக சில அமைச்சர்கள், பத்திரிகைகள் மற்றும்; சிங்கள தீவிரவாத அமைப்பான பொதுபல சேனா உள்ளிட்ட சில தரப்புகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நாட்டை காட்டி கொடுத்து விட்டார், அவர் ஒரு ஒரு தேசதுரோகி என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த 15.07.2014 அன்று கொழும்பு கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர், அவ்வமைப்பின் நிருவாக பணிப்பாளர் டிலந்த பெரேரா ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீதியமைச்சர் ஹஊப் ஹக்கீமை உடனடியாக வெளியேற்றவேண்டும் என்று அரசாங்கத்துக்கு கோரிக்கையை முன்வைத்தனர் இத்தனை எதிர்புகளுக்கு மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு இருக்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக போட்டியிட்ட 2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படவில்லை, மாறாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவை ஆதரித்தே செயற்பட்டது. தொடர்ந்து 2010ம் ஆண்டு நடை பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து முன்னாள் இரானுவ தளபதி சரத் பொன்சேகாவின் வெற்றிக்கே பாடுபட்டது. மேற்சொன்ன இரண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தனக்கு ஆதரவு வழங்குமாறு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம் காங்கிரஸிடம் நேரடியாக கோரி;க்கை விடுத்திருந்தும் அது முஸ்லிம் காங்கிரஸால் நிராகரிக்கப்பட்டது.

இறுதியாக நடைபெற்ற 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைக்காது என்று தெரிந்தும் அதன் யானைச் சின்னத்திலேயே போட்டியிட்டது.  அதன் பின் நடைபெற்ற கல்முனை மாநகர சபை, கிழக்கு மாகாண சபை, வட மாகாண சபை, வட மேல் மாகாண சபை, மத்திய மாகாண சபை, மேல் மாகாண சபை மற்றும் தென் மாகாண சபை போன்ற தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே தனது மரச்சின்னத்தில் போட்டியிட்டது. ஆக இங்கு பிரதானமாக கவனிக்கதக்கது என்னவெனில்  இதுவரையில் நடை பெற்ற பல்வேறு தேர்தல்களில் வடமத்திய மாகாண சபை தவிர ஏனைய அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்துப் போட்டியிட்டது என்பதே உண்மையாகும். அத்துடன் இரண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அதன் பின்னரான பாராளுமன்ற தேர்தலிலும் அரசுக்கு எதிராக போட்டியிட்டமைக்கு பிரதான காரணம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிங்கள பெரும் தேசியவாத நிலைப்பாடும் தமிழ் முஸ்லிம் சிறுபான்மைக் கெதிரான கொள்கைப் போக்குமே ஆகும். அத்துடன் மேற்சொன்ன மூன்று பிரதான தேசியத் தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக கடும் விமர்சனங்களை முஸ்லிம் காங்கிரஸ் தனது மேடைகளில் முன்வைத்தது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பான வேட்பாளர்கள் வெற்றி பெறும் போது முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படவுள்ள பல்வேறு பாதக நிலைமைகளை அப்பிரச்சாரத்தில் எதிர்வு கூறியிருந்தது. அவ்வாறு எதிர்வு கூறியிருந்த பல்வேறு அநீதிகளும் வன்செயல்களும் தற்போது முஸ்லிம் சமூகத்துக்கு நாடு முழுக்க நடைபெற்று வருகின்றன. அப்படி என்றால் ஏன் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்தது?

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான உறவு மிக இறுக்கமாக இருந்தது. ஹக்கீம் யானையை விட்டு இறங்கமாட்டார் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதேவேளை தென்னிலங்கையில் சில பகுதிகளில் சில முஸ்லிம் பிரதேசங்களில் திட்டமிட்ட வன்முறை சம்பவங்கள் இனந்தெரியாதோர் என்ற போர்வையில் அரங்கேறின.நாட்டில் நிலவிய நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பிரபாகரனை அழித்த துட்டகைமுனு என்ற கீ;ர்த்தி பிரச்சாரம் நாடு முழுக்க முன்னெடுக்கப்பட்டது. எதிர்க் கட்சியிலிருந்து பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் காசு கொடுத்தும் பல்வேறு குற்றப்பின்னணிகளை வைத்து மிரட்டியும் ஆளும் கட்சிக்கு உள்வாங்கப்பட்டனர். சிங்கள பெருந்தேசிய வாதம் வலிமை பெற்றது. இதனிடையே கிறீஸ் மனிதன் வடக்கு கிழக்கு முழுவதும் மக்களை கலவரப்படுத்திக் கொண்டிருந்தான். இந்த கிறீஸ் மனிதன் பின்னனியில் இரானுவமே செயற்படுவதாக மக்களும் எதிர்கட்சியினரும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்நிலையில் பிரதான எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மிக மோசமாக பலமிழந்து கொண்டு போனது. இக்காலகட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களால் எந்தவிதமான அபிவிருத்திப் பணியையும் செய்யமுடியவில்லை. சிறு இடமாற்றங்கள் கூட செய்ய முடியாத இயலாமை காணப்பட்டது. இதேவேளை அமைச்சர் றிஷாட், அதாவுல்லா  போன்றோருக்கு அபிவிருத்திக்காக பெருந்தொகை நிதியும் வேலை வாய்ப்புக்களும் வழங்குவதனூடாக முஸ்லிம் காங்கிரஸை பிரதேச மட்டத்தில் செல்லாக்காசாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களால் தமது கட்சி அரசாங்கத்தில் இனைந்து பிரதேச அபிவிருத்தியையும் வேலை வாய்ப்பiயும் வழங்க வேண்டுமென்ற பரவலான கருத்து முன் வைக்கப்பட்டது. முஸ்லி;ம் காங்கிரஸின் அதி உயர் பீட கூட்டங்களில் அரசுடனான பகைமை அரசியலை விடுத்து இணக்க அரசியலுக்கு செல்ல வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. அரசில் இணைவதற்கு கட்சியின் தலைவர் உட்பட அரசியல் உயர் பீட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை இது நீண்ட வாதப்பிரதிவாதமாக தொடர்ந்தது. அரசுடன் இணைவது தொடர்பான தமது விருப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள்  சிலரும் வெளிப்படுத்தி இருந்தனர்.

இவ்வேளையில் தான் மிகப்பெரும் சுனாமிப் பேரலையொன்று கட்சியைத் தாக்கப்போகிறது என்ற அபாய அறிவிப்பு தலைவருக்கு அலாரம் அடித்துச் சொல்லப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸை மீண்டும் உடைத்து சில பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு தன்னுடன் இணைத்துக் கொள்;ள இருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பதவியிலிருந்து தலைவர் ஹக்கீமை அகற்றி அவ்விடத்துக்கு வேறொருவரை கொண்டுவர அரசுக்குள் சதி   செய்யப்படுவதாகவும் உடன் இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்குமாறும் ஆளும் கட்சியிலுள்ள முக்கிய அமைச்சர் ஒருவரே தலைவர் ஹக்கீமிடம் எச்சரிக்கை செய்திருந்தார். அத்தோடு அந்த அமைச்சர் அரச உயர் மட்டத்தையும் சந்தித்து இந்நடவடிக்கை தொடர்பான பிழையை சுட்டிக் காட்டி ஹக்கீமிடம் தான் மக்கள் உள்ளார்கள் ஹக்கீமை விட்டு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசுக்குள் உள்வாங்கினால் அது நமக்கு முஸ்லிம் மக்களிடம் பாரிய பின்னடைவையும் எதிர்ப்பையுமே ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டி இருந்தார்.

ஆக மீண்டும் கட்சி உடைந்து பலவீனமாவதை தவிர்த்தல், பலம் பொருந்திய ஆட்சியாளருடன் எதிர்ப்பை கைவிட்டு இணக்கத்திற்கு வரல், தென்னிலங்கை முஸ்லிம்கள் உள்ளிட்ட இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், முஸ்லிம்காங்கிரஸின் ஆதரவுப் பிரதேசங்களின் அபிவிருத்தியை அடைந்து கொள்ளல், அரசாங்க வேலைவாய்ப்பை  பெற்றுக் கொள்ளல், போன்ற நியாயாங்களை மையப்படுத்தியே அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்தது. ஆனால் இதற்குப் பெரும் விலையாக 18வது திருத்தம் என்ற ஜனநாயக விரோத சட்ட மூலத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. அரசில் இனைந்தது தொடர்பாகவும் 18வது திருத்தத்தை ஆதரித்தது தொடர்பாகவும் எனது(கட்டுரையாளர்) பலமான எதிர்ப்பை கட்சித்தலைவர் ஹக்கீமிடம் நேரடியாக தெரிவித்திருந்தேன்.அதற்கு தலைவர் ஹக்கீம் ‘தனக்கு கட்சி மீண்டும் உடைவதை தவிர்த்து கட்சியைப் பாதுகாக்க வேறுவழி இருக்கவி;ல்லை’ என கைசேதப்பட்டார். அரசுடனான இணக்க அரசியலூடாக நிறைவேறுமென்று எதிர்பார்க்கப்பட்ட மேற்சொன்ன அரசுடன் பங்காளியானமைக்கான எதிர்பார்ப்;புகள் நிறைவேறவில்லை இருந்தாலும் அரசிலிருந்து வெளியேறும் முடிவையும் முஸ்லிம் காங்கிரஸால் எடுக்க முடியாமைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் காணப்பட்டன.

1.   தென்னிலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு இதனை சற்று விரிவாக நோக்குவோம்:- அரசுடன் இணைந்தமைக்கான பிரதான காரணம் தென்னிலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு ஆகும். சிங்கள பெரும் தேசியவாதம் ஊட்டி வளர்க்கப்படுவதும் அதன் பின்னால் அதிகார தரப்பினரின் மறைகரம் இருப்பதும் எதிர்காலத்தில் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு பெரும் ஆபத்தைக் கொண்டுவரும் என முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கதரிசனத்துடன் நம்பியது. எனவே ஆட்சியாளருடனான  இணக்க அரசியலே இத்தென்னிலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதுடன் பாதுகாப்பு தரப்பிலுள்ள உயர் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையான முஸ்லிம் காங்கிரஸின் தொடர் பாடலின்போது அரச பங்காளி என்ற அந்தஸ்து அவசியம் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் உணர்ந்தது, உணர்கிறது. அண்மைய அளுத்கம,  தர்கா நகர் வன்செயலின் போது அதனை தொடர்ந்து பரவாமல் தடுக்கவும் முதல் நாள் வன் செயலுக்கு சாதகமாக இருந்த பொலிசார், விஷேட அதிரடிப்படையினரை மாற்றி அவ்விடத்தில் இரானுவத்தினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபட வைக்க இவ்வரசுடனான பங்காளி என்ற உறவே மிகவும் உதவியது. இவ்வன்செயல்கள் மாவனெல்லை, பதுளை போன்ற இடங்களில் பரவாமல் தடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் கணிஷமான பங்களிப்பை ஆற்றியமைக்கு இப்பங்காளி என்ற அந்தஸ்தே பெரிதும் உதவியது. அத்துடன் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஆட்சியில் நீதி அமைச்சராக இருந்து கொண்டு நாட்டில் நீதி நியாயம் இல்லை, அதனால் நீதி அமைச்சராக இருக்க நான் வெட்கப்படுகிறேன், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபாண்மை மக்களின் பாதுகாப்பு  அரசால் உறுதிப்படுத்தப்படவில்;லை, சிங்கள தீவிரவாதத்தை அரசு கட்டுப்படுத்தவில்லை,பள்ளிவாயல்கள் மீதான தொடர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அரசு கைது செய்யவில்லை, நாட்டில் சட்ட ஒழுங்கை பேண அரசு தவறிவிட்டது என உச்ச தொனியில் குரல் எழுப்புவது சர்வதேச ரீதியாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் ஆட்சியாளருக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாரிய தலையிடியாக மாறியுள்ளார். மறுபுறத்தில் தென்னிலங்கை முஸ்லிம்களின்  சார்பான அரசுடனான முஸ்லிம் காங்கிரஸின் தேனிலவு கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு தளத்தில் சிக்கலை உண்டாக்கி உள்ளது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.அத்துடன் இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க முஸ்லிம் காங்கிரஸை அழைத்த போது அதனை மறுத்து அரசுடன் இணைந்து  கிழக்கு மாகான ஆட்சியை அமைத்ததும் மேற் சொன்ன இணக்க அரசியலின் தேவையின் அடிப்படையிலே ஆகும்.

ஆட்சியிலிருந்து வெளியேற முஸ்லிம் காங்கிரஸுக்கு முடியாமல் இருப்பதற்கான இரண்டாவது காரணம் எதிர் கட்சியின் பலவீனமும் முஸ்லிம் காங்கிரஸை அரசிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கின்ற எதிர்கட்சிகளின் மன நிலையும் ஆகும். அதாவது முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இன்று பிரதான எதிர் கட்சி மிகவும் பலமிழந்த நிலையிலேயே காணப்படுகிறது. அதேவேளை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் செல்வாக்கு மிக்கவராகவே காணப்படுகிறார்.மேலும் சிங்கள தேசிய கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, ‘லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்பன இருக்கத்தக்கதாக இக்கட்சிகள் சிங்கள பௌத்த மக்களின் அபிலாஷைகளை தீர்த்து வைக்கவில்லை  என்று கூறிக் கொண்டே பௌத்த மதகுருமாரை முன்னிலைப்படுத்தி ஜாதிக ஹெல உறுமய தோற்றம் பெற்றது. இதே கோஷத்தை முன்னிலைப்படுத்திய தினேஷ் குனவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி என்பன தோற்றம் பெற்றன. இம்மூன்று கட்சிகளும் ஏனைய பௌத்தம் சார் இயக்கங்களும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை அடிநாதமாக கொண்டே செயற்பட்டன.

ஆனால் இன்று மேதகு ஜனாதிபதி அவர்கள் மேற்சொன்ன பௌத்தம் சார் தீவிர நிலைப்பாடுடைய கட்சிகளையும் இயக்கங்களையும்  தேவையற்றதாக்கி பௌத்த மக்களின் அபிலாஷைகளை தீர்த்து வைத்து புத்ததர்மத்தை பாதுகாக்கும் கீர்த்திமிக்க தலைவராகவே பெரும்பான்மை மக்களால் நோக்கப்படுகிறார்.யுத்தத்தை வென்று சுதந்திர காற்றை சுவாசிக்கச்செய்த யுக புருஷராகவே சிங்கள பௌத்தர்கள் அவரை நோக்குகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் ஜனாதிபதி என்பதற்கு அப்பால் சிங்கள பௌத்த மக்களின் தலைவராகவே சிறுபான்மை மக்கள் நோக்குகின்றனர். இத்தகைய சிங்கள பௌத்த மக்களின் தலைவரின்  ஆட்சியைப் பதவி கவிழ்க்க அல்லது ஆட்சியை பிரட்டி பழியை தன்மீது போட்டுக் கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் விரும்பவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அத்தகைய பழி இலங்கை முஸ்லிம்களுக்கு பாரிய தாக்கத்தையும் ஆபத்தையும்;  ஏற்படுத்தும் என்றே முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது நாட்டில் இயல்பாக ஆட்சி மாற்றம் இடம் பெறுவதற்கான ஏதுக்கள் காணப்படுகின்ற போது அது தொடர்பான பொருத்தமான முடிவை முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி மேற்கொள்ள முடியுமென முஸ்லிம் காங்கிரஸ் நம்புகிறது. கடந்த காலங்களில் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்துள்ளது. இனிமேலும் இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு.

Published by

One response to “அரசில் முஸ்லிம் காங்கிரஸ் – ULMN முபீன் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்”

  1. Your Report is tooooooooooooooooooooooooooooo late.Sir. DOnt’t think

Leave a comment