பதுளை: ஊவா மாகாணத்திற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் கடைசித் தினமான இன்று (06.08.2014) நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தாம் ஊவா மாகாணத்திற்கான தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊவா மாகாண சபைத் தேர்தலை பொறுத்த வரையில் அதில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அதேவேளை அந்தப் பிரதிநிதித்துவமானது முஸ்லிம்களை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி விடாமல் ஏனைய சகோதர சமூகங்களுடனான இன நல்லுறவினையும், புரிந்துணர்வினையும் உறுதி செய்வதாக அமையவேண்டும் என்பதுவே ஊவா முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நிலைப்பாடாகவும் இருக்கிறது.
அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளையே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டது.
அந்த வகையில் பதுளை மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மேல் நிறுத்தக்கூடாது என்பதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐ.தே.கட்சியுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளின்போது தொடர்ந்தும் வலியுறுத்தியது.
பின்வரும் இரண்டு நியாயங்களின் அடிப்படையிலேயே அந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்பினை அதிகரித்தல்.
முஸ்லிம் வாக்காளர்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாக்களிப்பதன் மூலம் பிரதான அரசியல் நீரோட்டத்திலிருந்து முஸ்லிம்களை தனிமைப்படுத்தி இன நல்லுறவை பாதிக்கக்கூடிய அரசியல் சூழல்ஏற்படுவதனைத் தவிர்த்தல்
இந்த பின்னணியில் ஐ.தே.க இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை மாத்திரம் பதுளையில் நிறுத்தியிருப்பதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வரவேற்கிறது.இத்தகைய சூழ்நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் வேட்பாளர்களை நிறுத்தி ஏற்பட்டிருக்கும் சாதகமான அரசியல் சூழ்நிலையில் எதிர்மறைத் தாக்கத்தஏற்ப்படுத்துவதற்கு விரும்பவில்லை.
எனவே ஊவா அரசியல் களத்தில்ஏற்பட்டிருக்கின்ற முன்னேற்றங்களை பரிசீலித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை இத்தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்ற முடிவினை மேற்கொண்டுள்ளது.
எனினும் ஊவா மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய காத்திரமான ஒரு பங்களிப்பை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் அதன் பிறகும் மேற்கொள்வதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தயாராகி வருகிறது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by

Leave a comment