நோன்புப் பெருநாளும் காத்தான்குடி கடற்கரையும்..

kattankudy beach 2014 (3)– நமது நிருபர்

காத்தான்குடி: கடந்த ஒருவாரகாலமாக மக்களாலும், மகிழ்ச்சியாலும் நிறைந்திருந்த காத்தான்குடி விடைபெறுகிறது. காத்தான்குடி கடற்கரையும் எப்போதுமில்லாதவாறு இப்பெருநாளில் கலைகட்டியிருந்தது. ஒவ்வொரு பெருநாள் காலங்களிலும், பெருநாளை அடுத்துவரும் வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரை மக்களால் நிறைந்து காணப்படுவது வழமை.

இதேபோல்தான் இம்முறையும் கடந்த வெள்ளிக்கிழமை சனநெரிசலால் காத்தான்குடி கடற்கரை நிறைந்திருந்தது. ‘மண்போட்டால் விழவும் இடமில்லை’ என பலர் கூறியதையும் கேட்க முடிந்தது.

இம்முறை கடைத்தொகுதிகள் கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்தன. ஓர் ‘காணிவெல்’ போன்று காத்தான்குடி கடற்கரை காட்சிதந்தது.

திருமண சீசனாக இருந்தபோதிலும் அதிகளவான மக்கள் குடும்பசகிதம் பகற்சாப்பாட்டிற்கே கடற்கரையில் நிறைந்திருந்தனர்.

வெளியூர்களிலிருந்தும் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் அதிகளவில் வருகை தந்திருந்தனர். வழமைபோல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாடகை வாகனங்களும், சொந்த வாகனங்களும் சிறுவீதியை நிறைத்திருந்ததால், முச்சக்கரவண்டிகளும், மோட்டார்சைக்கிள்களும் இடையிடையே சிக்கித் தவித்தன.

This slideshow requires JavaScript.

குடும்பங்களின் மகிழ்ச்சிப் பறிமாற்றங்களும், எப்போதோ கண்ட தனது தோழிகளையும் நலம் விசாரிக்கவும் பெண்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது.பெருநாள் பசாருக்கு போக முடியாத பெண்பிள்ளைகள், கடற்கரையில் தன்பெற்றோர்களுடன் சென்று தேவையான பொருட்களையும் வாங்கிக்கொள்ள இக்கடைகள் உதவியாக இருந்ததையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐஸ்கிரீம் வாகனங்களும் கடைகளும் நிறையவே இருந்தன. எனினும் ‘அதன் ஒலிகளை சகிக்க முடியவில்லை’ எனவும் பலர் குறைபட்டுக்கொண்டனர்.

காத்தான்குடி மண்ணில் பிறந்து வெளியிடங்களுக்கு தொழில் நிமித்தம் குடிபெயர்ந்து பெருநாளை ஊரோடு, உறவுகளோடு கொண்டாட வேண்டும் எனும் நோக்கில் கடந்த ஒருவாரமாக காத்தான்குடிக்கு வந்தவர்கள் திரும்பிச்செல்வதையும் இன்று காணமுடிந்தது.

Published by

Leave a comment