காத்தான்குடி: இருபத்து நான்காவது சுஹதாக்கள் தினம் இன்று காத்தான்குடியில் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த வருடம் 23வது சுஹதாக்கள் தினம் ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தில் வந்திருந்தது. இம்முறை நோன்புப் பெருநாள் முதல் வாரத்தில் இத்தினம் வந்ததால், மக்கள் அனைவரும் பெருநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதையே காண முடிந்தது.
அதிகமான மக்கள் பாசிக்குடா, உண்ணிச்சைக் குளம், படுவாங்கரை, மண்முனைப்பாலம், உல்லே இவ்வாறு வெளியிடங்களுக்கு குடும்பத்தினர்களுடனும், நண்பர்களுடனும் சென்று வந்ததையும் காண முடிந்தது.
இதைவிட திருமணங்கள், வலிமா விருந்துகள், கடற்கரைக்குச் செல்லல் மற்றும் பெருநாள் விடுமுறை நிறைவடைந்து மீண்டும் தங்களது வியாபார இடங்களுக்குத் திரும்புதல் போன்ற பிஸியான காரணங்களாலும் மக்கள் சுஹதாக்கள் தினத்தைக் கருத்திற்கொள்ளவில்லை.
1990-08-03 – அந்த நாளும், வடுக்களும், அதன் தாக்கங்களும் காத்தான்குடி மக்கள் மத்தியில் என்றும் மறக்க முடியாதவை. எனினும் அனுஷ்டான விடயத்தில் அதிகளவான மக்கள் பங்கெடுப்பதைக் காணமுடியவில்லை.
இரண்டொரு உலமாக்களும், நாலு பெரியவர்களும், நாளைந்து சிறுவர்களுமே குறித்த இரு பள்ளிவாயல்களுக்கும் சமய அனுஷ்டானங்களுக்கு ஆஜராகி இருந்தனர். சுஹதாக்கள் குடும்பத்தினர்களுக்கும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதைவிட வேறு எந்த மாற்றத்தையும் காத்தான்குடியில் காணமுடியவில்லை. எவ்வாறிருந்தும் ஓர் அமைதியான முறையில் இந்த 24வது சுஹதாக்கள் தினம் அணுஷ்டிக்கப்பட்டிருந்தாக அமையட்டும்.
Published by


Leave a comment