காத்தான்குடியில் நோன்புப் பெருநாள் திருமணப் படலம்…

marriage– அபூ ஸைனப்

காத்தான்குடி: காத்தான்குடி வரலாற்றில் நோன்புப் பெருநாள் மாதம் எனப்படும் ஷவ்வால் மாதமும், ஹஜ்பெருநாள் மாதம் எனப்படும் துல் ஹஜ் மாதமும், கொண்டாட்ட மாதம் எனப்படும் ரஃபிஉல் அவ்வல் மாதமும் திருமணப் பந்தல்களின் நாளாக கருதப்படுகிறது.

ஆயினும், நோன்புப் பெருநாள் மாதம் எனப்படும் ஷவ்வால் மாதத்திலேயே என்றுமில்லாதவாறு திருமணங்கள் காத்தான்குடியில் இடம்பெற்றுவருவது தொன்றுதொட்ட வரலாறு!

பெருநாள் மகிழ்ச்யோடு தனது பிள்ளைகளின் திருமணங்களையும் பார்த்துவிட வேண்டும் என ஏங்காத பெற்றோர்களே இம்மாதத்தில் இருக்கமாட்டார்கள். என்றாலும் அவரவர் வசதிப்படியே இம்மாதத்தில் திருமணங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அஸர் தொழுகைக்குப் பின்னர் பெரிய பள்ளிவாயல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒரே நேரத்தில் இடம்பெற்று வருவதையும் இக்காலங்களில் காணமுடியும்.

மாப்பிள்ளையின் தோழர்கள் எனப்படும் நவீன காலத்து இளைஞர்களின் நாகரிக, அநாகரிக விடயங்களும் இடம்பெறாமல் இருப்பதில்லை. அநேகமான திருமணங்கள் மிக அமைதியாக நாகரீகமான முறையில் இடம்பெற்றாலும், ஒரு சில திருமணங்கள் மாப்பிள்ளைத் தோழர்களின் சேஷ்டைகளில் ஆரம்பமாகி, விருந்தாளிகளில் முடிகின்ற பரிதாப நிலையையும் காணமுடிகிறது.

marriage_-_hands[1]

பட்டாசு கொழுத்துதல், மணமகனின் வாகன அலங்காரம், மணமகனின் வாகனத்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் இல்லாமல் சென்று, சந்தியில் இருக்கும் ‘ட்ரஃபிக்’கிற்கு ஓர் ‘ஹோனு’ம் அடித்துவிட்டு அவர்களைக் ‘கடுப்பேற்றி’ ஓடியொழியும் நிகழ்வுகளும், மேலும், மணமகளின் இல்லம் வரைக்கும் மோட்டார்சைக்கிளின் ஹோர்ணை அழுத்திச் செல்வதும், பட்டாசு கொழுத்துவதும் அவ்வப்போது இடம்பெற்றுவரும் மாப்பிள்ளைத் தோழர்களின் செயற்பாடுகள்.

இதே போல் மாப்பிள்ளை கோப்பிக்குப் பின்னர், வட்டிலப்பத்தை, சூழ்ந்துள்ள தோழர்களுக்கு எரிதல், வாழைப்பழத் தோலை வீசுதல்….இவ்வாறு சேஷ்டைகள் அதிகரிக்கும். இறுதியில் இரு தரப்பினரதும் மிக நெருங்கிய உறவினர்களுக்கு அல்லது விருந்தாளிகளுக்கு இவர்கள் வீசியெறியும் பொருட்கள் போய்ச் சேரும்.

அது எங்கு வேண்டுமானாலும் படும். முகத்தில், புறடியில்..கண்ணத்தில்கூட அடித்துச் செல்லும். இதனாலேதான் என்னவோ மாப்பிள்ளை கோப்பி என்றால் பெரியவர்கள் யாரும் உட்கார மறுக்கிறார்கள்.

இவர்களின் சேஷ்டைகளை கைகட்டி, சிரமப்பட்டு முன்முறுவலை வரவைத்து, செய்வதறியாது உபசரிப்பார்கள் பெண்வீட்டார்கள்.

திருமணத்துக்கு முன்னர் மாப்பிள்ளையைப் பற்றி வரிக்கு வரி ஆராயும் மணமகளின் உறவினர்கள்… திகைத்துப்போய் நிற்பர். ஒருவாரத்துக்கு முன்னர் தெரிந்திருந்தால் வாசற்படியும் ஏற்றி இருக்க மாட்டார்கள். என்ன செய்வது ஒரு நாள் கூத்து முடிந்தே போகட்டுமே என்று மனசை ஆற்றிக்கொள்வதைத் தவிர வேறு ஏது வழி அவர்களுக்கு!

marriage

சுமார் 50 வருடங்களுக்கு முன் உள்ள காத்தான்குடியின் திருமணப்படலம் மாட்டுவண்டில் சவாரியாகவே இருந்தது. மாட்டு வண்டிலை பச்சை-குறுத்து ஓலைகளாலும், கடதாசிகளாலும் அலங்கிரத்து மாப்பிள்ளை வலம் வருவார்.

இப்போது மோட்டார் சைக்கிளில் இலை-குலைகளைக் கட்டி ஓர் ரவுண்டு வருகிறார் நவீன காலத்து மாப்பிள்ளை!

இதே போல் வெளியூரிலும், வெளிநாட்டிலும் இருந்து பள்ளி வாழ்க்கைக்குப் பின்னர் ஒன்றாகச் சந்திக்கும் ஓர் அரிய சந்தர்ப்பத்தைக் கருத்திற்கொண்டு பள்ளிக் காலத்து சேஷ்டைகளையும் மணமகள் இல்லத்தில் புரிகின்றனர். முட்டை வீசுதல், இன்னும் பிற பொருட்களும் தற்பொழுது உருப்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.

மணமகனான தனது அன்பு நண்பணை நேசிக்கும் நீங்கள், மணமகள் வீட்டாரையும், திருமணத்துக்குவரும் பெரியோர்களையும் கண்ணியப்படுத்த தவறமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்.

http://www.yourkattankudy.comⓒ

Published by

Leave a comment