‘இப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனுக்கு அருகதை கிடையாது’ – முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல்
– பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: இப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு மட்டு-மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனுக்கு அருகதை கிடையாது என மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல் ஹாஜியார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. முஸ்லிம்களின் சமய அனுஷ்டானங்கள் பல்வேறு வகைப்படும் இதில் தொழுகை,நோன்பு ,ஹஜ் யாத்திரை,ஸக்காத் (ஏழைவரி) என்பன அடங்கும் அவற்றின் ஆழமான ஆன்மீக அர்த்தங்கள் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களுக்கே புரியும்.
இதில் நோன்புக்கும் ,இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்வுக்கும் அர்த்தம் புரியாமல் எல்லாவற்றுக்கும் மேதாவித் தனமாக அறிக்கை விடுவது போல் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அறிக்கை விட்டிருக்கிறார்.
அவரது கூற்றுப்படி இப்தார் நிகழ்வை களியாட்ட விழாவாக அல்லது பிறந்த நாள் விழாவாக கருதியிருந்தால் அமெரிக்க வெள்ளை மாளிகையில், தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா,நமது நாட்டில் ஜனாதிபதி மற்றும் ஏனைய அமைச்சுக்கள்,தூதுவராலயங்கள்,திணைக்களங்கள் நடாத்தும் இப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டாம்,ஏனைய சமயத்தவர்களை இப்தாருக்கு அழைக்கவும் வேண்டாம் இது இஸ்லாத்துக்கு முரணாண செயல் என இஸ்லாமிய மார்க்க அறிஞர்களே தீர்ப்பு (பத்வா) வழங்கிருப்பார்கள்.
மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல் ஹாஜியார்
இஸ்லாமிய அனுஷ்டானம் பிழை எனக் கூறுவதற்கு ஒரு இஸ்லாமியனுக்கும்,இந்து ,கிறிஸ்தவ ,பௌத்த அனுஷ்டானங்களை பிழை எனக் கூறுவதற்கு அந்தந்த சமயத்தவனுக்கே உரிமையுண்டு என்பதை பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்தரன் அறிந்து கொள்வார் என எண்ணுகிறேன்.
கடந்த பல தசாப்தங்ளாக நமது சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த கசப்பான நிகழ்வுகளை மறக்கவும்,சமய ,சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ,சக வாழ்வை பேணவும் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தி சமூகங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்துத்துமாறும் ஏனைய சமயத்தவர்களின் சமய நிகழ்வுகளிலும் இன்ப,துன்பங்களில் பங்கு கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) வலியுறுத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கூறுவது போல் இப்தார் நிகழ்வு மாத்திரமல்ல ,ஏனைய சமயத்தவர்களுடைய சமய நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படம்,வீடியோ எடுத்து பத்திரிகைகளிலும் ,தொலைக்காட்சியிலும் வெளிவரத்தான் செய்கின்றன. இவருடைய காழ்ப்புணர்வு இப்தார் நிகழ்வு மாத்திரம் விளம்பரத்துக்காக ,அரசியல் இலாபத்துக்காக ,புகழுக்காக காட்சிப் படுத்தப்படுவதாக எண்ணி தனது அற்பத்தனமான சிந்தனையை வெளிப்படுத்தியிருக்கிறார் போதாமைக்கு இஸ்லாமிய அறிஞர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டுமென புத்தி மதி வேறு கூறியிருக்கிறார்.
கிழக்கு முஸ்லிம்களின் எந்தவொரு இன்ப துன்பங்களிலும் பங்கு கொள்ளாத தமிழ்,முஸ்லிம் உறவை என்றுமே விரும்பாத அரியநேந்திரன் ஐயா அவர்களே.
காலத்துக்கு காலம் முஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கைகலையும்,விமர்சனங்களையும் வெளியிடுவதை விடுத்து சகோதர தமிழ்,முஸ்லிம் உறவை கட்டியெழுப்புவதற்கு காத்திரமான ஏதாவது பணியை நீங்கள் செய்வீர்களாயின் நாங்களும் உங்களுடன் கைகோர்ப்போம் என தாழ்மையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
கற்றறிந்த முன்னாள் தமிழ் அரசியல் தலைவர்களோ ,சமகால தமிழ் அரசியல் தலைவர்களான விக்னேஸ்வரன் ஐயா,சம்மந்தன் ஐயா,சுமந்திரன் ஐயா போன்றோர் இவ்வாறான மலினமான அறிக்கைகளை நிச்சயமாக விட மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கையாகும் என மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல் ஹாஜியார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 responses to “‘இப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனுக்கு அருகதை கிடையாது’ – முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல்”
Issadeen
ஏழைகளை அழைத்து நோன்பு திறப்பு ஏற்பாடு செய்யாமல் காபிர்களையும், செல்வந்தர்களையும் அழைத்து இப்தார் ஏற்பாடு செய்யும் உங்களுக்கு இதுவும் வேண்டும். இதற்கு மேலும் வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்!
Leave a reply to yahya Cancel reply