ஓர் வெள்ளி இரவின் இரத்தக்கறை!

(மீள்பிரசுரிக்கப்படுகிறது…2012)

meera (2)– முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம்

காத்தான்குடி: இன்றைய நாள் 03-08-1990. வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் படைத்தவனை வணங்குவதற்காக மாத்திரம் மக்கள் ஒன்று சேரும் இரு ஆயலங்களுக்குள் உதிரங்கள் வடிந்தோடின. அவை இரத்தக் கறைகளாய் முஸ்லிம்களின் உள்ளங்களில் உறைந்தன.

ஆம். அதுதான் தன் உரிமைக்காகப் போராட வெளிக்கிட்டு பின்னர் மனித மாமிசங்களைப் புசித்து, பாதாளத்துக்குள் விழுந்த தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்ட மறக்க முடியாத 03-08-1990 காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலையாகும்.

இலங்கையில் முஸ்லிம் எனும் ஓர் இனம் இருக்கின்றதா? என்பது உலகம் அறிந்தநாள்! இந்நாள்!!

மெத்தைப்பள்ளிவாயலில் ஜனாஸாக்கள் கஃபன் அணிவிக்கும்போது..

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீராஜூம்ஆ பள்ளிவாயலிலும், காத்தான்குடி-மஞ்சந்தொடுவாய் ஹூசைனியா தைக்காவிலும் அன்றைய இஷாத் தொழுகைக்காக மக்கள் ஒன்று சேர்ந்திருந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றி, தங்களது நிலைகளையும் பாதுகாப்புக்களையும் அமைத்துவந்த ஓர் இக்கட்டான தருணத்தில் இப்படுகொலையை விடுதலைப் புலிகள் தந்திரமாக மேற்கொண்டிருந்தனர்.

கல்லடி இராணுவ முகாமில் வழமைபோன்று இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர். பின்னர் ஆரையம்பதியில் ஓர் இராணுவ முகாமை அமைத்திருந்தனர். ‘பக்ஷவீர’ எனும் இராணுவத்தளபதியின் கீழ் ஆரையம்பதி இராணுவ முகாம் இருந்தது.

விடுதலைப்புலிகள் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களையும், காத்தான்குடி 5-பொதுச்சந்தைத் தொகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களையும் கொள்ளையடித்திருந்தனர். பல கோடி பெறுமதியான பொருட்கள் இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதன் பின்னர் அம்பலாந்துறைச் சந்தியில் காத்தான்குடி முஸ்லீம்களை இலக்குவைத்து, அன்று பயணித்த சுமார் 70க்கும் மேற்பட்ட முஸ்லீம்களை கடத்திச் சென்று கொலை செய்தனர்.

மெத்தைப்பள்ளிவாயலில் ஜனாஸாக்கள் குளிப்பாட்டப்படும்போது…

இச்சம்பவம் இடம்பெற்ற அடுத்த இரு வாரங்களுக்குள் இப்பள்ளிவாயல் படுகொலையை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர். மண்முணைத்துறையூடாக வெள்ளை நிற வேனில் காத்தான்குடியை வந்தடைந்த விடுதலைப்புலிகளுக்கு ‘ரன்ஜித்’ தலைமை தாங்கி இருந்தான். காத்தான்குடி வர்த்தகர்களின் வாய்ச்சோறு உண்டு பலகாலம் காத்தான்குடி மக்களிடம் பின்னிப்பிணைந்து காலத்தைக் கடத்தி, தான் தொழில்செய்து வாழ்ந்த இம்மண்ணுக்கும் மக்களுக்கும் இவனது பரிசு …. ‘ஓர் இரத்தவேட்டை!’

அன்று மீராஜூம்ஆப் பள்ளிவாயலில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் படைத்தவனை வணங்குவதற்காகத் தயாராகி இருந்தனர். அன்று ஊரில் ஏற்பட்டிருந்த அசாதாரண, அச்ச சூழ்நிலையால் அதிகளவான மக்கள் பள்ளிவாயல்களுடன் தொடர்புவைத்திருந்தனர். வெள்ளை நிறவேனில் வந்த விடுதலைப்புலிகள் பள்ளிவாயலுக்கு அருகில் இருக்கும் வடக்கு எல்லை வீதியைக் குறுக்கறுத்து, வாகனத்தை நிறுத்திவிட்டு பள்ளிவாயலுக்குள் வருகின்றனர்.

இக்காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரம் இல்லாதிருந்ததனால் பள்ளிவாயலில் சக்திவலு குறைந்த ஓர் ‘ஜெனரேட்டர்’ இயங்கிக் கொண்டிருந்தது. இதனால் போதியளவு வெளிச்சம் இருக்கவில்லை.

மெத்தைப்பள்ளிவாயல்: தொழுகைக்காக வரிசைப்படுத்தப்பட்டபோது…

மீராசாஹிப் மௌலவி அவர்களின் தலைமையில் இஷாத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஊரில் பஞ்சம், பட்டணி, தொழிலின்மை, போக்குவரத்து இல்லை, மின்சாரம் இல்லை… இப்படியே மக்களின் வாழ்க்கையும் ஓர் இருள்சூழ்ந்த நாட்களாகவே போய்க்கொண்டிருந்தது. முஹர்ரம் மாத சுன்னத்தான நோன்புகளை அதிகளவான மக்கள் நோற்றிருந்தனர். மக்கா சென்ற ஹாஜிகளும் ஊருக்குள் வந்துகொண்டிருந்தனர். வேன் சத்தம் கேட்டது. இருள்சூழ்ந்த இராத்திரியில் விடுதலைப்புலிகளின் வேனை மக்கள் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஹாஜிகள் ஊருக்கு வந்த வாகனமாக இருக்கலாம் என்றே வடக்கு எல்லை வீதியாக பள்ளிவாயலுக்குள் நுழைந்த மக்கள் கருதி இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்களுக்குப் பின்னர் ஊர் மக்கள் இரவில் கண்விழித்து விழிப்புக்குழுக்களில் காலத்தைக் கடத்திவந்தனர். இராணுவமும் அவ்வப்போது இத்தகைய விழிப்புக்குழுக்களில் கலந்துகொள்ளும். டயர்கள் எரித்து, கஞ்சி காய்ச்சி, இரவெல்லாம் கண்விழித்து பகல் முழுக்க தூங்கி எழும் ஓர் விசித்திர காலம் அது. புலிகள் எந்நேரத்திலும் ஊருக்குள் ஊடுறுவலாம். கொள்ளையடிக்கலாம் அல்லது மக்களைக் கொல்லலாம் என்ற விழிப்பில் இக்குழுக்கள் பள்ளிவாயல் மூலமாக இயங்கிவந்தன. ஆனால் பாசிசப் புலிகள் இப்படியொரு மிருகவேட்டையை நடாத்துவார்கள் என்று யாருக்குத் தெரியும்?

meera (2)
04-08-1990 காலையில் மக்கள் பார்வைக்காக…

இஷாத் தொழுகையின் மூன்றாவது ‘ரக்ஆத்’தில் ‘ருகூஊ’ சென்று எழுவதற்குள் கனரக ஆயுதங்களில் ஒன்றான எல்.எம்.ஜி ரவைகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்களின் உடல்களை சல்லடையாக்குகின்றன. ‘அல்லாஹூ அக்பர்’ எனும் ஒலியும் கலிமாவும், சிறுவர்களின் கதறல்களும், காயப்பட்டவர்களின் அலரல்களும் பள்ளிவாயலில் ஒருமித்து ஒலிக்கின்றன. சுஜூதில் இருந்தவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர். இமாம் அவர்களுக்கும் இலக்குவைக்கப்படுகின்றார். கைக்குண்டுகள் வீசப்படுகின்றன. மக்களின் உடல்களும் பள்ளிவாயல் சுவர்களும் துப்பாக்கி ரவைகளாலும் கைக்குண்டுகளாலும் துளையிடப்படுகின்றன. ஷஹீதுகளாக தரையில் வீழ்கின்றனர். காயத்தால் துடிக்கின்றனர்.

தாக்குதலை சில நிமிடங்கள் நிறுத்திய புலிகள், மீண்டும் தப்பியவர்களை நோக்கி சுட்டனர். மீண்டும் உடல்கள் சரிந்தன. உதிரங்கள் உறைந்தன. மிருகவேட்டையை இடைநிறுத்தாத புலிகள், ஹூசைனியா தைக்காவுக்குள் நுழைகின்றனர். சுமார் 50 பேருக்கும் அதிகமான மக்கள் அங்கு தொழுகைக்காக தயாராகி நின்றனர். அங்கும் புலிகள் தங்களது தாகத்தை உமிழ்ந்தனர். துப்பாக்கிரவைகளும் கைக்குண்டுகளும் வணக்கசாலிகளின் உடல்களை சல்லடையிட்டன. தரையில் மடிந்தனர். கதறியழுதனர்.

meera (4)
மீரா ஜூம்ஆ பள்ளிவாயில் ஜனாஸாக்கள்…(இரவு)

பின்னர், ஹிழுறியா தைக்கா, மெத்தைப்பள்ளி, மௌலான கபுறடிப்பள்ளி ஆகிய இடங்களுக்கும் புலிகளின் வேன் சென்றது. மேற்படி அனைத்து பள்ளிவாயல்களிலும் தொழுகை நிறைவடைந்திருந்தது. ஏதோ ஓர் அசம்பாவிதம் நடைபெற்றதை உணர்ந்த மக்கள் தொழுகையை முடித்து பள்ளிவாயலுக்கு வெளியில் கூடி நின்றனர். அநேகமானவர்கள் புலிகளின் வாகனத்தைக் கண்டிருந்தனர். ஆனால் விழிப்பதற்குள் வேன் மறைந்திருந்தது.

ஊரில் உள்ள இளைஞர்கள், உலமாக்கள், கல்விமான்கள், வைத்தியர்கள் என்று ஆயிரக்கணக்கான மக்கள் இரு பள்ளிவாயல்களையும் நோக்கி படையெடுக்கின்றனர். இரத்த ஆறுகளாய் காட்சி தந்தன அல்லாஹ்வின் இல்லங்கள்.

காயப்பட்டவர்கள் அவசர அவசரமாக மெத்தைப்பள்ளிவாயலுக்கு முதலில் கொண்டுவரப்பட்டனர். சம்பவம் இடம்பெற்று அடுத்த 10 நிமிடத்தில் இராணுவத்தினர் ஸ்தலத்திற்கு வந்தனர். வளையிரவு விமானப்படை ஹெலிகொப்டர் மூலமாக காயப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஊரில் விரல்விட்டு எண்ணக்கூடியளவில் அப்போதிருந்த வாகனங்கள் அவசர சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டன. தங்களிடம் இருப்பதை மக்கள் கொடுத்தனர். வாகணம், பணம், பொருள் … இப்படி பல லட்சங்கள் அன்று மெத்தைப்பள்ளிவாலுக்குள் செலவு செய்யப்பட்டன. எனினும் புலிகளின் கொள்ளையாலும் ஆட்கடத்தலாலும் ஊர் வறுமைக் கோட்டிற்குக் கீழ்தான் அன்று இருந்தது.

meera (3)
ஜனாஸாவின் உறவினர்கள்…செய்வதறியாது….

வெள்ளைத்துணிகளும், மருந்துப்பொருட்களும் உடன் பெறுவதற்கு ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தன. காத்தான்குடி ஐ.சி.ஆர்.சி இளைஞர்களும் மருத்துவர்களும் இருபள்ளிவாயல்களிலும் ஓடியோடி தங்களது பணிகளைச் செய்தனர். இன்றுபோன்று வாகன வசதிகளும் தொழிநுட்பங்களும் அன்று இருக்கவில்லை. கால்நடையாக இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்தனர். கபுறடி வீதியில் இருந்து வடக்கு எல்லை வீதிவரைக்கும் இருந்த அனைத்து வீடுகளும் மரண ஓலங்களாகவே காட்சிதந்தன. தங்களது உறவுகளின் துடிதுடித்த காட்சிகளை பள்ளிவாயலுக்குள் கண்ட தாய்மார்களும் பெண்களும் மயங்கிவிழுந்தனர். கதறியழுதனர். குழந்தைகள் உறவுகளைத்தேடி பள்ளிவாயலுக்குள் அநாதைகளாய் அலைந்து திரந்தனர்.

என்ன நடந்தது, என்ன நடக்கின்றது என்று அப்போது எங்களுக்கு சிந்திக்கவே முடியாதிருந்தது. வாய்விட்டு அழுதோம். காயப்பட்டவர்களை அவசர அவசரமாக வாகனத்தில் ஏற்றுவோம். எனினும் அவர்களின் உயிர் பிரிந்திடும். மீண்டும் ஜனாஸாவாக மெத்தைப்பள்ளிக்குள் கொண்டுவருவோம். வாழ்க்கையில் மறக்கவே முடியாத புலிகளின் நரவேட்டையை எழுத இத்தளம் போதாது.

மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் தோற்றம்-2011

இதன்பின்னர் ஜனாஸாக்களின் ஆள்விபரங்களும் அடையாளங்களும் உறுதிப்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான பிரிஸ்டல் போர்ட், மார்க்கர் பேனாக்கள், வெள்ளைத் துணிகள் வந்து சேர்கின்றன. இதன் பின்னர் காயப்பட்டவர்களுக்கு இளநீர் கொடுக்கும்படி மருத்துவர்கள் கூறியதும் ஆயிரக்கணக்கான இளநீர் கொண்டுவரப்பட்டன. இதன் பின்னர் பாய்கள் வரவழைக்கப்பட்டன. அனைத்தும் அன்றிரவு சேகரிக்கப்பட்டது உண்மையில் ஓர் அற்புதம்! அல்லாஹ்வின் உதவி!!

இதன்பின்னர் விடுதலைப்புலிகளை தேடி மட்டு வாவிக்கு மேல் விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் ‘வானவேடிக்கை’யில் ஈடுபட்டன. துப்பாக்கி ஓசைகளையும் அதன் வெளிச்சங்களையும் அறியாத சிறுவர்கள் இரசித்துக்கொண்டிருந்தனர்.

கொழும்புக்குச் செய்தி செல்கின்றது. அதனைத் தொடர்ந்து உலகமெங்கும் செய்தி பரவுகின்றன. பி.பி.சி தமிழோசை, இந்திய வானொலிகள், மற்றும் உலகச் செய்திச் சேவைகள் அனைத்தும் காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைக்கு மறுநாள் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தன. கொழும்பு உட்பட இலங்கையின் முஸ்லீம்கள் வாழும் பிரதான நகரங்களில் ஹர்த்தாலும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

ஹுஸைனியா தைக்கிய்யா

அன்று அதிகாலைவரை குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், என்று 103 அப்பாவி சகோதரர்களின் உயிர்கள் பிரிந்திந்தன. 40க்கும் மேற்பட்ட காயப்பட்ட சகோதரர்கள் வெளிமாவட்டங்களுக்கு சிசிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டனர். 103 ஜனாஸாக்களும் மெத்தைப்பள்ளி வராந்தாவில் ஆளடையாளத்துடன் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. மேலதிக இராணுவத்தினர் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். பெண்கள், சிறுவர்கள் என அத்தனைபேரும் 3 பள்ளிவாயல்களிலும் சூழ்ந்திருந்தனர்.

கபன்புடவைகள், பாய்கள் இதரப்பொருட்கள் மெத்தைப்பள்ளிவாயலுக்குள் கொண்டுவரப்பட்டன. ‘கப்ர்’ வெட்டும் பணிகள் மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மையவாடியில் இடம்பெற்றது. ஜனாஸா தொழுகைக்கான ஒழுங்குகளையும் நல்லடக்கத்திற்கான ஒழுங்குகளையும் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சம்மேளனம் ஏற்பாடு செய்தன.

04-08-1990 சனிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து மெத்தைப்பள்ளிவாயலில் ஜனாஸாத்தொழுகை இடம்பெற்றது. ஊர்மக்கள் திரண்டிருந்தனர். கொழும்பில் இருந்து சில அமைச்சர்களும் ஊடகவியலாளர்களும் மெத்தைப்பள்ளிவாயலுக்குள் வருகைதந்திருந்தனர். தங்களது சகோதரர்கள், உறவுகளைப்பிரிந்த துயரால் தாங்க முடியாமல் ஊர் மக்கள் கதறியழுதனர். அல்லாஹ்விடம் பிரார்த்தித்தனர்.வானமும் அழுதது.

meera masjid11
மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் தற்போதய தோற்றம்

103 ஜனாஸாக்களும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கதறியழ ஒரேவரிசையில் நல்லடக்கம் செய்யப்பட்டன. சோகமயமாக ஊர் காட்சியளித்தது. அநீதிக்குள்ளான மக்களின் பிராத்தனைகளை படைத்தவன் ஏற்றுக்கொண்டான். அன்று அப்பாவிகள் மீது கைவைத்த அந்தக்கூட்டத்தை இன்று முகவரியே இல்லாமல் அழித்துவிட்டான். இதுதான் அல்லாஹ் எமக்குச் செய்த மாபெரும் ஓர் கிருபையாகும். அல்ஹம்துலில்லாஹ்!

சமூகவலைத்தளங்கள், ஷெல்பிகள், புகைப்படமெடுத்து “நாங்கள்தான் உண்மையான தொண்டடர்கள்” என மக்கள் பணத்தில் வீராப்பிடும் இளசுகள் இன்றி எது நடக்கவேண்டுமோ அவை அத்தனையும் உளத்தூய்மையுடன் நடந்தேறின! அல்ஹம்துலில்லாஹ்!!

இதன்பின்னர்…

* காத்தான்குடிக்கான முதலாவது பொலிஸ் நிலையம் காத்தான்குடி 1, அந்நாஸர் வித்தியாலயத்தில் திறக்கப்பட்டது.

* ஊர்காவற்படை அமைக்கப்பட்டது.

* ஊரின் இரு எல்லைகளிலும் மற்றும் ஆற்றங்கரை ஓரத்திலும் விடுதலைப்புலிகளின் ஊடுறுவலைத்தடுக்க தடுப்பு முகாம்களும் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டன.

* இனிமேல் இவ்வூரில் இருக்கமுடியாது! வாழமுடியாது!! எனும் ரீதியில் செல்வந்தர்களும் வர்த்தகர்களும் தங்களது குடும்பத்தினருடன் வெளிமாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தமை. (சில காலங்களின் பின்னர் இவர்கள் மீண்டும் ஊருக்குத்திரும்பியது வேடிக்கை!)

* தொழிலின்றி நிர்க்கதியான பெருந்தொகையான இளைஞர்களும், குடும்பஸ்தர்களும் மத்தியகிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காகச் சென்றமை.

* கல்வியின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.

* நகமும் சதையும்போல் பிண்ணிப்பிணைந்திருந்த தமிழ்-முஸ்லிம் உறவு உடைக்கப்படுகிறது.

meera masjid 9
மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் தற்போதய தோற்றம்

சுமார் 30 வருடகால கொடிய யுத்தத்தில் இதுவரை கொல்லப்பட்ட முஸ்லீம்களை நினைவுகூர்ந்து, காத்தான்குடி பள்ளிவாயல் சம்பவம் இடம்பெற்ற தினமான ஒவ்வொரு ஓகஸ்ட் மாதம் 03ம் திகதியும் ‘சுகதாக்கள் தினம் வடகிழக்கில்’ அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அமைதியான முறையில் பிராத்தனைகளுடன்  இந்நாளை நினைவுகூர்ந்து, இலங்கையில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தில் முஸ்லீம் சமூகமும் பாதிக்கப்பட்ட இனம் என்பதை உலகுக்குப் பறைசாட்டுமாறும் https://yourkattankudy.com/  கேட்டுக்கொள்கின்றது.

இதேபோல் இக்காலப்பகுதியில் இச்சம்பவங்களாலும் மற்றும் இயற்கை அணர்த்தங்களாலும் உயிரிழந்த எமது சகோதரர்களுக்காக பிரார்த்திப்பதுடன், இச்சம்பவங்களால் தங்களது உறவுகளை இழந்து தவிக்கும் குறித்த சகோதரர்களின் குடும்பத்தார்களது துக்கங்களிலும் ‘உங்கள் காத்தான்குடி’/’yourkattankudy’ பங்கெடுக்கின்றது.

– முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம்

http://www.yourkattankudy.comⓒ

This slideshow requires JavaScript.

2 thoughts on “ஓர் வெள்ளி இரவின் இரத்தக்கறை!”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s