துபாய்: அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென் ஆபிரிக்க சகலதுறை ஆட்ட வீரர் ஜெக் கலிஸ் அறிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜக் கலிஸ், உலக தரமுள்ள துடுப்பாட்டவீரராகவும், வேகப்பந்து வீச்சாளராகவும், இரண்டிலும் ஒரே நேரத்தில் ஜொலித்தவர். உலக கிரிக்கெட் சகலதுறை வீரர் பட்டியலில் எப்போதும் கலீஸ் முன்னணியில் இருப்பார்.
கலிஸ் இதுவரை 166 டெஸ்ட் போட்டிகள், 328 ஒருநாள் போட்டிகள்m 25 T-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தொடர்ந்து 19 வருட காலம் அவர் கிரிக்கெட் ஆடியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 13 ஆயிரத்து 289 ஓட்டங்கள், ஒருநாள் போட்டிகளில் 11,579 ஓட்டங்கள், T-20 போட்டிகளில் 666 ஓட்டங்கள் குவித்துள்ள கலிஸ், தன்னை ஒரு முன்னணி துடுப்பாட்ட வீரர் என நிரூபித்துள்ளார். அதேபோல் டெஸ்ட்டில் 292, ஒருநாள் போட்டிகளில் 273, T-20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கியுள்ளார்.
1995ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் டேர்பன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில், கலீஸ் முதன்முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் பதித்தார். ஒரு மாத காலம் கழித்து, ஒருநாள் போட்டியிலும் களம் கண்டார்.
2013ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்ததும், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கலீஸ் அறிவித்திருந்த நிலையில், திடீரென, தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓட்டங்கள் குவிக்க திணறிய கலீஸ் உடனடியாக ஓய்வு முடிவையும் அறிவித்துவிட்டார்.
இதுகுறித்து கலிஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘உலக கோப்பை தொடர் வரை தென் ஆபிரிக்க அணியில் நீடிக்க வேண்டும் என்ற எனது திட்டத்தை, இலங்கை சுற்றுப்பயண அனுபவம் மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டது. எனவே உடனடியாக ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சிட்னி தண்டர்ஸ் போன்ற உள்ளூர் அணிகளுடன் கலிஸ் போட்டுள்ள ஒப்பந்தப்படி தொடர்ந்து அவ்விரு அணிகளுக்காகவும் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் இந்தாண்டு சீசனில் கொல்கத்தா சம்பியன் பட்டம் வெல்ல கல்லீஸ் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment