கொழும்பு: இவ்வருடம் ஹஜ் யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்படும் முகவர்களுக்குரிய கோட்டாக்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் யாத்திரிகர்கள் அவசரப்பட்டு முகவர்களிடம் பணத்தை கையளிக்க வேண்டாமென அரசாங்க ஹஜ் குழுவின் இணைத் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம். பெளஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை, முகவர் தமக்குரிய கோட்டாக்களை விற்பனை செய்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் வலியுத்தியுள்ளார்.
அவசரப்பட்டு பணத்தை, முகவர்களிடம் கையளித்த பின்னர் அதனை மீளப் பெற முடியாத இக்கட்டான நிலைமைகள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளமையால் மக்கள் இது தொடர்பில் சிந்தித்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டு மெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹஜ் யாத்திரிகர்களை உம்றா கடமைகளுக்காக அழைத்துச் செல்வதற்காக தம்மை பதிவு செய்து கொண்டுள்ள 88 முகவர் நிலையங்களுக்கும் 2240 கோட்டாக்களும் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் அரசாங்க ஹஜ் குழு கடந்த 07ம் திகதி தமது பட்டியலை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்திருந்தது.
இந்நிலையில், சில முகவர் நிலையங்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன.
அதனைத் தொடர்ந்து புத்தசாசன அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் தலையீட்டினைத் தொடர்ந்து புதிதாக தயாரிக்கப்பட்ட கோட்டப் பட்டியல் மீண்டும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 01ம் திகதியன்றே நீதிமன்றம் இது தொடர்பிலான இறுதி தீர்ப்பினையளிக்குமென எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த இழுபறிக்கும் மத்தியில் யாத்திரிகர்கள் இறுதி தீர்மானம் கிடைப்பதற்கு முன்பாக தமக்குரிய முகவர்களை தெரிவு செய்வதனையோ பணத்தை செலுத்துவதனையோ தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனது அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Published by
![Fawzy[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/fawzy1.jpg?w=108&h=150)
Leave a comment