கொழும்பு: ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. மொனராகலை மற்றும் பதுளை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப் பட்டிருப்பதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முற்பகல் 8 மணியிலிருந்து பிற்பகல் 4 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதியில் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பொலிஸாரும் உசார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.
அனுமதி வழங்கப்பட்ட குழுவினர் மாத்திரமே வேட்புமனுகளைத் தாக்கல் செய்வதற்கு தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்குள் செல்ல முடியுமென்று குறிப்பிட்டிருக்கும் அவர், வேட்புமனு தாக்கல் செய்த காலம் முடிவடைந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர் பாரிய ஊர்வலங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
அவ்வாறு செல்வதானது சட்டத்தை மீறும் செயல். அத்துடன் இக்காலப் பகுதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறுவதால் ஊர்வலங்கள் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அரசியல் கட்சிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்.
இன்று முதல் ஓகஸ்ட் 06ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்கள் தங்களது அலுவலகங்களில் வைத்து வேட்பு மனுக்களை கையேற்பரென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.
சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களை கையளிப்பதற்கு முன்னர் ஒரு வேட்பாளருக்கு 2 ஆயிரம் ரூபா வீதம் முழுத் தொகையினையும் கட்டுப்பணமாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வைப்பிலிட வேண்டும்.
சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தும் போதோ அல்லது அரசியல் கட்சிகள் கோரிக்கைகளை முன்னேற்கின்ற போதோ வேட்புமனு பத்திரங்கள் உள்ளடக்கிய ஆவண தொகுதியொன்றை மாவட்ட தேர்தல் அலுவலகத்திலிருந்தே அரசியல் கட்சிகளுக்காயின் தேர்தல் செயலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
தெரிவத்தாட்சி அலுவலகர் அல்லது உதவித் தேர்தல் ஆணையாளர் வேட்பு மனுவை கையளிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் வேட்பு மனுக்களை பரீட்சிக்குமாறு கூறுகின்றபோது அதனை நன்கு செவிமடுத்து மீண்டும் பரிசீலிப்பது சிறந்தது.
இறுதி நாளில் கடைசித் தறுவாயில் முந்தியடித்துக் கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் போதே தவறுகள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாமல் போய்விடும்.
சுயேச்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணம் 05 ம் திகதி நண்பகல் 12 மணி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும். அத்துடன் தேர்தல் காலப்பகுதியில் ஊர்வலங்களுக்கு முற்காக தடை விதிக்கப்பட்டுள்ள போதும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையினை முன்னிட்டு இவை நடத்தப்படக் கூடாதென ஆணையாளர் கண்டிப்புடன் அறிவித்துள்ளார்.
இதேவேளை ஊவா மாகாண சபைத் தேர்தலில் கடமையாற்றவுள்ள அரசாங்க அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தபால் மூலம் வாக்களிப்பது தொடர்பான வாக்காளர் இடாப்புக் குறித்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் விசேட தொலைபேசி இலக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இத்தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்கவிருப்பவர்கள் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் 1919 என்ற விசேட இலக்கத்துடன் தொடர்பு கொண்டு வாக்காளர் இடாப்புக் குறித்த விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
தொலைபேசியூடாக தொடர்பு கொள்வதில் ஏற்படக்கூடிய அசெளகரியங்களைத் தவிர்க்கும் வகையில், பிற்பகல் 3 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடையிலான நேரத்தில் அழைப்புக்களை ஏற்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Published by


Leave a comment