அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்,
கொழும்பு: ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று நல்லமல்கள் புரிந்து மகிழ்ச்சியோடு பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
ரமழானிலே பள்ளிவாசல்கள் நிரம்பிக் காணப்பட்டன. நல்லுபதேசங்கள் கேட்கும் பாக்கியம் இரவும் பகலுமாக கிடைத்த வண்ணம் இருந்தன.
இவ்வாறெல்லாம் நல்ல பல விடயங்களைப் பெற்றுக் கொண்ட நாம் அதன் பக்குவத்திலும் பயிற்சியிலும் எமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே ரமழானில் நாம் அடைந்த பயனாகும்.
அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகிய ரமழானில் எமக்கு அதனோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அத்தொடர்பு அல்குர்ஆனை ஓதுவது, விளங்குவது, வாழ்க்கையில் எடுத்து நடப்பது, மற்றோருக்கு எடுத்துச் சொல்வது ஆகிய அனைத்தின் மூலமே நிறைவுபெறும். தானதர்மங்கள் செய்து ஷைத்தானிய உணர்வுகளுக்கு விலங்கிட்டு வாழ்ந்த நாம் ரமழானில் பெற்ற பயனை ஏனைய காலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இத்தருணத்தில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம் உம்மத்திற்கு எதிரான சக்திகளை முறியடிக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக. நோன்பென்றும் பாராது காஸாவிலுள்ள முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதி, படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு பலஸ்தீன மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக துஆ செய்வோமாக.
எம் எல்லோரினதும் நற்கிரியைகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகருத்தருள்வானாக. ‘நிச்சயமாக நாம் நன்மை செய்பவர்களின் கூலியை வீணாக்குவதில்லை’ (18:30) தகப்பலல்லாஹு மின்னா வமின்கும், ஈத் முபாரக் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by

Leave a comment