பெருநாள் தொழுகை

1) நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)

2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா)

4) நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் சென்றார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உன்றுவிட்டுச் செல்வதும், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை தொழுதுவிட்டு உணவை உண்பதும் சுன்னத்தாகும். பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தாகும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். ஒவ்வொரு தக்பீர்களுக்குமிடையில் குறிப்பிட்டுச் சொல்லும் எந்த திக்ரும் இல்லை. அல்லாஹ்வை புகழக்கூடிய, பெருமைப்படுத்தக்கூடிய, துதிக்கக்கூடிய வார்த்தைகளை கூற வேண்டும். உதாரணமாக

سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ الله ُ، وَالله ُأَكْبَرُ

பெருநாள் தொழுகைக்கு அதானோ, இகாமத்தோ இல்லை. பெருநாள் தொழுகைக்கு முன், பின் சுன்னத்தும் இல்லை.

உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்கள்.
பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
(ஆதாரம்: புகாரி)

ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்கள்.

நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தவராவார்.

உம்மு அதிய்யா கூறினார்கள்

‘நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளிகளைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா? எனக் கேட்டேன். அதற்கு, ‘அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உம்மு அதிய்யா(ரலி) ‘(என்னிடம்) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா? என கேட்டேன். அதற்கு ‘என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்’ எனக் கூறினார்கள். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம்’ என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்’ என்பதையும் சேர்த்தே கூறுவார்.

‘கன்னிப் பெண்களும் மாதவிடாய் பெண்களும் (பெருநாள் அன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்’ என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்) எனக் கேட்டபோது, ‘மாதவிடாயுள்ள பெண் அரஃபாவிலும் மற்ற (மினா, முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?’ என உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்கள்.
(ஆதாரம்: புகாரி)

Published by

Leave a comment