டெல் அவிவ்: ஐ.நாவின் வேண்டுகோளிற்கிணங்க 24 மணிநேர யுத்த நிறுத்த கோரிக்கைக்கு இஸ்ரேல் சம்மதித்திருக்கின்றது. ஏற்கனவே 12 மணித்தியாலங்களாக இருந்த உடன்படிக்கை 16 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் 4 மணிநேர அதிகரிப்பை ஹஸாஸ் மறுத்திருந்தது.
இந்நிலையில், தற்பொழுது 24 மணிநேர யுத்தநிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டிருப்பதால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருப்பதாக ஐ.நா. கூறுகிறது.
இஸ்ரேலின் தாக்குதல் முடிவுக்கு வரவேண்டும், மற்றும் ரஃபா-எகிப்து எல்லை திறக்கப்பட்டு மக்கள் சென்றுவர அனுமதிக்கப்பட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டாலே தவிர, தாங்கள் யுத்த நிறுத்தத்திற்கு சம்மதமளிக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் ஹமாஸ் இருந்துவருகின்றது.
கடந்த 19 நாட்களாக இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 1033 மக்கள் ஷஹீதாக்கப்பட்டுள்ளதுடன், 5,900 பேர் படுகாயங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 42 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
தாக்குதல்களுக்கு அஞ்சி முகாம்களில் தங்கியிருந்த காஸா மக்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்குச் சென்று பார்க்கலாம் என்ற நோக்கில் பலர் இன்று தங்களது இடங்களுக்கு தற்காலிகமாகத் திரும்பியிருந்தனர். ஆனால் அங்கு அவர்களது வீடுகளைக் காணமுடியாததால் கதறியழுதனர், சோகம் தாங்க முடியாமல் கீழே விழுந்தனர்.
வீடுகளும் கடைத்தொகுதிகளும் இஸ்ரேலின் எரிகணைகளுக்கு கருகி, சிதைந்து சல்லடையாகிப்போயிருந்தன.
தற்பொழுது கடைப்பிடிக்கப்பட்டுவரும் 24 மணிநேர யுத்த நிறுத்தம் காஸா நேரப்படி ஞாயிறு நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது.
Published by


Leave a comment