‘அரசியலில் நாட்டமில்லை ஈடுபடப் போவதுமில்லை’

muraliகொழும்பு: அரசியலில் தனக்கு நாட்டமில்லை எனவும், ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு தாம் சேவையாற்றி வருவ தாகத் தெரிவித்துள்ளார்.

தம்மைத் தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே சர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டுகளின் போது அரசாங்கத்தின் சார்பில் குரல் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தவிர அரசாங்கத்துடன் வேறு எந்த கூட்டணியும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல கட்சிகளினதும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்ற போதிலும், எவரும் அரசியலில் ஈடுபடுமாறு அழைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Published by

Leave a comment