கோலாலம்பூர்: ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினர் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானத்தை ஏவுகணை மூலம் வீழ்த்திய அதே நேரத்தில் அதே பகுதியில் டெல்லியிலிருந்து லண்டன் போய்க் கொண்டிருந்த விர்ஜின் அட்லான்டிக் விமானமும் பறந்து கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.
200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்த விமானம் சென்று கொண்டிருந்தது. தாக்குதல் நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்து 140 மைல் தொலைவில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அதாவது கிழக்கு உக்ரைனின் ஜபோரிஷியா என்ற நகரின் மேல் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.
மேலும் அந்த சமயத்தில் உக்ரைன் வான் பகுதியில் கிட்டத்தட்ட 300 விமானங்கள் பறந்து கொண்டிருந்துள்ளன. அதில் 55 விமானங்கள் போர்ப் பகுதியில் பறந்துள்ளதாகவும் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 6 விமானங்கள் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்தவையாகும்.
மேலும் கடந்த ஒரு வாரமாகவே அதிக அளவிலான விமானங்கள் குறிப்பாக வேஜின் அட்லான்டிக் விமானங்கள் போர்ப் பகுதியில் பறந்துள்ளன. இதுவும் புரட்சிப் படையினர் உஷாராகி தாக்குதலுக்குத் திட்டமிட்டதற்குக் காரணமாக கூறப்படுகிறது. அடிக்கடி விமானங்கள் பறந்ததால் அவர்கள் உக்ரைன் ராணுவம் உளவு பார்ப்பதாக சந்தேகப்பட்டு தாக்குதலுக்குத் திட்டமிட்டிருக்கலாம் என்கிறார்கள்.
மேலும் புரட்சிப் படையினர் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் குறி வைத்துத் தாக்கவில்லை என்றும், அந்த சமயத்தில் எந்த விமானம் அந்தப் பகுதியில் வந்திருந்தாலும் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மலேசிய விமானம் பயன்படுத்திய வான் பாதையில் அன்றைய தினம் டொன்ஸ்டெக் நகர் மீது ஜெட் ஏர்வேஸ், தாய் ஏர்வேஸ், பாகிஸ்தான் சர்வதேச விமானம், கத்தார் ஏர்வேஸ், எதிஹாட், எமிரேட்ஸ், அவுஸ்திரேலியன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்களும் பயன்படுத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
அதேபோல மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த இன்னொரு விமானம் ஹீ்த்ரோவிலிருந்து கோலாலம்பூர் சென்றுள்ளது. அதுவும் கூட இந்த மார்க்கத்தில்தான் போனதாகவும் கூறப்படுகிறது.
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியை பயன்படுத்தி வந்த அத்தனை விமானங்களும் அவசரம் அவசரமாக வேறு பாதையில் திரும்பிச் சென்றுள்ளன
தற்போது உக்ரைன் வான்வெளி வழியாக எந்த விமானமும் செல்லவில்லை. ஒட்டுமொத்தமாக உக்ரைன் வான்வெளியை அனைத்து விமானங்களும் தவிர்த்து வருகின்றன.
மலேசிய விமானம் தாக்கப்படுவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸைச் சேர்ந்த ஒரு விமானம், அபாயகரமான டோன்ஸ்டெக் நகர் மீது பறந்துள்ளது.
இத்தனை விமானங்களும் பத்திரமாக தப்பிய நிலையில், எம்எச் 17 மட்டும் சிக்கிக் கொண்டு விட்டது பரிதாபம்தான்! இதுதான் இறைவனின் நாட்டம்!!
Published by



Leave a comment