யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் பிரதேசத்தில் இந்திய வீட்டுத்திட்டம் அமுலாக்கத்தில் பாரபட்சங்கள் மற்றும் இன ரீதியான பாகுபாடுகள் காணப்படுவதாக அறியக் கிடைக்கின்றது. உண்மையில் இது மன வேதனை அளிக்கின்ற விடயமாகும். 1990களில் யாழ்ப்பாணத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் 2009 யுத்த நிறைவின் பின்னர் யாழ்ப்பாணத்தை நோக்கி மீளக்குடியேற ஆரம்பித்தனர்.
ஆரம்பம் முதல் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை யாழ்ப்பாண பிரதேச செயலக உயரதிகாரி ஒருவர் ஓரவஞ்சனையோடு நோக்கினார் என்பது அறியப்பட்டிருந்தாலும் இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் ஜே86, ஜே87, ஜே88 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கின்ற பாரிய அநீதி, இன ரீதியான பாரபட்சம் என்பன யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் இருப்பை வேரறுக்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளாகவும், இனவாத அடிப்படையிலான நடவடிக்கைகளாகவுமே நோக்க வேண்டியிருக்கின்றது.
1990களில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது 3417 குடும்பங்கள் 2480 வீடுகளில் வசித்ததாக யாழ் மாவட்ட செயலகம், யாழ் மாநகர சபை தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி 2480 வீடுகளும் யுத்த காலத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதப்படுத்தப்பட்டுள்ளன. வெளியேற்றப்பட்ட 3417 குடும்பங்கள் தற்போது இரட்டிப்படைந்துள்ளமையால் 7000 குடும்பங்களளவில் மீள்குடியேற்றப்பட வேண்டும். 2009 யுத்தம் நிறைவின் பின்னர் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படுகின்றது. மீள்குடிறேற்றத்துக்காக 2252 குடும்பங்கள் யாழ் செயளகத்தில் பதிவுகளை மேற்கொடுள்ளன. இவர்களுள் பெரும்பாலனவர்கள் யுத்தம் காரணமாக வீடுகளை இழந்தோர், காணிகளற்றோர் ஆவர். 2009 முதல் இந்திய வீட்டுத் திட்டத்துக்காக முஸ்லிம் மக்கள் விண்ணப்பித்திருந்த போதிலும் அமுல்படுத்தப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் 1ம், 2ம், 3ம் கட்டங்களுள் ஒரு முஸ்லிம் குடும்பமேனும் உள்வாங்கப்படவில்லை.
முஸ்லிம் பிரதேசங்கள் அமைந்திருப்பது யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்டுள்ளமையால் வீட்டுத்திட்டங்களுக்காக விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மீள்குடியேற்றம், காணி உரித்து, மாநகர நகர விதிமுறைகள், நில அளவைத் திட்டம் என்பவற்றை உறுதிபடுத்தும் 10 விதமான ஆவணங்கள் சமர்ப்பித்தே விண்ணப்பங்களை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக மீள்குடியேற்றத்துக்காக பதிவு செய்த 2252 பேர்களில் 350 பேர்கள் மாத்திரமே விண்ணப்பங்களை வழங்க தகுதியுள்ளவர்களாக இருந்தனர்.
இந்திய வீட்டுத்திட்ட ஒழுங்கமைப்புக் குழு எனும் சமூக முயற்சியினூடாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 10,000 முதல் 15,000 வரை செலவு செய்து ஆவணங்களை பூரணப்படுத்தினர். 2013 ஏப்ரல் 28ஆம் திகதி கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கௌரவ ஆளுனர் ஜீ. ஏ சந்திரசிரி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு எஸ். அருமைநாயகம் ஆகியோர் முன்னிலையில் பொது மக்கள் ஒன்றுதிரண்டு பிரதேச செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் அவர்களிடம் விண்ணப்பங்களை கையளித்தார்கள். இதன் பிரதிகள் இந்தியத் தூதுவராலயத்துக்கும் வழங்கப்பட்டன. கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக இவ்விண்ணப்பங்கள் குறித்து எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அறியவில்லை.
இவைபோன்ற முக்கிய விடயங்களை அவதானிக்கின்ற போது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட வகையில் வீட்டுத்திட்டத்தினுள் உள்வாங்கப்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றது. சமூக நல்லிணக்கம் பற்றி அக்கரை கொண்டிருக்கின்ற தமிழ் முஸ்லிம் உறவை வலியுறுத்துகின்ற அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் மாவட்ட அமைச்சர் என்ற வகையில் தலையிடுவதோடு முஸ்லிம் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என நான் வேண்டிக் கொள்கின்றேன்.
ஆத்தோடு வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக விண்ணப்பித்த அனைவரும் மதிப்பீட்டு நடவடிக்கைக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் இப்பிரதேசத்தக்கென ஒதுக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்கள் இப்பிரதேச மக்களுக்கு முழுமையாக பயனளிக்கும் வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
Published by

Leave a comment