மும்பை: ஈராக் அரசாங்கத்துக்கு எதிராக போரிட்டுவரும் இஸிஸ் அமைப்பில் மேலும் பல இந்தியர்கள் சேர்ந்துள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்தி வருகின்றன. மகாராஷ்டிராவைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட மொத்தம் 18 இந்தியர்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் பல இளைஞர்கள் அதில் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இவர்களும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.தானே மாவட்டத்தைச் சேர்ந்த மும்ப்ரா மற்றும் பிவாண்டியைச் சேர்ந்த 15 பேர் தற்போது அதில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே பகுதியைச் சேர்ந்த ஆரிப் மஜீத், அமன் தன்டெல், சலீம் டங்கி, பஹத் ஷேக் ஆகியோர் ஏற்கனவே அதில் இணைந்துள்ளனர். இவர்கள் கர்பலாவுக்குச் செல்வதாகக்கூறி பின்னர் இஸிஸ் அமைப்பில் இணைந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டிருந்தன.
இதற்கிடையே மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில உள்ளூர் தொழிலதிபர்கள்தான் இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஈராக்குக்கு அனுப்பி வைப்பதாக பொலீஸார் கூறுகிறார்கள். இவர்கள்தான் இளைஞர்களுக்குப் பணமும் கொடுத்து அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கேரளா, உ.பி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஈராக் இஸிஸ் அமைப்பில் சேர விண்ணப்பித்திருப்பதாக ஒரு பரபரப்புத் தகவல் வெளிவந்திருப்பதால் இந்தியா மேலும் ஆடிப்போயிருக்கின்றது.
Published by


Leave a comment