கட்டார் விமான சேவையையும் முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் (?)
– எம்.ஐ.எம். இஸ்ஸத், டோஹா
டோஹா: இஸ்ரேலின் டெல்அவிவ், டுரா அரங்கில் பலஸ்தீனயச் சிறுவர்களின் விளையாட்டு முகாம் அமைந்திருக்கின்றது. இங்கு சர்வதேச விளையாட்டுக் கழகங்கள் வருடாந்தம் வந்து இச்சிறார்களை ஊக்கிவித்து, அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கும் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்கும் வந்து செல்வர்.
கடந்த வருடம் (2013) ஜூலை மாத இறுதியில் , இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் வீரர்களை இணைத்து ஸ்பெயினின் சிறந்த கழகங்களில் ஒன்றான பார்சிலோனா கழகத்துடன் வளைகுடா நட்புக்கான போட்டியொன்றை நடாத்த இஸ்ரேல் உதைப்பந்தாட்டச் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.
பார்ஸிலோனாவின் புகழ்பெற்ற வீரர்களான மெஸ்ஸி, நெய்மார், சவி, டானியல் அல்விஸ் உட்பட பல வீரர்களின் தலைமையில் இஸ்ரேலில் விளையாட்டு பயிற்சி முகாமை அமைத்து பலஸ்தீன் கழக வீரர்களுக்கும், இஸ்ரேல் கழக வீரர்களுக்கும் உதைப்பந்தாட்டப் பயிற்சிகளை வழங்க பார்ஸிலோனா கழகம் சம்மதித்திருந்தது.
இப்பயிற்சியின் பின்னர் ஜூலை மாதம் 31ம் திகதி, இஸ்ரேலின் தலைநகரில் குறித்த நட்புப் போட்டியை பிரமாண்டமான அளவில் நடாத்த இஸ்ரேல் விளையாட்டு அமைச்சும் ஏற்பாடுகளைச் செய்தது.
ஆனால் பலஸ்தீன் கழகம் இந்தப் போட்டியை நிராகரித்தது. தங்களது வீரர்கள் இஸ்ரேலுடன் இணைந்து ஒரு போதும் விளையாட மாட்டார்கள் என்றும், பார்ஸிலோனா எமது அபிமான கழகமாக இருந்தும், அரசியல் நோக்கத்துக்காக தாங்கள் ஒருபோதும் இஸ்ரேலுடன் இணைந்து பார்ஸிலோனாவுடன் விளையாடப் போவதில்லை எனவும் பலஸ்தீன் வீரர்கள் கூறியிருந்தனர்.
பார்ஸிலோனா கழக ஆடைக்கு (T-Shirt) தற்பொழுது ஆதரவு (Sponsor) வழங்கி வருபவர்கள் கட்டார் எயார்வேய்ஸ் நிறுவனமாகும். வருடத்துக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்திற்கு கட்டார் எயார்வேஸ் இந்த ஆதரவை வழங்குகிறது.
இந்த ஆடைக்கான ஒப்பந்தம் ஐரோப்பிய வரலாற்றில் மிகப்பெரிய தொகையாக அமைகிறது. ஏனெனில் இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்கான ஆடைக்கு 23 மில்லியன் டொலர்களே கூடிய ஒப்பந்தமாக இதற்கு முன்னர் இருந்தது.
இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் அழிக்கப்பட்ட பலஸ்தீன விளையாட்டுக் கழகத்தின் மைதானம்
பார்ஸிலோனா கழகம் இஸ்ரேலுக்குச் சென்று ஒருவருடம் மறைந்த பின்னர், திடீரென் உலகக்கிண்ணப் போட்டியின்போது, பார்ஸிலோனா வீரர்கள் சில நிறுவனங்களின் தேவைக்காக விமர்சிக்கப்பட்டனர். என்றாலும் மூக்குடைபட்ட இந்நிறுவனங்கள் சமகால பலஸ்தீன் விவகாரங்களை பார்ஸிலோனா -இஸ்ரேலுடன் சேர்த்து தங்களது தேவையைப் பூர்த்திசெய்ய வலை விரித்தனர்.
எனினும், முகநூலில் ஏவப்பட்ட பார்ஸிலோனா கழகத்துக்கு எதிரான பிரச்சாரம் வேகவில்லை. பின்னர் ஆர்ஜன்டீனாவை நோக்கி வீசப்பட்டதும், இதன்மூலம் எடிட்டிங் செய்யப்பட்ட பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டிருந்ததையும் நாம் அறிவோம்.
எனவே, இஸ்ரேலுக்கு விளையாடச் சென்ற பார்ஸிலோனா கழகத்தை எதிர்க்கும் முஸ்லிம்கள் கட்டார் எயார்வேய்ஸ்யையும் எதிர்த்தே ஆகவேண்டும்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக யார் யாரெல்லாம் செயற்படுகிறார்களோ அவர்களை எதிர்ப்பதில் முஸ்லிம்களில் பலர் தயாராக நிற்கின்றனர். எனவே இஸ்ரேல் ‘போய்கொட்’ தயாரிப்புக்களில் முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டியது கட்டார் எயார்வேய்ஸ் விமான சேவையும் ஒன்றாகும். பகிஷ்கரிப்பவர்கள் கட்டார் எயார்வேய்ஸை முஸ்லிம் உம்மாவுக்காக பகிஷ்கரிப்பார்களா அல்லது சந்தர்ப்பத்துக்காக தவிர்ப்பார்களா என்பதைப் பொருத்திருந்தே பார்க்கவேண்டும்.
Leave a comment