திருகோணமலை: ‘கிழக்கு மாகாணத்தில் கடந்த 3 தசாப்த காலமாக நிலவிய யுத்த சூழ்நிலையிலும் திருமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சமாதானம் உருவாதற்கும் இன ஒற்றுமைக்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதையிட்டு நான் கிழக்கு மாகாண மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன்’ என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை குறிப்பிட்டார்.
திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் 10வது வருட விழாவும், சிரேஷ்ட பத்திரிக்கையாளர்கள் கௌரவிப்பு விழாவும் அண்மையில் திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் தலைமையில் திருமலை உவர்மலை விவேகானந்த கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடைபெற்ற போது விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
‘கிழக்கு மாகாண தனியாக பிரிக்கப்பட்டு முதலாவது முறையாக கடந்த 2008ம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின் திருமலை நகரத்திற்கு அமைச்சர்களாக நாங்கள் வந்த போது மக்கள் அச்சம் அடைந்த நிலையில் தான் வாழ்ந்து வந்தனர்.அரசியல் வாதிகளான நாங்களும் அச்சம் அடைந்த நிலையிலே அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டோம். அன்றிலிருந்து இன்று வரை திருமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் அமைப்பினர் கிழக்கு மாகாணத்தின் தலைநகரான திருமலையிலிருந்து உண்மையான செய்திகளை நடுநிலையில் இருந்து யதார்த்தமாக வெளியிட்டு வந்தனர்’.
‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்கு நமது நாடே எதிர்பார்த்திருந்த வேளையில் கிழக்கு மாகாணத்தின் உண்மைத் தன்மைகளை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வெளியே கொண்டு வந்த திருமலை மாவட்ட ஊடகவியலாளர்களின் செயல்பாடுகளை நாம் பாராட்டுகின்றோம்’.
‘உலகில் மனிதர்களுக்கு ஒவ்வொரு விதமான பதவிகளை இறைவன் வழங்கியுள்ளான் இப்பதவிகள் ஊடாக நாம் வாழும் நாட்டினதும் நமது சமூகத்தினதும் நலனில் அக்கறை செலுத்த கடமை பட்டுள்ளோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கிழக்கு மாகாண சபை ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் வரலாற்று அபிவிருத்தி பணிகளை வெளியே கொண்டு வருவதுடன் இவ்வாறான அபிவிருத்தி பணிகளில் உள்ள குறைபாடுகளை தைரியமாக பத்திரிக்கையாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்’.
‘பத்திரிக்ககையாளர்களின் கோரிக்கைகளை செவிமடுத்து கிழக்கு மாகாண சபையின் பேச்சாளர் என்ற வகையில் பல நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகின்றேன். குறிப்பாக பத்திரிக்கையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்’.
‘இன்று நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலை இல்லாமல் செய்வதற்கு இனவாத அமைப்பின் முயற்சிகள் செய்து வருகின்றனர் குறிப்பாக மக்களை சமாதானத்துடன் வாழ்வதற்கு வழிகாட்டியாக செயல்பட வேண்டிய மதத் தலைவர்கள் சிலரின் நடவடிக்கைகளை பார்க்கும் போது நாம் எல்லோரும் கவலைப்பட வேண்டியுள்ளது. இவர்களின் நடவடிக்கைகளை நமது நாட்டில் பெரும்பான்மையினர் கண்டித்து வருவது எமக்கு ஆறுதலாக உள்ளது’.
‘இங்கு உரையாற்றிய மதகுரு ஒருவர் நமது நாட்டின் தேசியப் பிரச்சனைகளை தொடர்பாக சுட்டிக் காட்டினார் நமது நாட்டில் யுத்தம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அச்சம் நீங்கிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது ஆனால் இன்றும் அரசியல் தீர்வு தொடர்பான நடவடிக்கைகள் முன் எடுக்கப்படாமல் உள்ளது. எதிர்காலத்தில் இது தொடர்பான நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டு தீர்வுகள் கிடைக்க வேண்டும் இதற்காக நாம் எலலோரும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும்’.
‘கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரை கடந்த 3 தசாப்த கால யுத்தத்தில் மூவின மக்களும் வலிகளைச் சுமர்ந்தவர்கள். அந்த வலிகளை சுமர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் நாம் எல்லோரும் ஒன்றினைந்து சமாதான சக வாழ்வுக்காக முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்’.
‘திருமலை மாவட்ட ஊடகவியலாளர் அமைப்பின் இன ஒற்றுமைக்கான செயல்பாடுகளை ஏனையவர்களும் பின்பற்றி நடக்க வேண்டும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் திருமலை மாவட்ட ஊடகவியலாளர் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு என்றும் பக்க பலமாக இருந்து செயல்படுவேன்’ எனக் குறிப்பிட்டார்.
Published by


Leave a comment