இலங்கை டெஸ்ட் அணியில் 6 ஆண்டுகளின் பின் ஆரம்ப வீரர் உபுல் தரங்கவுக்கு வாய்ப்பு

tharangaகொழும்பு: ஆறு ஆண்டுகளின் பின்னர் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட அணியிலேயே அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

இதில் மத்திய வரிசை வீரர் கித்ருவன் விதானகேவும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதோடு சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸுக்கு இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்துடனான ஹெடிங்;லி டெஸ்ட் போட்டியை வெற்றி பெற காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பதோடு காயத்திற்கு உள்ளான சுரங்க லக்மாலும் அணிக்கு திரும்ப பெயரிடப்பட்டுள்ளார்.

இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்து வந்த 29 வயதான தரங்க ஒருநாள் அணியில் தனது நிரந்தர இடம் பறிபோன நிலையிலேயே டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் அண்மைக் காலத்தில் முதல் தர போட்டி மற்றும் இலங்கை ஏ அணியில் சிறப்பாக செயற்பட்டுள்ளார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் இலங்கை ஏ அணியில் தலைவராக செயற்பட்ட தரங்க இரண்டு சதங்களுடன் 59 ஓட்ட சராசரியை பெற்றார். அதேபோன்று பிரிமியர் லீக் தொடரில் ஓட்ட சராசரியாக 43.59 ஐ பெற்றார். தரங்க கடைசியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடியது 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகவாகும்.

tharanga

12 மாதங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியே அவர் கடைசியாக விளையாடிய சர்வதேச ஆட்டமாகும். தென்னாபிரிக்காவுடனான டெஸ்டில் தரங்கவுடன் கவ்சல் சில்வா ஆரம்ப வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலியில் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.சி அரங்கில் ஜுலை 24 ஆம் திகதி ஆரம்பமாகும்.

அணி விபரம்: அஞ்சலோ மத்தியூஸ் (தலைவர்), லஹிரு திரிமான்ன (உப தலைவர்), உபுல் தரங்க, கவ்சல் சில்வா, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, தினேஷ் சந்திமால் (வி.கா.), கித்ருவன் விதானகே, ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா, அஜந்த மெண்டிஸ், சுரங்க லக்மால், ‘மிந்த எரங்க, தம்மிக்க பிரசாத், சானக்க வெலகெதர.

Published by

Leave a comment