நான்காவது தடவையாக உலகச் சம்பியனானது ஜேர்மனி! ஆர்ஜன்டீனா பரிதாபத் தோல்வி!
– MJ
றியோ: இருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியின் இறுதிவேளையில் ஆர்ஜன்டீனாவை 1:0 எனும் கோல் அடிப்படையில் வெற்றிபெற்று ஜேர்மனி 4வது தடவையாக உலகச் சம்பியனாக முடிசூடிக்கொண்டது.
போட்டியின் ஆரம்ப 90 நிமிடங்கள் கோல்கள் எதுவுமின்றி சமநிலையில் நிறைவடைந்தது. மேலதிக நேரத்தின் இரண்டாவது பகுதியில் ஜேர்மனி வீரர் கோட்ஸ் வெற்றிக் கோலைப் போட்டு ஜேர்மனியை உலகச் சம்பியனாக உலகத்துக்கு மீண்டும் எடுத்துக் காட்டினார்.
போட்டியின் ஆரம்பத்தில் இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தையே விளையாடி வந்தன. இதன் போது ஆர்ஜன்டீனா கோல் போடுவதற்கான அறிய சந்தர்ப்பங்கள் இருந்தும், வீரர்களால் தவறவிடப்பட்டன.
உலகின் பல இரசிகர்கள் பிரசில்தான் உலகக் கிண்ணத்தை வெல்லும் என எதிர்வுகூறியிருந்தாலும், எதிர்பாராதவிதமாக பிரேசில் தோல்வியைத் தழுவியிருந்தது. ஆர்ஜன்டீனாவை ஆரம்பத்தில் எவரும் எதிர்பார்க்கவில்லை. எனினும் ஆர்ஜன்டீனாவின் இறுதிப்போட்டி முன்னேற்றம் பலரை சிந்திக்க வைத்தது.
வெற்றி கோல் நாயகன் கோர்ட்ஸ்
இவ்வாறிருக்க, உலகக் கிண்ணத்தின் ஆரம்பத்திலேயே ‘ஜேர்மனிதான் உலகக் கிண்ணத்தை வெற்றிபெரும்’ என இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி எதிர்வு கூறியிருந்தார்.
ஆர்ஜன்டீனாவின் போராட்டம் ஜேர்மனியை நிலைகுலைய வைத்தாலும், தாங்கள் வல்லவர்களே என்பதை இறுதிவேளையில் நிரூபித்திருக்கின்றது ஜேர்மனி.
1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஜேர்மனி உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்றிருக்கிறது. 2002ம் ஆண்டு இறுதிப்போட்டியில் பிரேசிடம் தோல்வியடைந்திருந்தது ஜேர்மனி.
இன்றைய வெற்றியுடன் உலகக் கிண்ண வரலாற்றில் 4வது தடவையாக ஜேர்மனி வெற்றிபெற்று, 5 தடவைகள் வெற்றிபெற்ற பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் அதாவது இரண்டாவது இடத்தில் ஜேர்மனி இருக்கின்றது.
தங்க கையுறை (Golden Glove) விருது ஜேர்மனி கோல் காப்பாளர் நெயுருக்கும், தங்கப் பந்து (Golden Ball) விருது ஆர்ஜன்டீனா தலைவர் லியனல் மெஸ்ஸிக்கும் கிடைத்தது.
இவ்வாறான உலகக் கிண்ணப் போட்டியை மீண்டும் காண்பதற்கு இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும். (இன்ஷா அல்லாஹ்).
Leave a comment