காத்தான்குடியைச் சூழ்ந்த கருமேகங்கள்… (2)

kurukkalmadam[1]– MJ

…. அன்று விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில வாகனங்களே ஊரில் இருந்தன. இதுவரை காலமும் பொலன்னறுவை ஊடாக கொழும்புக்குச் சென்றுவந்த போக்குவரத்து, புனானை-வெலிகந்தைப் பகுதியில் ஏற்பட்டிருந்த இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல்களால் தடைப்பட்டது.

இதன் காரணமாக காத்தான்குடியிலிருந்து ஹஜ்ஜிற்கு சென்ற யாத்திரிகர்களின் வாகனங்கள் இருதரப்பினர்களது செல் வீச்சுக்களுக்குள் அகப்பட்டு, ஹஜ் சென்ற பயணம் மீண்டும் காத்தான்குடிக்குத் திருப்பப்பட்டது.

அம்பாறை மாவட்டம் பெரும்பாலான முஸ்லிம் பிரதேசங்களை நில ரீதியாக இணைத்திருந்ததால், இலங்கை இராணுவம் அம்பாறை மாவட்டத்தை இலகுவில் கைப்பற்றி, ஓரளவு கட்டுப்பாபட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. இராணுவத்தினர் கல்முனையைக் கைப்பற்றியதுடன் தங்களது முன்னேற்றத்தை நிறுத்திக் கொண்டனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை வரைக்கும் உள்ள பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இந்தியப் படையினரால் கூட கண்டுபிடிக்க முடியாதிருந்த பொத்துவில்-கஞ்சிக்குடிச்சாறு விடுதலைப் புலிகளின் பாரிய பதுங்கு முகாமை இலங்கை இராணுவம் டென்சில் கொப்பேகொடுவ தலைமையில் கைப்பற்றியது. இது அன்று இலங்கையில் பிரபல்யமான செய்தியாகவும் இருந்ததுடன், இதன்காரணமாக கொப்பேகடுவ பதவியுயர்வும் பெற்றார்.

அம்பாறை மாவட்டத்திலிருந்து விரட்டப்பட்ட புலிகள் பலர் திசை தெரியாது ஓடி மறைந்தனர். இன்னும் சிலர் களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்கு பின்வாங்கினர்.

நிலமை இவ்வாறு இருக்கையில், கல்முனை ஊடாக போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. காத்தான்குடியிலிருந்தும் ஹஜ் குழுவினர் மீண்டும் தங்களது பயணத்தை கல்முனை ஊடாக கொழும்புக்குச் சென்றனர். வாகனங்கள் கொழும்பை நோக்கிச் செல்வதால் வியாபாரிகள், நோயாளிகள், வெளிநாடுகளிலிருந்து விடுமுறை வந்தவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது பயணத்தை கல்முனை ஊடாக தொடர்ந்தனர்.

புலிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், பிரதான வீதியில் ஓரிரண்டு உணவகங்களும், ஓரிரு கடைகளும் இத்தகைய போக்குவரத்தால் மீண்டும் இயங்க ஆரம்பித்தன. மண்ணெண்ணெய், பால்மா, அரிசி, பெற்றோல் போன்ற பொருட்கள் பல மடங்கு அதிகரிப்பில் விற்கப்பட்டு வந்த நேரம்.

12.07.1990. பகற்பொழுது. இருபக்கமும் புழுதிகலந்த காத்தான்குடி பிரதான வீதி, காணல் நீரால் காட்சி தருகிறது. மக்கள் சந்திக்குச் சந்தி கூடி நிற்கின்றனர். ஓரிரு வாகனங்கள் வருகின்றன. செல்கின்றன. மாலை ஐந்து மணியளவில் காத்தான்குடியை வந்து சேர்ந்தவர்கள், தங்களுக்கு முன்னர் வந்தவர்களை விசாரிக்க முற்படுகையில் எழுந்த விடயங்கள் மக்களிடையே சந்தேகங்களைத் தோற்றுவித்தன.

கல்முனை நகரில் ளுஹர் தொழுதுவிட்டு, தேத்தன்னி குடித்து அல்லது சாப்பிட்டுவிட்டு காத்தான்குடிக்குச் செல்வதற்காக ஒன்றாகக் காத்திருந்த எமது சகோதர, சகோதரிகள், வரும் வாகனத்தில் இடவசதிக்கேற்ப முன்னதாக, பின்னதாக வசதிக்கேற்ப ஏறிக்கொண்டனர்.

அம்பலாந்துரைச் சந்தி, குருக்கல்மடம் தழிழ் பிரதேசத்தில் நிலைகொண்டிருந்தனர் தமிழீழ விடுதலைப் புலிகள். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்தான் காத்தான்குடி மக்களின் சொத்துக்களை சூரiயாடிச் சென்றிருந்தனர். எனிதும் அவர்களது தாகம் தீரவில்லை. முஸ்லிம்களின் இரத்தத்தை ருசிக்க நாக்கைத் தொங்கவிட்டு காடுகளுக்குள் காத்திருந்தனர் புலிகள்.

வாகனங்கள் ஒவ்வொன்றாக கல்முனையிலிருந்து அவ்வப்போது வந்துகொண்டிருந்தன. வாகனங்களை நிறுத்தி, காத்தான்குடி மக்களை அடையாளம் கண்ட பின்னர், மக்களையும், வாகனங்களிலிருக்கும் பொருட்களையும் வாகனத்துடன் குருக்கள்மடம் கடற்பிரதேசத்துக்கு கடத்திச் சென்றனர்.

kurukkalmadam[1]

ஒரு வாகனத்தை செல்வதற்கு அனுமதித்துவிட்டு, மற்றொரு வாகனத்தை வழிமறித்து கடத்தும் தந்திரத்தில் புலிகள் கச்சிதமாக ஈடுபட்டனர். இதனால் கடத்தப்பட்டவர்களைத் தவிர, வேறு எவருக்கும் புலிகள் கடத்துகிறார்கள் என்ற விடயம் குறிப்பிட்ட சிலநேரங்கள் தெரியாமல் இருந்தது.

இவ்வாறு புலிகள் வழிமறிக்காத வாகனங்களில் தப்பி வந்தவர்களே, தங்களுக்கு முன்னர் வந்தவர்கள் கடத்தப்பட்டிருப்பதைத் தெரிவித்தனர். மேலும், தங்களது வாகனங்களை புலிகள் சில நிமிடங்கள் வழிமறித்து வைத்திருந்ததாகவும், காட்டுக்குள் இருந்துவந்த கையசைவு சமிக்கையில் தாங்கள் விடுவிக்கப்பட்டு வந்து சேர்ந்திருப்பதாகவும் இன்னும் சிலர் தெரிவித்தனர்.

தற்பொழுது காத்தான்குடி மக்கள் புலிகளால் கடத்தப்பட்டிருப்பது ஊர்ஜிதமாகிறது. ஏற்கனவே நொந்துபோய் இருக்கும் உள்ளங்கள் அழ ஆரம்பிக்கின்றன. இளைஞர் ஆத்திரமடைகின்றனர். யார் யார் வந்தனர். யார் கடத்தப்பட்டனர் போன்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

நண்பகலிலிருந்து மாலை 4 மணிவரைக்கும் புலிகள் ஆட்கடத்தல்களில் ஈடுபட்டனர். கொழும்பிலிருந்து ஊருக்குத் திரும்பியவர்கள், வெளிமாவட்டங்களிலிருந்து ஊருக்கு வந்தவர்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இவ்வாறு புலிகள் எமது உறவுகளைக் கடத்திச் சென்றனர்.

இருள்சூழ்ந்த அன்றைய மாலைப்பொழுது பதட்டத்துடன் ஆரம்பிக்கிறது. பிரதான வீதியில் இளைஞர்கள் டயர்களை எரித்து காவல் காக்கின்றனர். பள்ளிவாயல்களை நோக்கி மக்கள் அலை அலையாய் செல்கின்றனர். பெண்கள் அழுகின்றனர். இளைஞர்கள் துடிக்கின்றனர். கடத்தப்பட்ட வீடுகளில் அழுகைகள். யார் யாருக்கு ஆறுதல் கூறுவது என்ற நிர்க்கதியில் ஊர் அன்று தூங்காமல் அழுகிறது.

மறுநாள், தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்ட எமது சகோதரர்களின் புகைப்படங்களை ஓரளவுக்குத் திரட்டி, சிரமத்துக்கு மத்தியில் போட்டோ பிரதி எடுத்து, சில துண்டுப்பிரசுரங்களை பிரதான வீதிச் சந்திகளில் எமது இளைஞர்கள் மக்களின் பார்வைக்கான ஒட்டி வைத்தனர். பார்த்தவர்கள் திகைத்து நின்றனர். கண்களும் குளமாகின.

பிரதான வீதி முழுவதும் வெள்ளைப் பொலித்தீன்கள் பதாதைகளாக் தொங்கவிடப்பட்டு, துக்கத்தை இளைஞர்கள் அடையாளப்படுத்தினர். பதாதைகளில் நீங்கள் சுஹதாக்கள் எனும் வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன.

ஹர்த்தால் போடுவதற்கு இயல்பான நிலை அன்றிருக்கவில்லை. ஏனெனில் புலிகள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் பிரதான வீதியில் வர்த்தக நடடிவக்கைகள் பெரும்பாலும் இயங்கவில்லை. இதனால் தினமும் ஹர்த்தால் போலவே ஊர் காட்சியளித்தது. என்றாலும் சோகத்தால் பல நாட்கள் கடைகள் இழுத்து மூடப்பட்டிருந்தன.

புலிகள் அன்றைய தினம் எமது எத்தனை சகோதரர்களை கடத்தி படுகொலை செய்தார்கள் என்று இதுவரை உத்தியோகபூர்வமான கணக்கெடுப்பு இல்லை. இருந்தும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் மாத்திம் சுமார் 70 பேர்வரை இருக்கும் என அன்றைய கணக்கெடுப்பில் அறியப்பட்டது. ஆனாலும் 165 பேர்கள்வரை புலிகள் அன்று கடத்திக் கொலை செய்தார்கள் என்ற பொதுவான கணக்கெடுப்பும் ஆவனத்தில் இருக்கிறது.

புலிகளால் கடத்தப்பட்ட எமது சகோதரர்கள் குருக்கல்மடம் கடற்கரைப் பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு, பெருங்குழி ஒன்றில் புதைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் கொல்லப்படும் போது எழுப்பிய அல்லாஹூ அக்கபர் எனும் சத்தங்களை தாங்கள் கேட்டதாகவும் அப்பிரதேச தமிழ் மக்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.

சோகத்தால் நனைகிறது ஊர். மீண்டும் விழிப்புக்குழுக்களின் தேவை உணரப்படுகிறது. மக்கள் உளவியல் ரீதியில் பல பாதிப்புக்களைச் சந்தித்தனர். வறுமையின் காரணமாக, தங்களது குழந்தைகளின் தேவைகளுக்காக தங்களது நகைகளை தாய்மார்கள் விற்று காசாக்கினர். தங்களுக்கென்றிருந்த காணிகளையும் விற்றனர்.

இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய அன்றைய வசதிபடைத்தவர்களுள் சிலர் இப்பொருட்களை குறைந்த விலைக்குப் பெற்று பின்னாட்களில் அதிக இலாபங்களைத் தேடிக்கொண்ட வரலாறும் உண்டு.

12.07.1990. இன்றுடன் 24 வருடங்கள். அன்று கடத்தப்பட்ட எமது உயிர்களும், வாகனங்களும் பல கோடி சொத்துக்களும் இன்றும் எங்களைவிட்டு அகழாதவை. பலஸ்தீன் மக்களைப் போல் காத்தான்குடி மக்களும் கடந்த காலயுத்தத்தால் பல அநீதிகளை விடுதலைப் புலிகளால் சந்தித்திருக்கிறது. அந்த சுஹதாக்களின் உறங்குமிடத்தை தற்பொழுது பொலிஸார் அடையாளப்படுத்தி இருக்கின்றனர். இன்ஷா அல்லாஹ் அவர்களின் ஜனாஸாக்களையாவது காணும் சந்தர்ப்பம் எமக்கு கிடைக்க வேண்டும்.

Published by

Leave a comment