காத்தான்குடி: இன்றைய பலஸ்தீனப் பூமி போலதான் 1990 காலப்பகுதியில் அன்றைய காத்தான்குடி இருந்தது. 10 ஜூன், 1990, அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமாதான உடன்படிக்கையை இரண்டாவது தடவையாக விலக்கிக் கொள்ளும் முகமாக விடுதலைப் புலிகளால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது.
இந்திய அமைதிகாக்கும் படையினர் வட-கிழக்கை விட்டும் முழுவதுமாக சென்றதன் பின்னர் 1990 ஆரம்பத்திலிருந்து சமாதான உடன்படிக்கை தொடர்ந்தும் இருந்து வந்ததால், இலங்கை இராணுவம் வட-கிழக்கில் குறிப்பிட்ட இடங்களில் மாத்தரிமே இருந்து வந்தது.
கல்லடி இராணுவ முகாம் மற்றும் வளையிரவு விமானப்படை முகாம் ஆகிய இரு இடங்களிலும் மாத்திரமே மட்டக்களப்பில் அன்று அரசாங்கப்படையினர் நிலை கொண்டிருந்தனர்.
விடுதலைப் புலிகள் சமாதான உடன்படிக்கையை முறித்துக்கொண்டதன் பின்னர், வடகிழக்கின் பெரும்பாலான பிரதேசங்கள் விடுதலைப் புலிகளின் முழுக்கட்டுப்பாட்டிலேயே இருந்தன.
மின்மாற்றிகளை வெடிவைத்து தகர்த்தனர். மட்டு-கொழும்பு புகையிரத சேவையையும், மற்றும் இரவு நேர அரசாங்க, தனியார் வாகனங்களின் போக்குவரத்துக்களையும் விடுதலைப் புலிகள் நிறுத்தினர். மின்சாரமில்லாததால் இரவுப்பொழுதில் பல சிரமங்களை மக்கள் எதிர்நோக்கினர்.
சுட்டெரிக்கும் வெயில், புழுதி கலந்த கச்சான் காற்று, இருள் சூழ்ந்த இரவுப் பொழுதுகள் இவ்வாறே நாட்கள் கழிந்தன. ஜூன் மாதம் 1990. இருள் சூழ்;ந்த இரவுப் பொழுதில் மக்கள் இஷாத் தொழுகைக்காக பள்ளிவாயலுக்குச் செல்கின்றனர்.
இன்றுபோல் இல்லாவிட்டாலும், ஆரையம்பதி எல்லை தொடக்கம் கபுறடிச் சந்திவரைக்கும் ஆங்காங்கே பல கடைகள் அன்று இருந்தன. சமாதான சூழலைக் கருத்திற்கொண்டு புதிய கடைகள் கட்டப்பட்டு, புதிய வர்த்தகங்களும் ஆரம்பித்து அன்றைய நாட்களிலும் ஓர் சிறப்பாக காட்சியளித்தது எமது பிரதான வீதி.
இஷாத் தொழுகைக்குச் சென்றவர்கள் சிலரை பிரதான வீதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகள் தடுத்தனர். சில இடங்களில் விரைவாகத் தொழுதுவிட்டு வீடு போகும்படி பணித்தனர். ஏதோ ஓர் அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என்பதை பிரதான வீதியில் அமைந்துள்ள பள்ளிவாயல்களுக்குச் சென்றவர்களுக்கு புரிந்தது.
பிரதான வீதி எங்கிலும் நூற்றுக் கணக்கான புலிகள் வாகனங்களுடனும், ஆயதங்களுடனும் நிலை கொண்டிருந்தனர். ஏதாவது ‘ரவுண்டப் நடக்கப் போகுதாக்கும்’ என்பதாகவே பலரும் கருதினர். ஏனெனில் இதற்கு முன்னரும் பல தடவைகள் விடுதலைப் புலிகள் சுற்றிவளைப்பை மேற்கொண்டு, எமது முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து கொண்டுபோயிருந்தனர்.
பிரதான வீதியில் அன்று இரும்புத் தைக்கா, ஸெயின் மௌலான தைக்கா மற்றும் கபுறடிப் பள்ளி ஆகிய 3 பள்ளிவாயல்களே இருந்தன. இப்பள்ளிவாயல்களில் தொழுகைக்குச் சென்றுவந்தவர்கள், உள்ளுர் பள்ளிவாயல்களில் தொழுது முடிந்து கூடிக் கதைத்துக் கொண்டிருந்தவர்களிடம் விடயத்தை கூறினர். இன்று போல் அலைபேசி வசதிகள் இருக்க வில்லை. தொலைபேசி தொடர்பையும் விடுதலைப் புலிகள் துண்டித்திருந்தனர்.
ஏதோ ஓர் அசம்பாவிதம் நடைபெற இருப்பதை உணர்ந்த மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவுகளையும் தாளிட்டுக் கொண்டனர்.இருள் சூழ்ந்த நள்ளிரவு. பிததான வீதியின் இருமருகிலும் இருந்த கடைகளின் கதவுகள் விடுதலைப் புலிகளால் உடைக்கப்படுகிறது. பிரதான வீதியில் வெளிச்சத்தை ஏற்படுத்த டயர்களைப் பற்றவைத்திருந்தனர். வாகனங்களின் வெளிச்சத்தின் உதவியுடன் கொல்லையடிக்கப்பட்ட அத்தனை பொருட்களும், மட்டு வாவிக்கு அப்பால் துரிதகதியில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.
இதன் பின்னர் காத்தான்குடி 5ம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் சந்தைத் தொகுதிக் கடைகள் முழுவதும் சூரையாடப்பட்டன. அதுமாத்திரமன்றி பிரதான வீதியை அண்மித்திருந்த உள்ளுர் கடைகளும் புலிகளால் கொல்லையடிக்கப்பட்டன.நள்ளிரவிலிருந்து அதிகாலை 3 மணிவரைக்கும் காத்தான்குடி வர்த்தகர்களின் அத்தனை சொத்துக்களும், கடைகளில் வைத்திருந்த பணமும் விடுதலைப் புலிகளால் கொல்லையடிக்கப்பட்டிருந்தன.
இவ்விடங்களில் கொல்லையடிக்கப்பட்ட சத்தங்கள் அயலவர்களுக்குக் கேட்டன. ஆயுதமேந்திய புலிகளைத் தட்டிக் கேட்க யாரும் முன்வரவில்லை அன்று.சுப்ஹூத் தொழுகைக்கான அதான் ஒலிக்கிறது. அச்சத்தால் உறைந்திருந்த மக்கள் பள்ளியை நோக்கி விரைகிறார்கள். வாழ்நாளில் ஃபஜ்ர் தொழுகை தொழாதவர்களும் அன்று பள்ளியில் நிறைந்திருந்தனர்.
மக்கள் பிரதான வீதியை நோக்கிப் படையெடுக்கின்றனர். இன்னும் சிலர் ஐந்தாம் குறிச்சி மார்க்கட் சதுக்கத்திற்கு விரைகின்றனர். வரலாற்றில் கண்டிராத காட்சிகளை கண்ட மக்கள் கதறியழுதனர். வியாபாரிகள் சிலர் மயங்கி விழுந்தனர். கொல்லையடித்து செல்லப்பட்ட மாவு, சீனி, கடலை, பயறு போன்ற உணவுப் பண்டங்களின் எச்சங்களும், பிடவைகள், சட்டி, பானைகள், பிளாஸ்டிக் பொருட்கள், இன்னும் இதரப் பொருட்களின் எச்சங்களும் வீதிகளில் மக்களின் கால்களுக்குள் அலைமோதின.
அன்று எத்தனை கடைகள் இருந்தன. எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன என்ற தகவல்களை அன்றிருந்தோர் உத்தியோகபூர்வமாக திரட்டவில்லை. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லையடிக்கப்பட்ட காத்தான்குடி வர்த்தகர்களின் சொத்துக்களின் மதிப்பு இன்றுவரை எவ்வளவு என்று கூறமுடியாமல் இருக்கின்றது.
இச்சம்பவத்தை அடுத்து, ஏற்கனவே இருளில் இருந்த காத்தான்குடிக்குள் மீண்டும் இருள் சூழ்ந்து கொள்கிறது. மக்களிடம் பணம் இல்லை. போக்குவரத்தில்லாமையால் உணவுப் பொருட்கள் இல்லை. கையிலிருந்த உணவுப் பொருட்களையும் விடுதலைப் புலிகள் சூரையாடிச் சென்றுவிட்டனர்.
பாடசாலைகள் சீராக இடம்பெறவில்லை. தேத்தன்னி குடிப்பதற்கு சீனி இல்லை. விளக்கு எரிப்பதற்கு மண்ணெண்ணெய் இல்லை. குழந்தைகளுக்கு பால்மா இல்லை. பசியால் அழும் சிறார்களுக்குக் கொடுக்க பிஸ்கூட இல்லை. ஒன்றும் விடாமல் அத்தனை பொருட்களையும் விடுதலைப் புலிகள் கொல்லையடித்திருந்தனர். எப்படியான சோதனையான காலம் என்பதை இன்றைய சமூகம் சிந்திக்க வேண்டும்.
ஜூலை மாதம் ஆரம்பிக்கிறது. இன்று போல் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டி காலமது. 1990 இத்தாலியில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளை இலங்கை ரூபவாஹினி நேரடி ஒளிபரப்புச் செய்து வந்தது. நள்ளிரவில் ஆரம்பமாகும் போட்டி அதிகாலையில் நிறைவுக்கு வரும்.
மின்சாரமில்லாததால் ஜெனரேட்டர்கள் வைத்திருக்கும் சில வீடுகளில் ஊரே திரண்டு இப்போட்டிகளைப் பார்த்துவிட்டு, ஃபஜ்ர் தொழுகையையும் தொழுதுவிட்டு, பகல் முழுவதும் தூங்கி எழும் ஓர் வாழ்க்கையே அன்றைய ஜூன்-ஜூலை மாதம் இருந்தது.
தொழில் இல்லை. கறிவாங்க பணமில்லை. போக்குவரத்தில்லை. பள்ளிவாயல்கள் ஐந்து நேரமும் நிறைந்து காணப்படும். நோன்பு காலங்களில் ளுஹர் தொழுகைக்குப் பின்னர் உறங்குவது போன்று பள்ளிவாயல்களில் மக்கள் உறங்குவர்.இப்படியே மக்களின் இயல்பு வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இக்கொல்லைச் சம்பவத்தையடுத்து, தமிழ் மக்கள் வராததால் கட்டுமானப்பணி இடை நிறுத்தப்பட்டிருந்தது. தபால் சேவை ஸ்தம்பிதமானது. சலூன் கடைகள் மூடப்பட்டிருந்தன. குப்பை மெசினும், துப்பரவாளர்களும் இல்லாததால் ஊர் நாறிப்போய் கிடந்தது.
இதன் விளைவு, ஒவ்வொரு பகுதி இளைஞர்களும் முன்வந்து தங்களது பிரதேசங்களை சிரமதானம் செய்து, குப்பை கூலங்களை எரித்து செழிப்பை ஏற்படுத்தினர். கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பலர் கற்றுக் கொண்டு செயற்பட்டனர். முடி வெட்டும் ஆற்றலுள்ளவர்கள் சலூன் கடைகளைத் திறந்து முடிவெட்ட பலகினர். இதன் விளைவு புதிய வடிவில் பல முகங்கள் அன்று ஊரில் காணப்பட்டது.
யுத்த நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் மீறி வட கிழக்கை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால், மக்களையும் நிலத்தையும் மீட்க அரசாங்கம் தயாரானது. கிழக்கைக் கைப்பற்ற பொலன்னறுவை வந்து சேர்ந்த படையினர் வாழைச்சேனை மற்றும் மஹியங்களை ஊடாக அம்பாறை ஆகிய இருவழியாகப் பிரிந்து விடுதலைப் புலிகளுடன் போராடி கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்ற முன்னேறி வந்த நேரம் அது.
‘ஆமி வாழைச்சேனைக்கு வந்துவிட்டனர், ஏறாவூக்கு வந்துவிட்டனர்’ என்று வதந்திகள் பரவின. மக்கள் வானொலிப் பெட்டிக்கு அருகில் காதை வைத்து ‘ஆல் இந்திய ரேடியோ’, இலங்கை வானொலிகளின் செய்திகளை தவறாமல் கேட்டு வந்தனர். எப்படியும் இன்று அல்லது நாளை மட்டக்களப்புக்கு ஆமி வந்திடும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்தனர்.
விடுதலைப் புலிகள் கொல்லையடித்துச் சென்றதன் பின்னர் ஊருக்குள் அச்சம் நிலவியது. விடுதலைப் புலிகள் மீண்டும் எந்நேரத்திலும் வரலாம், எதுவும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் அன்று நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர்.
இதனால் இரவில் மக்கள் விழித்திருந்து ஊரைக் காக்கும் முகமாக பள்ளிவாயல் ரீதியாக விழிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. மஹல்லா தோரும் பணம் சேகரித்து, டயர்களை எரித்து, கஞ்சி காய்ச்சி இரவுப் பொழுதை தூங்காத விழிப்புப் பொழுதாக்கும் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மக்களின் பட்டணி, தொடர்ந்தும் தாங்க முடியாத பஞ்சம் இதனால் எமது வர்த்தகர்கள் சிலர் முனவந்து தங்களிடம் இருக்கும் பணத்தை கையிலெடுத்துக் கொண்டு எவ்வாறேனும் காத்தான்குடிக்கு உணவுப் பொருட்களைக் கொண்டுவருவதற்காகத் தயாராகின்றனர்..
(இன்ஷா அல்லாஹ் தொடரும்).
– படங்கள் முகநூல் நட்பு
Published by


![41082979[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/410829791.jpg?w=609&h=424)
Leave a comment